ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5 முதல் 144 சிறுவர்கள் கைது: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

பட மூலாதாரம், SOPA Images
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதில் இருந்து அந்த மாநிலத்தில் 144 சிறுவர்கள் (9 மற்றும் 11 வயதுடையோர் உள்பட) கைது செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஜம்மு காஷ்மீர் சிறார் நீதிக் குழு.
சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது முதல் அந்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால், காஷ்மீரில் சிறுவர்கள் யாரும் சட்டவிரோதக் காவலில் இல்லை என்றும் இந்த குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் 2013ம் ஆண்டின் சிறார் நீதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், சட்டத்துடன் மோதும் சிறுவர்களுக்கான விதியின்படி நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சட்டத்துடன் மோதும் சிறுவர்களில் ஒருவர்கூட சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படவில்லை என்றும் மாநில அரசு இயந்திரம் தொடர்ச்சியாக சட்டத்தின் ஆட்சியை கடைபிடிக்கிறது என்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தமக்கு அனுப்பிய அறிக்கையை மேற்கோள்காட்டுகிறது இந்த அறிக்கை.

பட மூலாதாரம், AFP
"மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான குற்றச்சாட்டுகள் களத்தில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்திப் போகவில்லை. சட்டவிரோதமாக சிறுவர்களை போலீசார் கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளதாக குறிப்பிடும் ஒவ்வொரு தனித்தனி புகாரும் உண்மைக்கு மாறாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது," என்று டிஜிபி அறிக்கை கூறுவதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
இது தொடர்பாக வெளியான ஊடக செய்திகள், காவல்துறையை களங்கப்படுத்தும் நோக்கத்துடனும், பரபரப்பான செய்தி தரவேண்டும் என்பதற்காகவும், கற்பனையாகவும் வெளியிடப்பட்டவை என்று கூறி அவற்றை டிஜிபி மறுத்துவிட்டதாகவும் கூறுகிறது அந்த அறிக்கை.
சிறார்கள் கல்லெறியும் வேலைகளில் ஈடுபடும்போது உடனடியாக அவர்கள் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு சிறார் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், இவற்றில் சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் டிஜிபி அறிக்கையை மேற்கோள் காட்டி சிறார் நீதிக்குழு தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொஹம்மது மக்ரே தலைமையிலான நால்வர் குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, உச்சநீதிமன்றத்தின் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அமர்வுதான் ஜம்மு காஷ்மீர் தொடர்பான சமீபத்திய விவகாரங்களை விசாரிக்கிறது.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்த ஜம்மு காஷ்மீரில் சிறார்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பொது நல வழக்கில் கூறப்பட்டுள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 20ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறார் நீதிக் குழுவை அது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.
குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையத்தின் முதல் தலைவரும் பிரபல குழந்தை உரிமை செயற்பாட்டாளருமான எனாக்ஷி கங்குலி இந்த பொது நல வழக்கைத் தொடர்ந்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












