ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவீதமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவை நோக்கிச் செல்வது அசாதாரணமான தாக்கமாக கருதப்படுகிறது.
ஜிடிபி வளர்ச்சிச் சரிவு இரண்டாவது காலாண்டில் 8.8 சதவீதமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், தற்போது வெளியான முடிவுகளின்படி 8.5 சதவீதம் என்ற அளவுக்கே வளர்ச்சி சதவீதம் சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டின் ஜிடிபி முடிவுகள் தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய 15 முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.
1. 2020-21 நிதி ஆண்டின், இரண்டாவது காலாண்டான, ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரையான செப்டம்பர் காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி -7.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
2. கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி (நிலையான விலையில் - Constant Price) 35.84 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2020-21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி (நிலையான விலையில்) 33.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆக -7.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ மந்தநிலையில் இந்தியா தற்போது இருப்பது உறுதியாகிறது.
3. ஜிவிஏ தரவுகள்: ஜிவிஏ-வை ஆங்கிலத்தில் Gross Value Added (GVA) என்பார்கள். இந்த ஜிவிஏ என்பதும் ஒரு உற்பத்திக் குறியீடு போலத் தான். ஜிவிஏ தரவுகளுக்கும் ஜிடிபி தரவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 32.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ஜிவிஏ, இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 30.48 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஆக -7.0 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
4. துறை வாரியாக ஜிவிஏ தரவுகள்
- விவசாயம், வனம் & மீன் வளத் துறை 3.4% வளர்ச்சி
- சுரங்கம் & குவாரி துறையின் ஜிவிஏ -9.1% வீழ்ச்சி
- உற்பத்தித் துறையின் ஜிவிஏ 0.6% வளர்ச்சி
- மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் & பயன்பாட்டு சேவைகள் 4.4% வளர்ச்சி
- கட்டுமானத் துறையின் ஜிவிஏ -8.6% வீழ்ச்சி
- வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகள் எல்லாம் சேர்த்து -15.6% பெரும் வீழ்ச்சி
- நிதி, ரியல் எஸ்டேட், ப்ரொஃபெஷனல் சேவைகள் -8.1% சரிந்து இருக்கின்றன.
- பொதுமக்கள் நிர்வாகம், பாதுகாப்பு, மற்ற சேவைகள் எல்லாம் சேர்த்தால் -12.2% வீழ்ந்து இருக்கிறது.
5. ஜிடிபியில் செலவீனங்கள் மதிப்பீடு
- தனியார் நுகர்வுச் செலவுகள் ஒட்டுமொத்த ஜிடிபியில் 54.2 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
- அரசு நுகர்வுச் செலவுகள் ஒட்டு மொத்த ஜிடிபியில் வெறும் 10.9 சதவிகிதமாக வீழ்ந்து இருக்கிறது.
- மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (முதலீடு) 29 சதவிகிதமாகவும், பங்குகளின் மாற்றம் 2.1 சதவிகிதமாகவும், மதிப்புள்ள சொத்துக்கள் 0.6 சதவிகிதமாகவும், ஏற்றுமதிகள் 20.9 சதவிகிதமாகவும், இறக்குமதிகள் 19.5 சதவிகிதமாகவும், மற்ற சொத்துகள் 0.6 சதவீதமாகவும் முரண்பாடுகள் 1.7 சதவிகிதமாகவும் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
6. நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் -0.3 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 - 21 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் -2.9 சதவிகிதமாகச் சரிந்து இருக்கிறது.
7. கச்சா எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் -5.1 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 - 21 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் -5.7 சதவிகிதமாக வீழ்ச்சி தொடர்கிறது.
8. சிமெண்ட் உற்பத்தி வளர்ச்சி கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 0.2 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 - 21 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் -10.6 சதவிகிதமாக பெரும் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
9. வணிக வாகனங்களின் விற்பனை வளர்ச்சி, கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டிலேயே -35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருந்தது, இந்த 2020 - 21 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் வீழ்ச்சி குறைந்து -20.1 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீளவில்லை.
10. விமான நிலையங்களில் கையாளப்பட்ட பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 1.3% வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் -77.4 சதவிகிதம் என மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது.
11. ஒட்டுமொத்த வங்கி டெபாசிட்டுகள் வளர்ச்சி விகிதத்தைக் கண்டால், கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 9.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த செப்டம்பர் 2020 காலாண்டிலும் 10.5 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது.
12. நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI) கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 3.5 சதவிகிதமாக இருந்தது. இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கிறது. நுகர்வோர் பணவீக்கம் இவ்வளவு அதிகமாக இருப்பது, அரசுக்கும் நல்லதல்ல, ஆர்பிஐ-க்கும் நல்லதல்ல, குறிப்பாக மக்களுக்கு நல்லதல்ல.
13. சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் -1.2 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 செப்டம்பர் காலாண்டில் -7.1 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.
14. உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் -0.4 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 செப்டம்பர் காலாண்டில் -6.8 சதவிகிதமாக சரிவு அதிகரித்து இருக்கிறது.
15. மின்சாரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் 0.6 சதவிகிதமாக இருந்தது, இந்த 2020 செப்டம்பர் காலாண்டில் 0.1 சதவிகிதமாக வளர்ச்சி சரிந்து இருக்கிறது.
பிற செய்திகள்:
- நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்
- டொனால்ட் டிரம்ப்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா அதிபர்?
- சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- டெல்லி சலோ போராட்டம்: போலீஸ் தடையை மீறி டெல்லியில் நுழைய முயலும் விவசாயிகள்
- கருப்பின இசைத் தயாரிப்பாளர் மீது தாக்குதல்: பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
- அழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா? அவசரப்பட்டு விட்டதா அதிமுக?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












