ஜெயலலிதா சமாதியில் மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா சமாதியில் மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வை எதிர்த்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட பிறகு, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்களும் பிற அமைப்புகளும் போராட்டங்களை நடத்திவருகின்றன.

இன்றும் சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர்.

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிந்த இந்திய மாணவர் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு தியானம் செய்வதைப் போல அமர்ந்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போல தாங்களும் 40 நிமிடம் தியானம் செய்ய விரும்புவதாகக் கூறினர்.

இதற்குப் பிறகு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 27 பேர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இன்று காலை முதலே மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்துவதற்காக ஆட்கள் குவியலாம் என்ற அச்சத்தின் காரணமாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலைவரை யாரும் கடற்கரைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாலைக்குப் பிறகும் கடற்கரைக்குள் நுழைய மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக லயோலா கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அதேபோல, புதுக்கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

சென்னை கிண்டியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் அரசு கலைக் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையிலும் அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி அரசு கல்லூரி மாணவர்கள் சுமார் 1000 பேர் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி மாணவர்களும் நீட் தேர்விற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஐந்து இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 199 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 28 இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததாகவும் இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :