லித்தியம் இருப்பு ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிப்பு: மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா வளர உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செரிலன் மொல்லன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதில் முக்கியமான தனிமம் லித்தியம். இது மிகவும் அரிதானதும்கூட. இதன் இருப்பு ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாக இந்தியா தனது முதல் குறிப்பிடத்தக்க லித்தியம் கண்டுபிடிப்பை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 5.9 மெட்ரிக் டன் லித்தியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமையன்று இந்திய அரசு தெரிவித்தது.
லித்தியம் இறக்குமதிக்காக இந்தியா இதுவரை ஆஸ்திரேலியாவையும் அர்ஜென்டினாவையும் நம்பியிருந்தது.
ரீச்சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளில் லித்தியம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இது ஸ்மார்ட்போன், மடிக்கணினிகள், மின்சார வாகனங்கள் போன்ற பலவற்றுக்கு ஆற்றல் வழங்குகிறது.
புவி வெப்பமடைதலைச் சமாளிக்க கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030-க்குள் தனியார் மின்சார கார்களின் எண்ணிக்கையை 30% வரை அதிகரிக்க வேண்டுமென்ற இந்திய அரசின் உந்துதலுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி மாவட்டத்தில் அமைந்திருக்கு சலால்-ஹைமானா என்ற பகுதியில் லித்தியம் இருப்புகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில், கர்நாடகாவில் லித்தியத்தின் மிகச் சிறிய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதற்கு முன்னதாக, புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அரிய உலோகங்களின் விநியோகத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதற்கான இருப்புகளைத் தேடுவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
சுரங்கத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் மின்ட் நாளிதழிடம், இந்த இலக்கை அடைய இந்தியா "தனது ஆய்வு நடவடிக்கைகளை மாற்றியமைக்கிறது," என்று கூறினார்.
உலகெங்கிலும் லித்தியம் உள்ளிட்ட அரிய உலோகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில், நாடுகள் காலநிலை மாற்றத்தின் வேகத்தை மட்டுப்படுத்த பசுமைசார் தீர்வுகளைப் பின்பற்றுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
2023ஆம் ஆண்டில், பொலிவியாவின் பரந்த லித்தியம் இருப்புகளை உருவாக்க சீனா ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அங்கு உலகிலேயே மிகப்பெரிய அளவில், 21 மெட்ரிக் டன் லித்தியம் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, 2050க்குள் உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு முக்கியமான கனிமங்களின் சுரங்கம் 500% அதிகரிக்க வேண்டும்.
இருப்பினும், லித்தியம் சுரங்க செயல்முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜென்டினாவில் காணப்படும் கடினமான பாறைகள், நிலத்தடி உவர்நீர்த்தேக்கங்களில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது.
அது பிரித்தெடுக்கப்பட்ட பிறகு, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி வறுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கும் இந்தச் செயல்முறைக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதோடு, அதிக அளவு கரிம வாயுவை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.
லித்தியம் பிரித்தெடுக்கப்படும் நிலத்தடி நீர்த்தேக்கங்களில் பலவும் அர்ஜென்டினாவில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இருக்கின்றன. அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவது பழங்குடி சமூகங்களின் எதிர்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் இயற்கை வளங்களை முற்றிலுமாகத் தீர்த்து, கடுமையான நீர்ப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று பழங்குடி சமூகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













