ஜஸ்டின் ட்ரூடோ: சர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

கனடா

பட மூலாதாரம், Reuters

சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

இது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

செவ்வாயன்று இந்த திட்டத்துக்கான மறு ஒப்புதலை வழங்கிய ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாய் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது.

இந்த கச்சா எண்ணெய் பைப்லைன் திட்டமானது, எட்மாண்டன், அல்பெர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்லும்.

தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த பைப் லைன் இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள் அளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும்.

பசிஃபிக் கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஐந்து டாங்கர்கள் வந்து போன வீதியில் இனி 34 டாங்கர்கள் வந்து போகும்.

இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பைப் லைன் விரிவாக்க திட்டம் கனடாவில் இரு பிரிவினர்களை உருவாக்கியது. ஒரு தரப்பு இந்த திட்டத்தால் எண்ணெய் கசிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டு என்றும், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர். மறுதரப்பு இது கனடாவின் ஆற்றல் துறை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளதால் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகைக்கும் என்று கருதிகிறார்கள்.

அமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்த திட்டத்தால் குறையும் என ஜஸ்ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படாது என்று தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அவரின் கட்சிக்கும் அடுத்த தேர்தலில் இந்த திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Presentational grey line

'லிப்ரா' டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா?

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக்.

குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம்.

இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது.

Presentational grey line

மக்கள் போராட்டம், மன்னிப்பு கோரிய தலைவர் கேரி லேம்

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

ஹாங்காங்கில் போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கோரினார் ஹாங்காங் தலைவர் கேரி லேம்.

போராட்டம் செய்த மக்கள் இந்த மசோதாவை திரும்ப பெறவும் கேரி லேம் பதவி விலகவும் கோரிக்கை விடுத்தனர்.

1997ல் இருந்து ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற முறைப்படி ஹாங்காங் சீனாவின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. இதன்மூலம் சீன மக்களுக்கு கிடைக்காத சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு கிடைக்கும்.

இந்த மசோதா மூலமாக ஹாங்காங்கின் மக்கள் சீனாவின் பாதுகாப்பற்ற சட்ட முறைகளுக்குள் வருவார்கள். அது அந்த நகரத்தின் சட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்ட பின்பும் இதுவரை நடந்ததில் மிகப்பெரிய போராட்டம் ஞாயிறு அன்று நடந்தது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதாக ஒருங்கிணைப்பாளர் கூறுகின்றனர்.

Presentational grey line

'தமிழ் வாழ்க' - நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களின் முழக்கங்கள் என்ன?

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் 'தமிழ் வாழ்க', 'வாழ்க பெரியார்', 'தமிழ்நாடே என் தாய்நாடு' உள்ளிட்ட பல முழக்கங்களை எழுப்பினர். எந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ன சொல்லி முழங்கினார்?

தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாகப் பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், 'காந்திஜி வாழ்க', 'பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க', 'தந்தை பெரியார் வாழ்க', 'காமராஜர் வாழ்க' என முழங்கினார்.

இதையடுத்து தற்காலிக சபாநாயகர், 'உறுதிமொழி பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பது மட்டுமே குறிப்பில் ஏறும்; மற்றவை அவைக் குறிப்பில் ஏறாது' என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பதவியேற்ற ஒவ்வொரு எம்.பியும் தாங்கள் பதவியேற்றவுடன் சில முழக்கங்களையும் செய்தனர்.

Presentational grey line

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்

'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னை குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :