#INDvsSA -அனுபவமற்ற தென்னாப்பிரிக்காவை இந்தியாவால் ஒயிட்வாஷ் செய்ய முடியுமா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், GIANLUIGI GUERCIA/AFP/Getty Images

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

மூன்று டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ள சூழலில், இந்தியாவின் தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்குவது தொடர்பாகவும், அனுபவமில்லாத தென்னாப்பிரிக்க அணியின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இது வரை 13 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 7 முறையும் , இந்தியா 3 முறையும் வென்றுள்ளன. 3 டெஸ்ட் தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

இந்த இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக 2018-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்றது.

2018 தொடரில் 2-1 என வென்ற இந்தியா

பட மூலாதாரம், GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

படக்குறிப்பு, 2018 தொடரில் 2-1 என வென்ற இந்தியா

ஐசிசி உலகக்கோப்பைக்கு பிறகு தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், தான் விளையாடிய முதல் டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்தமண்ணில் 2-0 எனும் கணக்கில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக சாஹா களமிறங்கவுள்ளார். உலகக்கோப்பை தொடங்கி டெஸ்ட், ஒருநாள், டி20போட்டிகள் என அனைத்து வடிவங்களிலும் தடுமாறி வந்த ரிஷப் பந்த்துக்கு பதிலாக சாஹா இந்த போட்டியில் விளையாடுகிறார்.

நீண்ட காலமாக காயம் மற்றும் உடல்தகுதி காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்த சாஹா, கடைசியாக 2018 ஜனவரியில்தான் இந்தியாவுக்காக விளையாடினார்.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சாஹா குறித்து பேசிய அணியின் தலைவர் விராட் கோலி, ''அனுபவமும், ஆட்ட நேர்த்தியும் நிரம்பிய சாஹா விக்கெட்கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் நிச்சயம் சாதிப்பார். அணிக்கு பக்கபலமாக சாஹா இருப்பார்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவதுதான்.

ரோகித் சர்மா (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Michael Dodge/Getty Images

படக்குறிப்பு, ரோகித் சர்மா (கோப்புப்படம்)

இது குறித்து பேசிய விராட் கோலி, ''நீண்ட காலமாக நாங்கள் சிந்தித்து எடுத்த முடிவு இது. இது நிச்சயம் அணிக்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறோம். மாயங்க் அகர்வால், கே. எல். ராகுல் என பலர் தொடக்க வீரராக களமிறங்கினர். அதேபோல் நீண்ட காலமாக முரளி விஜய் தொடக்க வீரராக விளையாடியுள்ளார்'' என்று தெரிவித்தார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக நீண்ட காலமாக சிறப்பாக பங்களித்துவரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடுவார்? அவர் சேவாக் போல அதிரடி பாணியில் விளையாடுவாரா? இந்த கேள்விகளுக்கான பதில் ஓரளவு இந்த தொடரில் முடிவில் தெரியவரும்.

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை உடல்தகுதியின்மை காரணமாக பும்ராவுக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் உள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சிறப்பாக விளையாடிவரும் பும்ரா இந்த தொடரில் விளையாடதது அணிக்கு இழப்பு என்பது சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக உள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சுழற்பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் டு பிளஸிஸ் மற்றும் குயிண்டன் டி காக் போன்றவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் இந்திய மண்ணில் அதிகம் விளையாடியவர்கள் இல்லை. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையலாம்.

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளின் பலம், பலவீனம் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி, ''சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் தடுமாறும். அதேவேளையில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களை குறைத்து எடைபோடமுடியாது'' என்று குறிப்பிட்டார்.

''இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அங்கம் பெறும் டெஸ்ட் தொடர் என்பதால் இந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்ய பெரிதும் முயலும். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்கு இதில் முக்கியமாக இருக்கும்'' என்று கூறினார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Lee Warren/Gallo Images/Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா, சேவாக் போன்று அதிரடி வீரராக மாற வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, 'ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவது இந்திய அணிக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்,சேவாக் போல ரோகித் சர்மா ஆக சிறந்த அதிரடி பாணியில் பங்களிக்க முடியுமா என்று கேட்டால் தற்போது முடியாது என்றே கூறுவேன். ஏனெனில், சேவாக் ஒரு தனி சகாப்தம்'' என்று தெரிவித்தார்.

''விசாகப்பட்டினம், புனே மற்றும் ராஞ்சி என டெஸ்ட் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களில் இதுவரை அதிக டெஸ்ட் போட்டிகள் நடந்தது இல்லை. இந்த ஆடுகளங்கள் முழுவதும் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

''நிச்சயம் இந்தியா ஆதிக்கம் செல்லும் டெஸ்ட் தொடராக தான் இது அமைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் தென்னாப்ரிக்காவும் எளிதில் விட்டுக்கொடுக்காது. ஆம்லா, டி வில்லியர்ஸ் போன்ற வலுவான அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இல்லாமல் களமிறங்கும் இந்த அணி எப்படி இந்த வெற்றிடத்தை நிரப்பப் போகிறது என இனி வரும் நாட்களில் தெரிய வரும்'' என்கிறார் விஜய் லோக்பாலி.

இதுவரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடர்களில், 2015-இல் நடந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வென்றதுதான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பெற்ற சிறந்த டெஸ்ட் தொடர் வெற்றி.

இம்முறை அதனை விஞ்சி முதல்முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :