ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - லண்டன் நீதிமன்றம்

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு
படக்குறிப்பு, நவாப் மிர் உஸ்மான் அலி கான்

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350 கோடி இந்திய ரூபாயாகும்.

எழுபது ஆண்டு காலமாக நிலவிய இந்தப் பிரச்சனையில், லண்டன் நீதிமன்றம் நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

வழக்கின் பின்னணி

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை நிஜாம் அரசு ஒரு தன்னாட்சி அரசாகவே இருந்தது. அதன் பிறகு, 'ஆப்ரேஷன் போலோ' எனப்படும் இந்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகே ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

1948இல் பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் உயர் ஆணையராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையாக வளர்ந்துள்ள அந்த பணப்பரிமாற்றத்துக்கு நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக இந்த வழக்கை லண்டன் நீதிமன்றமொன்று விசாரித்து வருகிறது.

இந்த ஒரு மில்லியன் பவுண்டின் கதை, இந்திய ஒன்றியத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து துவங்குகிறது.

பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கியவராக கருதப்படும் அசாஃப் ஜா VII என்று அழைக்கப்பட்ட நவாப் மிர் உஸ்மான் அலி கான் சித்திக் என்பவரின் ஆட்சியின் கீழ் ஹைதராபாத் இருந்தது.

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Facebook

ஆப்ரேஷன் போலோ நடவடிக்கையின்போது, தங்களது அரசின் வசம் உள்ள ஒரு மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பாக வைக்கும் எண்ணத்தில், அப்போது நிதி அமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங், அதை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.

அந்த பணப்பரிமாற்றம்தான் ஒரு நீண்டகால பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.

'பாகிஸ்தான், நிஜாம், இந்தியா'

ஏழாவது நிஜாமின் பேரன்களில் ஒருவரான இளவரசர் முகார்ரம் ஜா VIII சார்பில் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள, விதர்ஸ் வேர்ல்ட்வைடு எனும் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த பால் ஹெவிட் இவ்வழக்கு குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்.

"தனது பணம் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்தவுடனேயே, ஏழாவது நிஜாம் உடனடியாக பணத்தை திரும்ப வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டார். ஆனால், பணத்தை திரும்ப அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்த ரஹிம்தூலா, அது தற்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான பணம் என்று தெரிவித்தார்.

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இதுதான் இருதரப்பினருக்குமிடையேயான நீண்டகால சட்டப்போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. பாகிஸ்தானின் நிலைப்பாட்டை எதிர்த்து, நிஜாம் தரப்பில் 1954ஆம் ஆண்டு பிரிட்டனின் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் வெற்றிபெற, மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடிய நிஜாம் தரப்பு அதில் வெற்றிபெற்றது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, அப்போது பிரிட்டனின் உட்சபட்ச நீதிமன்றமாக கருதப்பட்ட ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் பாகிஸ்தான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமாக, அதாவது இறையாண்மையுள்ள நாடான பாகிஸ்தானை எதிர்த்து நிஜாம் தரப்பு வழக்கு தொடர முடியாது என்று தீர்ப்பு வெளிவந்தது. இருப்பினும், அந்த நீதிமன்றம் பாகிஸ்தானின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டு பணத்தை முடக்கியது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்ட நாட்வெஸ்ட் வங்கி நிர்வாகம், இந்த பணப்பரிமாற்றத்தோடு தொடர்புடைய இருதரப்பினரில் யாருக்கு இது சொந்தமாகும் என்ற கேள்விக்கு சட்டரீதியிலான பதில் கிடைக்கும் வரை, அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் நடந்தது முதல் இப்போது வரையிலான 60 ஆண்டுகாலத்தில், அந்த பணத்தின் மதிப்பு, வட்டியுடன் சேர்த்து 35 மில்லியன் பவுண்டுகளாக பல்கி பெருகியுள்ளது.

நவாப் மிர் உஸ்மான் அலி கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவாப் மிர் உஸ்மான் அலி கான்

இடைப்பட்ட காலத்தில், இந்த விவகாரத்தில் உடன்பாட்டை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை." என்கிறார்.

தீர்ப்பு கூறுவது என்ன?

இவ்வாறான சூழலில் பல்லாண்டுகாலமாக நடந்து வரும் இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கினார் லண்டன் ராயல் நீதிமன்றத்தின் நீதிபதி மார்கஸ் ஸ்மித்.

அவர் இந்த பணமானது ஏழாவது நிஜாமுக்கும், அவரது பேரப் பிள்ளைகளுக்கும், எட்டாவது நிஜாமுக்கும் அவரது இளைய தம்பிக்கும், இந்தியாவுக்கும் உரியதென தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீர்ப்பை வரவேற்கும் நிஜாமின் வாரிசுகள்

இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக நிஜாம் குடும்பம் கூறி உள்ளது. பிபிசியிடம் பேசிய நிஜாம் குடும்பத்தை சேர்ந்த நஜாஃப் அலி கான், "நீதிபதி மார்கஸ் ஸ்மித்தின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்புக்காகதான் பல காலமாக காத்திருந்தோம்" என்கிறார்.

பாகிஸ்தான் விளக்கம்

இந்தப் பணப் பரிமாற்றத்தின் வரலாற்றுப் பின்னணியை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறி உள்ளது.

"சர்வதேச சட்டத்துக்கும், எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் ஹைதராபாத்தை இந்தியா தன்னுடன் இணைத்து கொண்டது. இது நிஜாம் தமது மக்களுக்காகவும், இந்தியாவின் ஊடுருவலுக்கு எதிராகவும் முயற்சிகள் எடுக்க காரணமாக அமைந்தது. நிஜாம் இந்த விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்து சென்றார். நிஜாம் பாகிஸ்தானின் உதவியை நாடியதை அடுய்த்து பாகிஸ்தான் அரசும் அவருக்கு உதவி வழங்கியது." என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பின் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என பாகிஸ்தான் கூறி உள்ளது.

line

Hyderabad நிஜாமின் 350 கோடி ரூபாய் யாருக்கு சொந்தம்? | Nizam of Hyderabad

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :