நீட் சர்ச்சை: அரசியல் தலைவர்கள் தெரிவித்தது என்ன?

நீட்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வுபடி தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெறுமா அல்லது விலக்கு கிடைக்குமா என்ற குழப்பம் நீண்டு கொண்டே இருந்த நிலையில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 22ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் பொது தேர்வில் 1176 மதிப்பெண்களை பெற்றும் நீட்டில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காத காரணத்தால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகத்தில் நீட் பற்றிய விவாதங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

ஆங்காங்கே நீட்டிற்கு எதிரான போராட்டங்களும் பரவலாக நடைபெற்று வருகின்றன; இந்நிலையில் நீட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை இங்கே பார்க்கலாம்.

"நீட் நுழைவுத் தேர்வு கடைக்கோடியில் இருக்கும் மாணவர்களும் மருத்துவக் கல்வியை பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது" என செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பயன் அடைந்துள்ளதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீட்

பட மூலாதாரம், Twitter/Tamilisai Soundarajan

"நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால் இந்த ஒரு ஆண்டிற்கு (நடப்பாண்டு) நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும்.

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் ஆகியவற்றில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிக்கையுடன் சுட்டிக்காட்டி தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றினால் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நீட் தேர்விற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்திருக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநில உரிமைகளை மீட்டு, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து நீட் தேர்வை அடியோடு அகற்றும்வரை திமுக ஓயாது என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட்

பட மூலாதாரம், Twitter/M.K.Stalin

ஆனால் "நீட் தேர்வை கொண்டு வந்ததே அன்றைய காங்கிரஸ் அரசும், திமுகவினரும்தான் எனவே நீட்டிற்கு எதிராக போராடுவதற்கு ஸ்டாலினிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை" என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று என நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்; மேலும் உச்ச நீதிமன்ற ஆணையை மறு ஆய்வு செய்வதற்கு தமிழகம் முயற்சி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அரசியல் தொடர்பான பல கருத்துகளை தெரிவித்து வரும் கமல் ஹாசனும் நீட்டிற்கு எதிராக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நீட்

பட மூலாதாரம், Twitter/Kamal haasan

"நீட் தேர்வை மனப்பூர்வமாக தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். நீட்டிலிருந்து விலக்கு கேட்பது மூலம், தேவை இல்லாமல் மாநில அரசே தமிழக மாணவர்களுக்கு சிரமத்தையும் குழப்பத்தையும் ஏற்படத்தக் கூடும் எனவே மேல்முறையீட்டிற்கு தமிழக அரசு செல்ல கூடாது" என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கான தனது பேட்டியில் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :