அவதார் 2 டிரெய்லர் காட்டும் ஜேம்ஸ் கேமரூனின் பிரமாண்டம்: எதிர்பார்ப்புகளுக்குக் காரணமான முதல் பாகம்

பட மூலாதாரம், Avatar/Twitter
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்?
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க கால திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டவர். இவரது இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்து 1984இல் வெளியான தி டெர்மினேட்டர் (The Terminator) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 80களில் யாரும் இம்மாதிரி ஒரு படத்தை கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை.
அதற்கடுத்ததாக அவர் இயக்கிய ஏலியன்ஸ், தி அபிஸ் (The Abyss) ஆகிய படங்கள் திரைப்பட ரசிகர்களை அதிரவைத்தன. குறிப்பாக தி அபிஸ் படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட களம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு வெளிவந்த டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே (Terminator 2: Judgment Day), ட்ரூ லைஸ் (True Lies) ஆகிய படங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்குப் பிறகுதான் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டைட்டானிக் திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தப் படம் குறித்த செய்திகள் வெளியாகின. படம் வெளியாகும்போது, உலகம் முழுவதும் படம் தொடர்பான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்தது.


ஜேம்ஸ் கேமரூனின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையில் வழக்கமான இடைவெளியைவிட அதிக இடைவெளி இருப்பது வழக்கம்தான். ஆனால், டைட்டானிக் படத்திற்கும் அதற்கடுத்த படத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 12 ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டார். டைட்டானிக் படம் 1997இல் வெளிவந்தது. இதற்கு அடுத்த படம் 2009இல் வெளிவந்தது. அந்தப் படம் வெளிவந்தபோது, அவர் அவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணம் புரிந்தது.
அந்தப் படம் அவதார். இயற்கைக்கும் மனித ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான போராட்டத்தைச் சொல்லும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 16 முதல் 18ஆம் தேதிக்குள் உலகம் முழுவதும் சுமார் 14,600 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. அவற்றில் 3,670 திரையரங்குகளில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. 260 திரையரங்குகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியானது.
மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த அவதார், உலகம் முழுவதும் 2.92 பில்லியன் டாலர்களை வசூலித்தது. பணவீக்கத்தோடு இந்தத் தொகையை ஒப்பிட்டால், உலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் கான் வித் தி விண்ட் (Gone With the Wind) திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூலைப் பெற்ற படமாக அவதார் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் படம் வெற்றியடைந்த பிறகு, அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water), அவதார் மூன்றாம் பாகம் என மேலும் இரு பாகங்கள் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மொத்தமாக நான்கு பாகங்கள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியும் மூன்றாம் பாகம் 2024 டிசம்பர் 20ஆம் தேதியும் நான்காம் பாகம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தைப் பொறுத்தவரை 2014ஆம் ஆண்டே வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீருக்கடியில் நடிகர்களின் நடிப்புகளைப் பதிவு செய்து அதை அவதார் கதாபாத்திரங்களாக வடிவமைக்கப் பயன்படும் பெர்ஃபாமன்ஸ் கேப்ச்சுர் (Performance Capture) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் பிடிப்பது, படப்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகளில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றால் இப்போதுதான் இந்தப் படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது. சுமார் 250 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் படத்தைப் போலவே, ஜாக் சாலியும் நேத்ரியும் இணைந்து தங்களது உலகமான பண்டோராவை காக்க நடத்தும் போராட்டம்தான் இந்தப் படத்திலும் கதை. ஆனால், பெரும்பாலான காட்சிகள் நீருக்கடியில் நடப்பதுதான் வித்தியாசம்.

பட மூலாதாரம், Getty Images
ஜேம்ஸ் கேமரூனின் படங்கள் துவக்கத்திலிருந்தே, இயற்கைக்கும் நவீன மனிதனுக்கும் இடையிலான உறவு, முரண்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து சித்தரித்து வந்திருக்கின்றன. அதன் உச்சகட்டமாகத்தான் அவதார் வெளிவந்தது. இப்போது, இந்த இரண்டாவது பாகத்தில் இயற்கையின் ஒரு பகுதியான கடலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாம் வொர்திங்டன், ஜோ சல்தானா போன்ற முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களோடு, கேட் வின்ஸ்லேட் போன்றவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முந்தைய படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரே இந்தப் படத்திற்கும் இசையமைப்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் 2015இல் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்ட நிலையில், சிமோன் ஃப்ராங்க்லன் இதற்கு இசைமைத்துள்ளார்.
3 மணி நேரம் 10 நிமிடங்களுக்கு இந்தப் படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் டிரெய்லரில் காட்டப்பட்ட பிரமாண்டம் உலகளவில் அவதார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













