ரஷ்யாவில் மது அருந்துவது 13 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்தது எப்படி? மற்றும் பிற செய்திகள்

மது

பட மூலாதாரம், BrianAJackson

அதிகமாக மது அருந்தும் நாடாக ரஷ்யா கருதப்பட்டது. மதுவுக்கு பெயர் போன நாடாகவும் ரஷ்யா திகழ்ந்தது. ஆனால், 2003ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை அங்கு மது அருந்தும் பழக்கம் 43% குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்நாட்டு அரசு எடுத்த மது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த உந்துதல்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மதுப் பழக்கம் குறைந்ததற்கு ஏற்ப இந்த காலகட்டத்தில் ரஷ்ய மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

"ரஷ்ய கூட்டமைப்பில் மதுப்பழக்கத்தினால், அதிகம் பேர் உயிரிழப்பதாக, குறிப்பாக வேலைக்கு செல்லும் வயதில் இருக்கக்கூடிய ஆண்கள் அதிகம் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டது" என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ரஷ்யாவில் 2003ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மது அருந்துவதும் அதனால் உயிரிழப்பதும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. 2018ல் ரஷ்ய ஆண்களின் சராசரி ஆயுள் 68 ஆகவும், பெண்களின் சராசரி வயது 78 ஆகவும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

டிமிட்ரி மெத்வெதவ் அதிபராக இருந்தபோது மது தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு, மதுவுக்கு கூடுதல் வரி, ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மது விற்பனைக்குத் தடை என்பது உள்ளிட்ட மதுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மதுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்பது ரஷ்யாவில் சமீப காலத்தில் நடந்த மிக அதிரடியான நடவடிக்கை என்கிறார் பிபிசி மாஸ்கோ செய்தியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட்.

வோட்காவும், பியரும், கருவாடும் நிரம்பி வழியும் கடைகள் இரவு முழுவதும் திறந்த காலமெல்லாம் போய்விட்டது. கடையிலோ, கொண்டுவந்து தருகிற நிறுவனங்களிலோ இரவு 11 மணி வரையில்தான் இப்போது மது வாங்க முடியும். ஒரு காலத்தில் மது என்றே கருதப்படாத பியருக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்கிறார் அவர்.

Presentational grey line

நரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது ஏன்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து தமிழின் பெருமையைப் பேசுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, தாம் உலக அரங்கில் அப்படிப் பேசியது குறித்து ஐ.ஐ.டி. விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தபோது மீண்டும் சுட்டிக்காட்டினார்.

பொதுவாகத் தமிழ்நாட்டுக்கு வரும் வட இந்திய தலைவர்கள் வணக்கம், நன்றி போன்ற சொற்களை மேடையில் பேசி கை தட்டல் வாங்குவது வழக்கம். ஆனால், சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளைவிட மேம்பட்டது என்று பேசும் இந்துத்துவ முகாமில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, சம்ஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்று பேசியதும், தொடர்ந்து தமிழை பெருமைப்படுத்தும் வாசகங்களை, மேற்கோள்களை தமது உரையில்இணைத்துக் கொள்வதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

Presentational grey line

ஹாங்காங்கில் மீண்டும் வெடித்த போராட்டம்

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன.

ஹாங்காங் போராட்டங்களில் பங்கெடுத்த ஒருவரின் மீது போலீசாரின் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக ஹாங்காங் போலீஸ் செய்தி ஒன்று உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் சூழலில், முதல்முறையாக போராட்டக்காரர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது இதுவே முதல்முறையாகும்.

Presentational grey line

"கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே"

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Presentational grey line

வன்கொடுமை தடுப்பு சட்டம்: தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யக்கூடாது என்ற தமது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது செய்யக் கூடாது என்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி இந்த தீர்ப்பை வழங்கி இருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :