தலைமையை சீண்டிய வி.சி.க நிர்வாகிகள்: என்ன நடக்கிறது கட்சிக்குள்?

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தி.மு.க கூட்டணியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. உள்கட்சி மோதல்கள், தோழமைக் கட்சிகளுடன் முரண்பாடு என வி.சி.கவுக்குள் நடக்கும் உள் விவகாரங்களால் திருமாவளவன் கொதித்துப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது அந்தக் கட்சிக்குள்?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயர்களை கடந்த 14 ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். அதன்படி, காட்டுமன்னார் கோவிலில் சிந்தனைச் செல்வன், வானூரில் வன்னியரசு, நாகப்பட்டினத்தில் ஆளூர் ஷாநவாஸ், செய்யூரில் பனையூர் பாபு, அரக்கோணத்தில் கௌதம சன்னா, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதால் வி.சி.க வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர். அதேநேரம், சில தொகுதிகளில் நடக்கும் உள்ளடி வேலைகளால் மிகுந்த கொதிப்பில் திருமாவளவன் இருப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடக்கிறது?
`` வானூர், நாகப்பட்டினம், அரக்கோணம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வேட்பாளர்கள் நல்லமுறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில் நடக்கும் சில சம்பவங்கள் தலைமையை கொதிப்படைய வைத்துவிட்டன" என்கிறார் வி.சி.கவின் மாநில நிர்வாகி ஒருவர். இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களைப் பட்டியலிட்டார் அவர்.
``திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. பா.ம.க சார்பில் திருக்கச்சூர் ஆறுமுகமும் வி.சி.க மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியும் மோதுகின்றனர். இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான நேரடி போட்டி என்பதால், தொகுதி முழுக்க பதற்றம் நிலவுகிறது. இவர்கள் இருவருமே வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், இருவரும் இருவேறு குறியீடுகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், `வி.சி.கவிடம் தோற்றுவிடக் கூடாது' என பா.ம.க நினைக்கிறது. இதற்கு முன்பு திருப்போரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த இதயவர்மனுக்கு இந்தமுறை சீட் மறுக்கப்பட்டதால், அவரது தரப்பினர் சோர்வில் உள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி!
அ.ம.மு.க வேட்பாளராக கோதண்டபாணி களமிறங்குகிறார். இதற்கு முன்பு இதே தொகுதியில் நின்று போட்டியிட்டு தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் இவர். தேர்தல் பிரசாரத்தில் கோதண்டபாணி பேசும்போது, `நான் உங்களுக்காக நல்லமுறையில் பணியாற்றினேன். ஆனால் என்னைத் தகுதிநீக்கம் செய்துவிட்டனர்' எனப் பிரசாரத்தில் பேசி வருகிறார். இதனால் அ.தி.மு.க தரப்பின் வாக்குகளும் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க அணிக்கான வாய்ப்பு நன்றாக இருந்தாலும் வி.சி.க வேட்பாளரின் செயல்பாடுகளால் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன" என்கிறார் அந்த நிர்வாகி.

