மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனையும், மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பையில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புப் பாதிப்பு

பட மூலாதாரம், AFP

மும்பை பங்குச் சந்தை, ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் ஒரு சொகுசு ஓட்டல் உள்பட ஒரு டஜன் இடங்கள் மீது நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக குண்டுகள் வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

வியாழக்கிழமை வெளியான தீர்ப்பில் ஃபைரோஸ் கான், தஹிர் மெர்ச்சன்ட் ஆகியோர் இந்த குண்டுவெடிப்புக்கான சதியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புப் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற அபு சலீம், போர்ச்சுக்கல்லில் இருந்து 2005ல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கும், கரிமுல்லா கான் என்பவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ரியாஸ் சித்திக்கி என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையில் 100 பேர் தண்டனை பெற்றனர்.

அந்த வழக்கு முடியும் தறுவாயில், 2003க்கும் 2010க்கும் இடையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு தனியாக விசாரிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆறு பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஜூனில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்புக்குப் பிறகு அவர்களில் ஒருவரான முஸ்தஃபா டோஸா என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான அபு சலீமுக்கு இந்த குண்டு வெடிப்புக்கு சம்பந்தமில்லாத வேறொரு கொலை வழக்கில் 2015-ம் ஆண்டு ஓர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :