பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம் மற்றும் பிற செய்திகள்

பெஞ்சமின் நெதன்யாஹூ

பட மூலாதாரம், Getty Images

அரசு அமைக்க முடியாததால் கலைந்த வலதுசாரி அரசு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும்.

அரசு அமைக்க முடியாததால் கலைந்த வலதுசாரி அரசு

பட மூலாதாரம், Getty Images

120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை.

Presentational grey line

நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

பட மூலாதாரம், M K STalin

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோதி அடுத்து அமையவுள்ள இந்திய அரசுக்கான பிரதமராக மீண்டும் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு, நாட்டின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து பயங்கரவாதி என்று பேசிய கமல்ஹாசனுக்கு பாஜகவினரும், அவரது ஆதரவாளர்களும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

பாலியல் புகார் கொடுத்ததால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி

பாலியல் புகார் கொடுத்ததால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி

பட மூலாதாரம், FAMILY HANDOUT

பாலியில் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த, 19 வயது மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 16 பேர் மீது வங்கதேசத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகார் அளித்த சில நாட்களுக்கு பின்னர், ஏப்ரல் 6ம் தேதி அவர் படித்த இஸ்லாமிய பள்ளியின் கூரையில் 19 வயதான நஸ்ரத் ஜஹான் ரஃபியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சிராஜ் உத் டௌலாவும் இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Presentational grey line

மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து பாஜவுக்கு அணி மாறும் எம்.எல்.ஏக்கள்

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவது தொடர்ந்து வருகிறது. இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி 2017இல் பாஜகவில் இணைந்த முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் மற்றும் துஷார் காண்டி பட்டாச்சார்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Presentational grey line

நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நாளை, வியாழக்கிழமை, இந்தியாவின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ள நிலையில், இதில் பாஜக இந்தத் தேர்தலில் புதிதாக, கணிசமான வெற்றியை ஈட்டியுள்ள மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. நாளை, மே 30 அன்று, 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கிறது அந்தச் செய்தி.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :