மகாத்மா காந்தியிடம் கணக்கு கேட்ட தமிழன் ஜெ.சி.குமரப்பாவை அறிவோமா? - காந்தியின் நெருங்கிய நண்பனின் கதை

பட மூலாதாரம், Getty Images/Facebook
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
1934-ஆம் ஆண்டில், பிகார் மாநிலம் நில நடுக்கத்தால் சிதைந்து போனது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்தி களத்தில் இறங்கினார். ராஜேந்திர பிரசாத் இந்த நிவாரணப் பணிகளைக் கவனித்துக் கொண்டார்.
ஆனால், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருந்ததால், ராஜேந்திர பிரசாத்தால் மட்டும் தனியாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ஜமன்லால் பஜாஜை ராஜேந்திர பிரசாத்துக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் காந்தி. பஜாஜ் குமரப்பாவின் உதவியை நாடினார். நிவாரண பணிகளுக்கான நிதி நிர்வாகத்திற்கான ஆலோசகராக குமரப்பா நியமிக்கப்பட்டார்.
காந்தி கணக்கு
குமரப்பா பண விஷயத்தில் கறாரானவர் . ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருப்பார், கணக்கும் கேட்பார்.
பிகார் நிவாரணப் பணி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் செலவுக்கு தலா மூன்று அணாக்களை குமரப்பா ஒதுக்கினார்.
அந்த சமயத்தில் நிவாரணப் பணிகள் தொடர்பான ஒரு கூட்டத்திற்காக காந்தி பாட்னா சென்றார். காந்தியுடன் அவரது அலுவலர்களும் சென்றார்கள். இந்த சூழலில் காந்திக்கான செலவு கணக்கு மூன்று அணாக்களை எட்டியது. இந்த விஷயம் குமரப்பாவில் காதுகளை எட்டியது.
குமரப்பா காந்தியின் தனி செயலாளரான மகாதேவ் தேசாயை அழைத்து, ''நிவாரண நிதியிலிருந்து காந்திக்காக, அவரது அலுவலர்களுக்காக செலவு செய்ய முடியாது. "ஒரு நபருக்கு மூன்று அணாக்கள்தான் ஒதுக்கி இருக்கிறோம். ஆனால், காந்திக்கான செலவு மூன்று அணாக்களுக்கு மேல் போகிறது. அதனால், பணம் தருவது சிரமம். அதுமட்டுமல்ல, காந்தியின் வாகனத்திற்கான எரிபொருள் செலவுக்கு நீங்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கறாராகச் சொல்லி விடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயம் காந்திக்கு சொல்லப்படுகிறது. காந்தி குமரப்பாவை அழைத்து விசாரிக்கிறார். ஆனால், அப்போதும் குமரப்பா தனது முடிவில் தீர்க்கமாக இருந்து நிதி சுமை குறித்து விவரிக்கிறார்.
"இந்த நிதி மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி அதனைச் சிக்கனமாகச் செலவு செய்ய சில விதிகளை வகுத்திருக்கிறோம். அந்த விதி எல்லாருக்கும் பொருந்தும்." என்கிறார்.
காந்தியும் இதனை ஒப்புக் கொள்கிறார்.
சரி. காந்தியிடமே கணக்குக் கேட்ட குமரப்பா யார்?
கீழ் தஞ்சையிலிருந்து அமெரிக்காவுக்கு
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில்1892 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோசப் கொர்னிலியஸ் குமரப்பா. இவது தந்தை எஸ்.டி.கொர்னிலியஸ் சென்னை மாகாணத்தில் பொதுப் பணித் துறையில் பணியாற்றியவர்.
லண்டன், அமெரிக்கா என பல்வேறு இடங்களில் பயின்று, தணிக்கையாளராக பணியாற்றியவர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கும் போது, அவர் ஆற்றிய, "ஏன் இந்தியா ஏழ்மையில் உழல்கிறது?" என்ற உரைதான் அவர் வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த உரை அமெரிக்காவில் ஒரு நாளிதழில் பிரசுரமாகிறது. அந்த உரையைப் படித்த அவரது ஆசிரியர், இந்த தலைப்பிலேயே அவரது முதுகலை படிப்பிற்கான ஆய்வை மேற்கொள்ளச் சொல்கிறார். இந்த ஆய்வுதான் அவர் வாழ்க்கையையே மாற்றுகிறது. பிரிட்டன் இந்தியாவைச் சுரண்டுகிறது என்ற முடிவுக்கு வந்த அவர், அதுவரை தான் நம்பிய பொருள்வயமான சித்தாந்தத்தை மாற்றிக் கொள்கிறார். அதனுடன் தம் வாழ்க்கை முறையையும்.
காந்தி - குமரப்பா சந்திப்பு

பட மூலாதாரம், Facebook
"நீங்கள்தான் காந்தியோ?" "நீங்கள்தான் குமரப்பாவோ?"
ஏதோ கட்டபொம்மன் பட வசனம் போல உள்ளதா? உண்மையில் இருவருக்குமான உரையாடல் இப்படியாகதான் இருந்ததாக விவரிக்கிறது காந்திய ஆய்வு அறக்கட்டளையின் இணையதளம்.
காந்தி முதல்முறையாக குமரப்பாவை சந்திக்கும் போது காந்தி குமரப்பாவை அறிந்திருக்கவில்லை. இது முக்கியமல்ல. குமரப்பாவுக்கும் காந்தியை தெரியவில்லை.
இவர்களது முதல் சந்திப்பானது சபர்மதி ஆசிரமத்தில் நடந்ததாகக் கூறுகிறது காந்திய ஆய்வு அறக்கட்டளையின் இணையதளம்.
சபர்மதி ஆசிரமத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து காந்தி ராட்டை சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் குமரப்பாவுக்கு அதுதான் காந்தி என தெரியவில்லை. ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் அங்கேயே நிற்கும் குமரப்பாவை பார்த்து காந்தி நீங்கள்தான் குமரப்பாவா என்கிறார். "குமரப்பாவும் நீங்கள்தான் காந்தியா?" என்கிறார்.
காந்தி குமரப்பா இடையேயான ஆழமான நேசம் இப்படிதான் தொடங்கியது.
ஒரு நாள் பண்டிட் மதன் மோகன் மால்வியா காந்தியிடம் குமரப்பாவுக்கு சிறப்பான பயிற்சியை வழங்கி இருப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காந்தி, "நான் குமரப்பாவுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பே எல்லாம் கற்று முழுமையாக வந்தார்" என்கிறார்.


இரு உடல் ஒரு சிந்தனை
காந்தி, குமரப்பா என சரீரம் வேறாக இருந்தாலும், இருவரும் ஒரே மாதிரியாகதான் சிந்தித்து இருக்கிறார்கள். இருவரது பொருளாதார கொள்கையும் ஒன்றாகதான் இருந்திருக்கிறது. இருவரும் மையப்படுத்துதலை எதிர்த்து இருக்கிறார்கள்.
"மையப்படுத்துதல் என்பது அனைவரையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அடக்குமுறையின் ஒரு வடிவமே. பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வைத் தன் கைக்குள் வைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் வேண்டுமானால் பொருளாதாரத்திலும் ஜனநாயகத் தன்மை வேண்டும்" - இது குமரப்பா கூறியது.

பட மூலாதாரம், Getty Images
"அதிகார மையம் என்பது இப்போது புது டெல்லியில் இருக்கிறது. கல்காத்தாவில் இருக்கிறது. பம்பாயில் இருக்கிறது. பெரு நகரங்களில் இருக்கிறது. நான் அந்த அதிகாரத்தை 7 லட்சம் கிராமங்களுக்கும் பிரித்துத் தர விரும்புகிறேன்" - இது காந்தி கூறியது.
இப்படியாக பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
அனைத்திந்திய கிராம தொழில் சங்கத்தின் அமைப்பாளராக குமரப்பா இருந்தபோது, தொழில் பரவலாக்கலுக்கான ஏராளமான முயற்சிகளைக் காந்தியுடன் இணைந்து எடுத்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக குமரப்பாவை நியமிக்க காந்தி விரும்பியதாகவும் கூறப்படுவதுண்டு.
காந்தி மீது பெருமதிப்பு கொண்ட குமரப்பா, காந்தி மரணித்த அதே நாளில் 1960ஆம் ஆண்டு இறந்தார்.

காந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












