நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நாளை, வியாழக்கிழமை, இந்தியாவின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ள நிலையில், இதில் பாஜக இந்தத் தேர்தலில் புதிதாக, கணிசமான வெற்றியை ஈட்டியுள்ள மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நாளை, மே 30 அன்று, 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கிறது அந்தச் செய்தி.

செவ்வாய்க்கிழமை நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இது தொடர்பாக சுமார் ஐந்து மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள் என்று செய்திகள் கிடைத்துள்ளதாக ஏ.என்.ஐ கூறுகிறது.

கட்சி மற்றும் ஆட்சியில் அமித் ஷாவின் பங்கு என்னவாக இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

நரேந்திர மோதி, அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

முந்தைய அரசைவிட கூடுதலான இடங்களைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முக்கியப் பங்காற்றிய அமித் ஷா புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கடந்த ஐந்து ஆண்டுகள் தமக்கு ஆட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தமது உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்காக புதிய அரசில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று இன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அருண் ஜேட்லியின் கடிதம்

கட்சிக்கும், ஆட்சிக்கும் அலுவல்பூர்வமற்ற வகையில் ஆதரவு தரும் செயல்களை செய்ய தமக்கு எப்போதுமே நேரம் இருக்கும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் வென்றுள்ள, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பிற கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவியும், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு இரு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :