மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: தடுப்புக் காவலில் பிபிசி பர்மிய மொழி செய்தியாளர்

பிபிசி பர்மிய மொழி சேவையில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் மியான்மரில் பாதுகாப்பு படையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி அந்த நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாதுகாப்பு படையினர் மற்றும் அதை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு வெளியே செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, சீருடை அணியாத சில நபர்களால் பிபிசி செய்தியாளர் ஆங் தூரா காவலில் எடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பாக தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ள பிபிசி அவர் இருக்கும் இடத்தை அறிவதற்கு உதவி செய்யுமாறு மியான்மர் நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிரான வெள்ளியன்று நடந்த போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 15 அன்று குறைந்தது 38 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி செய்தியாளர் ஆங் தூராவுடன், மிஸ்ஸிமா எனும் உள்நாட்டு ஊடகம் ஒன்றின் செய்தியாளர் தான் டீகே ஆங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஸ்ஸிமா ஊடகம் இயங்குவதற்கான உரிமத்தை இந்த மாதத் தொடக்கத்தில் மியான்மர் ராணுவ அரசு ரத்து செய்தது.
மியான்மர் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நற்பகலில் அடையாளம் எதுவும் குறிக்கப்படாத வேன் ஒன்றில் வந்தவர்கள் இரு செய்தியாளர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதற்கு முன்பு தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட செய்தியாளர்களை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பின்பு ஆங் தூராவை பிபிசியால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மியான்மரில் உள்ள தங்களது ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் ஆங் தூராவை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் பிபிசி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"அவரை கண்டுபிடிப்பதற்கும் அவர் பாதுகாப்பாக உள்ளார் என்பதை உறுதி செய்வதற்கும் அதிகாரிகள் உதவி வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். பிபிசி அங்கீகாரம் பெற்ற ஆங் தூரா நேப்பிடாவில் பல்லாண்டு செய்தி சேகரிப்பு அனுபவம் பெற்றவர்," என்று பிபிசி அறிக்கை கூறுகிறது.
ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 40 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் இன்னும் பாதுகாப்பு படையினரின் வசம் உள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்களின் உரிமத்தையும் மியான்மர் ராணுவம் ரத்து செய்துள்ளது.
மியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி
நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம்தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