பட மூலாதாரம், Facebook Thiruma Official
தொடர்ந்து பேசுகையில், ``கடந்த 17 ஆம் தேதி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக இடதுசாரிகள் உள்பட கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முறையில் தகவல் சொல்லப்படவில்லை. இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சி.பி.எம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் சங்கர், வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்றார். `கூட்டணிக் கட்சியாக இருக்கிறோம். எங்களிடம் வேட்பாளர் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?' எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.கவின் மாவட்ட நிர்வாகிகளும் இதனால் கொதிப்பில் உள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியபோது, வி.சி.க வேட்பாளர் பங்கேற்கவில்லை. `நீங்கள் தனியாகவே அனைத்தையும் பார்த்துக் கொள்வீர்களா?' எனவும் தி.மு.க மாவட்ட நிர்வாகி கோபப்பட்டுள்ளார். இதுகுறித்து திருமாவின் பார்வைக்குத் தகவல் கொண்டு செல்லப்பட்டது" என்கிறார் அவர்.
கொதித்த திருமா!
இதுதவிர, செய்யூர் தொகுதியில் வி.சி.க சார்பாக பனையூர் பாபு போட்டியிடுகிறார். இதே தொகுதியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சூ.க.ஆதவன் எதிர்பார்த்தார். அவருக்கு சீட் கொடுக்காமல் பனையூர் பாபுவுக்கு திருமாவளவன் வாய்ப்பு கொடுத்தார். இதனால் அதிருப்தியடைந்த சூ.க.ஆதவனின் ஆதரவாளர்கள், தலைமையை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, `ஆயிரம் கைகள் வந்தாலும் ஆதவனை அழிக்க முடியாது' என்ற தொனியில் கருத்துகளைப் பதிவிட்டனர். இதனால் கொதித்த வி.சி.க தலைவர், மாவட்ட நிர்வாகி ஒருவரை நேரில் வரவழைத்து கடுமை காட்டியுள்ளார். `உன்னை தூக்கியெறிய எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். கட்சி நடவடிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்டால், வேறுவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்' எனவும் எச்சரித்ததாக வி.சி.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் உள்ளடி!
வி.சி.க தலைமையின் கோபத்துக்கு வேறு ஒரு காரணத்தையும் அக்கட்சியின் நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகின்றனர். ` காஞ்சி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சூணாம்பேட்டில் உள்ள ஒரு பூத்தில் 1,500 தலித் வாக்குகள் உள்ளன. கடந்தமுறை மக்கள் நலக் கூட்டணி சார்பாக எழில் கரோலின் போட்டியிட்டார். இந்த ஒரு பூத்தில் இருந்து அவருக்கு வெறும் 130 வாக்குகளே பதிவானது. இதற்கு கட்சியினரின் உள்ளடி வேலைகள்தான் காரணமாக அமைந்தன. இந்தமுறை செய்யூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக கணிதா சம்பத் களமிறங்கியுள்ளார். இதே தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தனபால் சீட் கேட்டும் அவருக்குக் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது வி.சி.க வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது. இந்தச் சூழலில் வி.சி.க நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளால் பனையூர் பாபு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே திருமா கோபத்தை வெளிப்படுத்தினார்" என்கின்றனர்.

பட மூலாதாரம், Thiruma Official
அதிருப்தி என்பதே இல்லை!
இதுகுறித்து திருப்போரூர் தொகுதி வி.சி.க வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். `வேட்பாளர் பிரசாரத்தில் இருக்கிறார். பிறகு பேசுவார்' எனத் தகவல் வந்ததால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` திருப்போரூர் தொகுதி நிலவரம் குறித்து தெரியவில்லை. அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மிகத் தீவிரமாக களப்பணியைச் செய்து வருகின்றன. தேர்தல் பணிகளில் எந்தவிதச் சுணக்கமும் இல்லை; அதிருப்தியும் இல்லை. தொகுதிக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறுவது என்பது தி.மு.க தலைவரை முதல்வராக அமரவைக்கும் செயல் என்பதில் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். `இந்தக் கூட்டணியில் முதன்முதலாக நீங்கள்தான் வந்து கையொப்பம் போட்டீர்கள். இந்தக் கூட்டணி வலிமையாக இருப்பதற்கு நீங்கள்தான் காரணம்' எனத் தி.மு.க தலைவர் கூறியது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தங்களுடைய அன்பை கூட்டணிக் கட்சிகள் வாரியிறைக்கின்றன. அனைத்து தொகுதிகளிலும் இதே நிலவரம்தான் உள்ளது.
நாங்கள் வேட்பாளர்களை தாமதமாக அறிவித்த காரணத்தால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது. எங்களின் அணுகுமுறையில் அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும். தி.மு.க தலைவரை முதல்வர் ஆக்குவதற்கான தேர்தல் இது என்பதால் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக வேலை பார்க்கின்றனர்" என்கிறார் உறுதியாக.
பிற செய்திகள்:
- மேகத்துக்குள் ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்க முயற்சி
- மாங்கல்ய தோஷம்: படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த 'டியூசன் டீச்சர்'
- கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








