தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `எடப்பாடியை நம்பினேன், ஏமாற்றிவிட்டார்!' கொந்தளிக்கும் தோப்பு வெங்கடாசலம்

கோப்பு வெங்கடாசலம்

பட மூலாதாரம், THOPPU VENKATACHALAM

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாச்சலத்துக்கு சீட் மறுக்கப்பட்டதால், சுயேட்சையாகப் போட்டியிடக் களமிறங்கி விட்டார். இதையொட்டி இன்று வேட்புமனுத் தாக்கலும் செய்துவிட்டார். அ.தி.மு.க தலைமையை இவர் எதிர்க்க என்ன காரணம்? `இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?' என தோப்பு என்.டி. வெங்கடாசலத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அ.தி.மு.க தலைமை ஒரு சர்வே எடுத்தது. அதன்படி, `ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களில் யாரெல்லாம் நன்றாகச் செயல்படுகிறார்கள், கட்சிப் பணிகளில் யார் நன்றாக ஈடுபடுகிறார்கள், தொகுதி மக்களிடம் யாருக்கு செல்வாக்கு அதிகம்' என்றெல்லாம் இந்த சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் எனக்கு பாசிட்டிவ்வான பதில்கள் வந்துள்ளன. `இந்த மாவட்டத்தில் சிறப்பான சட்டமன்ற உறுப்பினர் நான்தான்' என சர்வே முடிவு தெரிவித்தது. மேலும், அம்மா இறந்த பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்திலேயே அதிக வாக்குகளை பெருந்துறை தொகுதி மட்டுமே பெற்றுக் கொடுத்தது.

அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் கருப்பணன் தொகுதியில் 20,000 வாக்குகள் பின்னடைவு ஏற்பட்டது. செங்கோட்டையன் தொகுதியில் 10,000 வாக்குகளும் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் தொகுதியில் 37,000 வாக்குகளும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், என்னுடைய தொகுதியில் அதிக வாக்குகளை வாங்கிக் கொடுத்ததால் முதல்வரே நேரில் அழைத்துப் பாராட்டினார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளையும் வெற்றி பெற வைத்தேன். ஆனாலும் எனக்கு சீட் மறுக்கப்பட்டுவிட்டது."

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

`` அமைச்சர் கருப்பணன் என்னை அரசியல் போட்டியாளராகக் கருதினார். போட்டி என்பது மனதளவில்தான் இருக்க வேண்டும். அவர் முதல்வரின் சொந்தம் என்பதால் அவர் சொல்வது மட்டுமே எடுபட்டது. அவரைத் தவிர, இந்த மாவட்டத்தில் உள்ள அனைவருமே என்னை ஏற்றுக் கொண்டனர்."

தோப்பு வெங்கடாசலம்

பட மூலாதாரம், THOPPU VENKATACHALAM

உங்களை தவிர்க்க வேண்டிய சூழல் தலைமைக்கு ஏன் ஏற்பட்டது?

``அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு காரணங்கள் தெரியவில்லை. கொங்கு மண்டலத்தில் என்னைப் போன்றவர்கள் வளரக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. நானும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அம்மா சென்ற பிறகு என்னைப் போன்றவர்களின் வளர்ச்சி இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அமைச்சர் தொகுதியைவிட நான் சிறப்பாகச் செயல்படுவதும் ஒரு காரணம். தற்போது பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடக் கூடிய நபரும் சரியானவர் இல்லை."

அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கும் ஜெயக்குமார், ஒரு காலத்தில் உங்களால் வளர்க்கப்பட்டவர்தானே?

``அவர் என்னால் வளர்க்கப்பட்டவர் என்பதைவிட, நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு எதிராக அவர் வேலை பார்த்தார். அதனால் அவரைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கிவைத்தனர். ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினால் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கட்சிப் பொறுப்புக்கு வர முடியும். உள்ளாட்சித் தேர்தலிலும் இரட்டை இலைக்கு எதிராகப் போட்டியிட்டார். இவ்வாறு தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவருக்கு சீட் கொடுத்துள்ளனர். இந்தத் தொகுதியில் அவரை வேட்பாளராக அங்கீகரித்து சீட் கொடுத்தது என்பது அம்மாவின் கொள்கைக்கு முரணானது."

நீங்கள் தனித்துக் களமிறங்குவதால் அ.தி.மு.கவின் வெற்றி பாதிக்கப்படும். இதனால் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் வலுப்பெறுவார் என்கிறார்களே?

``அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் இந்தத் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். நான் இதுவரையில் காண்ட்ராக்ட் தொடர்பாக முதல்வரை சந்தித்ததில்லை. தொகுதி பிரச்னை தொடர்பாகத்தான் பார்த்துப் பேசியிருக்கிறேன். சட்டமன்றத்திலும் தொகுதிக்காக மட்டுமே பேசியிருக்கிறேன். கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது மாவட்ட அமைச்சர்களே முட்டுக்கட்டை போட்டனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தாலும் இந்தத் திட்டத்தை முழுமையாக என்னால் நிறைவேற்ற முடியவில்லை."

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி இருந்தால் முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கலாமே?

``முதல்வரை சந்தித்துப் பேசினேன். அவர் என்னிடம், `இது இன்டர்னல் பாலிடிக்ஸ்' என்றார். `இருக்கட்டும் அண்ணா. அதை சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள்' என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறேன். 8 வருடம் மாவட்ட செயலாளர், 4 வருடம் அமைச்சராக இருந்திருக்கிறேன். வேட்பாளர் நியமனத்தைக்கூட டி.வியில் பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டனர். ஓர் உழைக்கும் தொண்டனை இந்தளவுக்கு அவமானப்படுத்தியிருக்கக் கூடாது."

இதன் தொடர்ச்சியாக நீங்கள் கண்ணீர் வடிக்கும் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதே?

``நான் இந்தத் தலைமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். மக்கள் ஆதரவு இருந்தும்கூட, கட்சி சின்னத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு நபருக்குக் கொடுத்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இது எனக்குக் கிடைத்த அநீதியாக பார்க்கிறேன். இதையும் தாண்டி பெருந்துறை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவேன்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: