மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய வழக்கு
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு விதித்த உத்தரவு செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வை (நீட் தேர்வு) நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கவேண்டுமென மத்திய அரசு கூறியது.
இதனடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது, அதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் இடம்பெறவில்லை.
இதையடுத்து தமிழக அரசு ஜூன் 22ஆம் தேதியன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணையில் மருத்துவக் கல்லூரிக்கான ரேங்க் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால், 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், ஒப்புதல் கிடைக்காவிட்டால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்ள மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 6 ஆயிரத்து 877 மேல்நிலைப் பள்ளிகளில் 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்களத் தேர்வு செய்து படித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 268 பள்ளிகளில் வெறும் 4 ஆயிரத்து 675 மாணவர்கள் மட்டுமே அறிவியல் படித்துள்ளனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களில் 88 ஆயிரத்து 431 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்கள் 4 ஆயிரத்து 675 மாணவர்கள்தான். இது தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் சுமார் 5 சதவீதம் மட்டுமே. மேலும் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.
ஆகவே, எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இடங்களில் 85 சதவீதம் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் மீதமுள்ள 15 சதவீதம் மற்ற பிரிவுகளின் கீழ் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும் என தமிழக அரசின் அரசாணை தெரிவித்தது.
இந்த ஒதுக்கீடு, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களை 15 சதவீதம் அளவுக்கு அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள இடங்களில் இந்த முறை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP/Getty Images
இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த சசி, தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தனர். தமிழக அரசின் அரசாணை மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது என்றும் இடஒதுக்கீடு என்பது, சமூக ரீதியாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்; படித்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் வழங்கக்கூடாது என்றும் ஆகவே, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசு கடைசி நேரத்தில் இந்த ஆணையை பிறப்பித்திருப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரிக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், ஜூலை ஐந்தாம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாகவும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை, மருத்துவக் கல்லூரி இயக்குநரகம், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை அதற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்படைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












