மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?
- எழுதியவர், மார்க் வில்சன்
- பதவி, பிபிசி
மியான்மர் நாட்டின் ரகைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக விளங்கும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசின் தலைவராக செயல்முறையில் இருக்கும் ஆங் சான் சூ சி, அம்மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Reuters
வங்கதேசத்தை ஒட்டியுள்ள ரகைன் மாகாணத்தில் சுமார் பத்து லட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று அங்கு பரவலாகக் கருதப்படுவதால், மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.
அரசப் படையினருக்கும் அரூக்கன் ரொஹிஞ்சா சால்வேசன் ஆர்மி எனப்படும் ஆயுதக்க குழுவினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையால், சமீப மாதங்களில் இதுவரை சுமார் 90,000 ரொஹிஞ்சாக்கள் அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆயுதக்க குழுவினர் 30 காவல் சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் 12 காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
பல பத்தாண்டுகளாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மரில், மக்களாட்சியை நிறுவப் போராடிய சூ சி பல ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழித்த பின்பு 2015-இல் ஆட்சியைப் பிடித்தார்.
அவர் வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஒரு மனித உரிமைப் போராளியாக உருவெடுத்ததுடன், ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான வழியில் போராடியதற்காக 1991-இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

பட மூலாதாரம், Reuters
தன் சொந்த நாட்டிலேயே நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்பட இந்த நோபல் பரிசு பெற்றவர் ஏன் தோல்வியடைந்தார் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இவை.
அரசியல் சாசன வரம்புகள்
உள்நாட்டில் 'தாட்மடா' என்று அழைக்கப்படும் ராணுவ ஆட்சியால், மக்களாட்சிக்கான மாற்றம் மிகவும் கவனமாக செயல்படுத்தப்பட்டது.
2008-இல் ராணுவ அதிகாரிகளால் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், ஆயுதப் படைகள் அனைத்தும் தாட்மடாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் அதிகாரங்களையும் காவல் துறைக்கு வழங்காமல் ராணுவத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.
ரகைன் மாகாணத்தில் நிலவுவதுபோன்ற உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்களில், இந்த அரசிலமைப்பின்படி ராணுவத்தின் ஊது குழலாகத்தான் சூ சி தலைமையிலான அரசு செயல்பட முடியும்.

பட மூலாதாரம், Getty Images
மியான்மர் அரசு ஏதாவது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள விரும்பினாலும், "முக்கியத்துவம் வாய்ந்த நிழல் ராணுவ அமைப்பு" என்று உள்நாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்படும் தேசிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கவுன்சிலிடம் முதலில் கலந்தாலோசிக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் விதியாக உள்ளது.
ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் அமைச்சகங்கள்
மார்ச் 2016-இல் ஆங் சான் சூ சி அரசு பதவியேற்றபோது, தாட்மடாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம் , எல்லை விவாகரங்களுக்கான அமைச்சகம் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு தொடர்பான அமைச்சகங்களை ராணுவமே கட்டுப்படுத்தி வருகிறது.
ரகைன் மாகாணத்தில் நிலவும் நெருக்கடி இந்த மூன்று அமைச்சகங்களுடனும் தொடர்புடையதாக இருப்பதால், ரொஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முழு அதிகாரத்தையும் ராணுவமே பெற்றுள்ளது.
தாட்மடாவின் தலைமைத் தளபதியாக இருக்கும் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லாங் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
செப்டம்பர் 4-ஆம் தேதி அவர் ரொஹிஞ்சாமுஸ்லிம்களை எதிர்கொள்ள, ரகைன் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் 'ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள்' என்று அறிவித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்தபோது சூ சி தலைமையிலான அரசும் அதை ஆதரித்தது.
அரசியல் ஆதரவைத் தக்க வைக்கும் முயற்சி
ரொஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காப்பதுடன், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவராக அறியப்படுவதைத் சூ சி தவிர்த்தே வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ரகைன் மாகாணத்தில் இன அழிப்பு நிகழவில்லை என்று மறுப்பு தெரிவித்தபோது, அவர் தாட்மடாவை மறைமுகமாக ஆதரிப்பதுபோலத் தோன்றியது.
நேஷனல் லீக் ஃபார் டெமோக்ரசி என்னும் அவரது தலைமையிலான ஆளும் கட்சிக்கு உள்ள அரசியல் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதே அதன் மைய நோக்கமாக இருந்தது.
அவரது கட்சி 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் மெதுவாக நடந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வால், ஏப்ரல் 2017-இல் நடந்த இடைத் தேர்தல்களில் அவரது கட்சி தோல்வியடைந்தது.
ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைபாட்டை சூ சி எடுத்தால், மியான்மர் மக்கள் தொகையில் 90% இருக்கும் புத்த மதத்தினரின் ஆதரவை அவர் இழக்க நேரிடும்.
தற்போது இருக்கும் சூழல் அவர் எவ்விதமான அரசியல் சமரசங்களையும் செய்துகொள்ள அவர் விருப்பம் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













