'நீட்' போராட்டங்கள்: மாணவர்களுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், Twitter
"நீட்" தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் "நீட்" தேவையில்லை எனக் கோரி போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.
ஆனால், இந்த போராட்டங்களால் மாணவர்களுக்குப் பலன் கிடைக்குமா? என்பது பற்றி சமூக செயல்பாட்டாளர்கள் பிபிசியிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
"நீட்" தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரும் இரண்டு அவசர சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு ஒப்புதல் வழங்கும் வாய்ப்பு குறைவு என்று மத்திய அரசு கூறியது.
இதையடுத்து மத்திய அரசின் யோசனைப்படி, நீட் தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பதாக தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது.
ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சட்ட வரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது, "தமிழக அரசு உத்தேசித்துள்ள "நீட்" விலக்கல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது" என்ற தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
இதனால் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பால் தமிழகத்தில் பிளஸ் டூ முடித்து விட்டு அதிக மதிப்பெண் பெற்றபோதும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கருத்து எழுந்தது.

பட மூலாதாரம், Twitter
அனிதா தற்கொலை
இந்தப் பின்னணியில்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனிதா, பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்திருந்தார்.
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்பதால், அனிதா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில், "அனிதா தற்கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இது பற்றி ஜி.எஸ். மணி பிபிசி தமிழிடம் கூறுகையில், "மாணவி அனிதா உயிரிழந்த சம்பவத்தை தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் அரசியலுக்காக பயன்படுத்துகின்றன. நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார் எழுபது சதவீதத்தினர் மாநில வழி கல்வித் திட்டத்தில் படித்தவர்களே" என்றார்.
"தமிழகத்தில் அனிதா மரணத்தை காரணமாகக் கூறி சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டம் பிரச்னைக்கு தீர்வாக அமையாது" என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் பேசுகையில், "நீட் தேர்வு முறையை பொருத்தவரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவி அனிதா உயிரிழந்த சம்பவத்தில் ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொள்கிறோம். இந்த விஷயம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று" என்றார்.

பட மூலாதாரம், Twitter
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் "நீட்" தேர்வு முறைக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த சங்கல்ப் அறக்கட்டளையின் தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான மேஜர் குல்ஷன் கர்க், "அனிதா தற்கொலை சம்பவம் எங்களுக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
ஆனால், அவரது தற்கொலைக்கு நீட் தேர்வு முறை மட்டுமே காரணமா அல்லது அவரை அந்த முடிவு எடுக்க வேறு யாராவது தூண்டினார்களா என்பதையும் பார்க்க வேண்டும்" என்றார்.
"நீட்" தேர்வு முறைக்கு எங்கள் மாநில மாணவர்கள் தகுதி பெறவில்லை. அதனால் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஒரு மாநில அரசால் எப்படி கூற முடியும்? மாணவர்களின் திறமையை ஊக்குவித்து அவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதே மாநில அரசின் கடமை. அதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார் குல்ஷன் கர்க்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், "நீட்" தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் நிறைவு பெறும் தருவாயில் இந்த போராட்டங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இனி என்ன பலனைத் தந்து விடப் போகிறது என்றும் சில சமூக செயல்பாட்டாளர்களின் கூறுகின்றனர்.
"நீட்" விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆழமாக சிந்தித்து தமிழக அரசு செயல்பட வேண்டிய நேரமிது என்கிறார் "நீட்" தேர்வுக்கு எதிரான மாணவி அனிதாவின் போராட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவரான கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு.
பிபிசியிடம் அவர் பேசுகையில், "மாநில பாட திட்டத்தின்படி படித்த பல ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ நீட்" தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கான பொருளாதார உதவியை மாநில அரசு செய்ய ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் போன்ற குறுகிய சிந்தனையுடன் இந்த விவகாரத்தைப் பார்க்காமல் பாதிக்கப்படும் தமிழக மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கருதி ஆக்கப்பூர்வ முயற்சியை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், "தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கலுக்காக இயற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற மத்திய அரசை வற்புறுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். அதுவே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும்" என்றும் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தினார்.
இந்தியாவில் 42வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 2ஆவது பட்டியலில் இருந்த கல்வி 3ஆவது இணக்க பட்டியலுக்கு மாற்றபட்டது.
அதனால் மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை தொழில்சார் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே "நீட்" தேர்வு முறையை நாடு முழுமைக்குமான பொதுவான தேர்வு முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து, மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேர " "நீட்" தேர்வு முறை கட்டாயம் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
மொத்த இடங்கள் எத்தனை?
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உட்பட 22 அரசு மருத்துவ கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் ஒதுக்கியது போக 2,445 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படவுள்ள 1,198 இடங்கள் என மொத்தம் 3,643 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகிறது.
இதேபோல், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவ படிப்புகளுக்கான 1,330 இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
எம்பிபிஎஸ் படிப்பில் சேர இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 11,38,890 பேர் பதிவு செய்திருந்தனர். தமிழ் மொழி வாயிலாக தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 15,2016 பேரும் இதில் அடங்குவர்.
இதில் 10,90,085 பேர் தேர்வை எழுதியதாகவும் அவர்களில் 6,11,539 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது.
பிற வகுப்பினர் (5,43,473), இதர பிற்படுத்தப்பட்டோர் (47,382), தாழ்த்தப்பட்டோர் (14,599), பழங்குடியினர் (6,018), ஒதுக்கீடு அல்லாத மாற்றுத் திறனாளிகள் (67), இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (152), தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (38), பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (10) என மொத்தம் 6,11,739 பேர் உள்ளனர். 200 மாற்றுத்திறனாளிகள் அவர்கள் சார்ந்த வகுப்புகளின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் சொந்த மாநிலத்தில் மாநில பாட முறைப்படி படித்தவர்களின் நலனுக்காக கட்டப்பட்ட 22 மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் சேரும் வாய்ப்புக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரிவினர் முறையிடுகின்றனர்.
கல்விக்கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தால் கல்விக்கட்டணம், பல்கலைக்கழக கட்டணம், நூலக கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ஆண்டுக்கு 13,600 ரூபாய் வசூலிக்கப்படும்.
அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
அரசு கல்லூரியில் பல் மருத்துவ படிப்பில் சேர ஆண்டுக்கட்டணம் 11,600 ரூபாய் மற்றும் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் சேர இரண்டு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய்வரை வசூலிக்கப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கட்டணமாக 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

பட மூலாதாரம், Getty Images
நீட் அறிமுகமாவதற்கு முன்பு தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கட்டணமாக ரூ. 12 லட்சம் வரையும் கல்லூரியில் இடம் கிடைக்கவே 20 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய்வரை கேபிடேஷன் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
நீட் தேர்வு முறை அறிமுகத்தால், தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் படிப்பது, திறமையான மருத்துவர்களை உருவாக்க கிடைத்த வாய்ப்பு என்றும் சிலர் நீட் தேர்வை ஆதரிக்கின்றனர்.
நீட் தேர்வுக்கு தயாராகும் அளவுக்கு மாநில பாட திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக மாநில அரசு கருதினால், அதற்குரிய நடவடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.
ஆனால், "நீட்" தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் நிறைவு பெறும் தருவாயில் இந்த போராட்டங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இனி என்ன பலனைத் தந்து விடப் போகிறது என்றும் ஒரு பிரிவு சமூக செயல்பாட்டாளர்களின் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












