இந்தியாவில் மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க அவசர சட்டம்

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரே மாதிரியான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டுமென மூன்று வாரங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை ஓராண்டிற்கு ஒத்திவைக்கும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

பட மூலாதாரம், Thinkstock

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக்கப்படும். இதன் மூலம் நாடு தழுவிய மருத்துவ நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்படும்.

முன்னதாக, நாடு முழுவதும் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு சேர வேண்டியவர்கள், நாடு தழுவிய தேசிய தேர்வு ஒன்றை எழுதவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்கட்ட நுழைவுத் தேர்வு 1ஆம் தேதி நடைபெற்றது.

பட மூலாதாரம், PTI

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இம்மாதிரியான தேசிய நுழைவுத் தேர்வுகளை நடத்தினால் மாநில கல்வி வாரிய தேர்வு முறையின் கீழ் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என மாநிலங்களின் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், தேசிய நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி மே 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு, இவ்வாரத் துவக்கத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து உரிய முடிவெடுக்கும்படி வலியுறுத்தினர். இந்த நிலையில், மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் தெலங்கானா, ஜம்மு - காஷ்மீர் போன்ற பல மாநிலங்கள் தனியாக தகுதித் தேர்வுகளை நடத்துகின்றன. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.