பெண் காஜிக்களிடம் திருமணம் செய்துகொள்ள யாரும் தயாரில்லை

பட மூலாதாரம், BMMA
- எழுதியவர், ஆபா ஷர்மா
- பதவி, பிபிசி
ஜெய்ப்பூரில், முஸ்லிம் பெண்களுக்கு திருமணம், முத்தலாக், ஹலாலா, கணவரால் வீட்டை விட்டு பெண்கள் வெளியேற்றப்படுதல் என பலவிதமான குடும்ப பிரச்சனைகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர் காஜிக்களான ஜாஹனாராவும், அஃப்ரோஜும். ஆனால், காஜி பயிற்சி பெற்ற இந்தப் பெண்களிடம் திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை என்பது இவர்களது மனக்குறை.
பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பின் முன்முயற்சியால் மும்பையில் 'தாரூல்-உலூம்-நிஸ்வான்' அமைப்பில் 30 முஸ்லிம் பெண்கள் கடந்த ஆண்டு 'காஜி' பயிற்சி பெற்றனர்.
பயிற்சிக்கு பிறகு நடைபெற்ற தேர்வில் 18 பெண்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களும் பெற்றனர். இவர்களில் ஜாஹனாரா மற்றும் அஃப்ரோஜ் உள்பட 15 பேர் இந்த ஆண்டு நடைபெற்ற நடைமுறைத் தேர்விலும் தேர்ச்சியடைந்தார்கள்.
ஆண் காஜிகளின் மேலாதிக்கம்
காஜி தேர்விலும் பயிற்சியிலும் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களது திறமைகளை இஸ்லாமிய சமுதாயம் இன்னமும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இஸ்லாமிய சமுதாயத்தின் பாரம்பரியப்படி ஆண் காஜிக்களே திருமணத்தை செய்துவைக்கின்றனர்.

பட மூலாதாரம், BMMA
இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை
தேசிய பெண்கள் நல வாரியத்தின் தலைவர் நிஷாத் ஹுசைன் பிபிசியிடம் கூறுகிறார், " பெண் காஜிக்களின் அலுவலகத்திற்கு திருமணத்தை நடத்திவைக்கக் கோரும் ஒரு விண்ணப்பம்கூட வரவில்லை" என்கிறார்.
ஜெய்பூரில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான்.
"திருமணத்தை நடத்தி வைக்கவேண்டியது காஜி ஆணா அல்லது பெண்ணா என்று குரான் ஷெரீஃபில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பெண்கள் காஜிக்களாக பணியாற்ற தொடங்கிவிட்டால், ஆண்களின் ஆதிக்கம் குறைந்துவிடும் என்று பழமைவாத சிந்தனை கொண்டவர்கள் அச்சப்படுகிறார்கள்" என்று காஜி அஃபோஜ் கூறுகிறார்.
"தங்கள் வீட்டில் திருமணம் நடக்கும்போது எங்களைக் கூப்பிடுவதாக பலர் சொல்வார்கள். ஆனால் புதிய வழக்கத்தை தொடங்கிவைக்க தயங்கும் அவர்கள், முதலில் வேறு ஒருவர் இதை தொடங்கட்டும், பிறகு அதில் இணைந்து கொள்வோம் என நினைக்கிறார்கள்" என்கிறார் காஜி ஜஹனாரா.

பட மூலாதாரம், ABHA SHARMA
விதிகள் ஏற்படுத்தும் தடை
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்கிற ஒரு விதியை 'தாரூல்-உலூம்-நிஸ்வான்' உருவாக்கியுள்ளது.
எங்களுடைய இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது, ஆனால் இதுவே எங்களுக்கு இடையூறையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் திருமணம் செய்து வைக்க பாரம்பரிய காஜிக்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், எங்கள் விதிகளின்படி, மணமக்களின் இரு தரப்பும் கொடுக்கும் தகவல்களை உறுதி செய்தபிறகே திருமணம் நடத்தி வைக்கமுடியும்.
'தாரூல்-உலூம்-நிஸ்வான்' இன் நிறுவனர் ஜகியா சோமனின் கருத்துப்படி, திருமண ஒப்பந்தம்தான் இஸ்லாமிய திருமணத்தின் அடிப்படை. "பாரம்பரிய முறையில் செய்யப்படும் திருமண ஒப்பந்தத்தில் பெயர், கையொப்பம் போன்ற விஷயங்களைத் தவிர வேறு எதுவும் முக்கியமாக இருப்பதில்லை".
"மோசமான கையெழுத்து மற்றும் மெஹர் பற்றி தெளிவாக தெரியாத காரணத்தால், விவாகரத்தின்போது பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. எனவே அதை கருத்தில் கொண்டு திருமண ஒப்பந்தத்தை வடிவமைத்திருக்கிறோம்" என்கிறார் ஜகியா.
காஜி ஜாஹனாராவே இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். நான்கு குழந்தைகளுக்கு தாயான ஜாஹனாராவை ஒரு அற்ப விஷயத்திற்காக வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் அவர் கணவர்.
"பெண்கள் காஜிக்களாவது பாரம்பரியத்திற்கு எதிரானது என்று வலுவான சமூக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மதத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்கிறார் ஜாஹனாரா.

பட மூலாதாரம், ABHA SHARMA
'ஆர்.எஸ்.எஸ்.சின் இன் திட்டம் பெண் காஜி'
ஜமீயத் உலேமா-ஏ-ராஜஸ்தானின் தலைவர் மொஹம்மத் அப்துல் வாஹீத் கத்ரி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு ஆதரவளித்தாலும், அவர்கள் காஜியாக பணியாற்றுவதை முற்றிலும் நிராகரிக்கிறார்.
உலேமாவிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்காதவரை பெண் காஜிக்களுக்கு பயிற்சி கொடுப்பதில் எந்த பயனுமில்லை, அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்கிறார் கத்ரி.
பெண்களை காஜிக்களாக மாற்றும் திட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம் என்று குற்றம் சாட்டுகிறார் அவர். முத்தலாக், பெண் காஜி என்று தங்கள் நேரத்தை யாரும் வீணடிக்கவேண்டாம் என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்
- 'நீட்' தேர்வு: பலன் தருமா போராட்டங்கள்?
- மருமகளை தாக்குவதற்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி!
- மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?
- மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை
- குண்டர் சட்டத்திலிருந்து மாணவி வளர்மதி விடுவிப்பு
- இளவரசியின் மேலாடை இல்லாத படம்: பிரஞ்சு பத்திரிகை 1 லட்சம் யூரோ இழப்பீடு தர உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












