ரோஹிஞ்சா தாக்குதலைக் கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண சபை தீர்மானம்

மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து இலங்கையிலுள்ள கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் கிழக்கு மாகாண சபை வியாழக்கிழமை கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எம். எஸ் உதுமாலெப்பை இது தொடர்பாக அவசரத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
"மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது அரசு படைகளும், கடும் போக்கு அமைப்புகளும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் சென்றுள்ளனர்.
உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு என உருவாக்கப்பட்ட ஐ.நா சபை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளமால் மெளனம் சாதிப்பது குறித்து இலங்கை முஸ்லிம்கள் கவலை கொள்கின்றனர்.

எனவே ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இப்படுகொலைகளை நிறுத்துவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா சபையிடமும், மியான்மர் அரசிடமும் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்" என அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு தெரிவிக்கப்படும் என அவைத் தலைவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












