திருச்சிற்றம்பலம் - ஊடக விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த், ரேவதி; இசை: அனிருத்; ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்; இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்.

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷை இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் இன்று ரிலீஸான நிலையில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

"இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம் பக்கா. திரைக்கதை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் ஃபீல் குட்டாக நகர்கிறது. வசனங்கள் படத்திற்கு பலம்" என ஒரு பாசிட்டிவான விமர்சனத்தைத் தந்திருக்கிறது சினி உலகம் இணையதளம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, "டெலிவரி பாய் வேலை செய்து வரும் திருச்சிற்றமபலத்தின் (தனுஷ்) வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக தனது அப்பா நீலகண்டனோடு (பிரகாஷ்ராஜ்) கடந்த 10 வருடமாக பேசாமல் இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக இருக்கும் ஷோபனா (நித்யா மேனன்) அவனுடைய நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொள்கிறார்.

ஒரு வீட்டிற்கு உணவை டெலிவரி செய்ய செல்லும் திருச்சிற்றம்பலம், தனது பள்ளிப் பருவ க்ரஷ்ஷான அனுஷாவை (ராஷி கன்னா) யதேச்சையாக சந்திக்கிறார். இருவரும் சற்று நெருங்கிப் பழக தொடங்கியவுடன் தனது காதலை அனுஷாவிடம் கூறுகிறார் திருச்சிற்றம்பலம். ஆனால், அந்தக் காதலை அனுஷா ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்பின், சில நாட்கள் காதல் தோல்வியில் வாடிவரும் திருச்சிற்றம்பலம், இரண்டாவது முறையாக வேறொரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். உறவுக்காரர் திருமணத்திற்காக ஊருக்கு செல்லும் திருச்சிற்றம்பலம், அங்கு ரஞ்சனி (பிரியா பவானி ஷங்கர்) என்ற பெண்ணைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரை காதலிக்க தொடங்கும் திருச்சிற்றம்பலத்திற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்கவில்லை என்று புலம்பும் திருச்சிற்றம்பலத்திடம், அவரது தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா) "உன் சிறு வயதில் இருந்து உனக்காக, உன்னுடன் மட்டுமே இருக்கும் ஷோபனாவைக் காதலி என்கிறார். இதன்பின், சற்று தயக்கத்துடன் ஷோபனாவைக் காதலிக்க தொடங்கும் திருச்சிற்றம்பலம், தனது காதலை நித்யா மேனனிடம் கூறுகிறார். ஷோபனா திருச்சிற்றம்பலத்தின் காதலை ஏற்று கொண்டாரா, இல்லையா?, தனது தந்தையின் மீது திருச்சிற்றம்பலத்திற்கு இருந்த கோபம் தணிந்ததா, இல்லையா என்பதே படத்தின் மீதி கதை" என்கிறது சினி உலகம்.

"நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில் ரசிக்கும்படியான ஜனரஞ்சக சினிமாவாக வெளியாகியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரையில் பார்வையாளர்களை ஏமாற்றாது." என்று இந்து தமிழ் திசை நாளிதழும் குறிப்பிடுகிறது.

"படத்தின் மிகப்பெரிய பலமே அதன் கதாபாத்திர தேர்வுகள் தான். நடிகர்கள் அனைவரும் அந்தந்த கேரக்டரில் பொருந்துவதோடு மட்டுமல்லாமல், கச்சிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

திருச்சிற்றம்பலமாக தனுஷ். கோட் - சூட் போட்டுக்கொண்டு ஹாலிவுட் சென்று திரும்பினாலும், மீண்டும் சாதாரண டீ-சர்ட், பேன்ட்டுடன் நடுத்தர குடும்ப இளைஞனாகவும், பக்கத்துவீட்டு பையனாகவும் பொருந்தும் வித்தை அவருக்கே வாய்த்தது.

அலட்டிக்கொள்ளாத நடிப்பு, தனித்த உடல்மொழி, தந்தையை 'அவன்' என கூறி அசால்ட்டாக நடப்பது, தாத்தாவை நண்பனாக டீல் செய்வது, சென்டிமென்ட் காட்சிகளில் உதட்டை மட்டும் நடிக்க வைப்பது மிரட்டுகிறார். 'கேர்ள் பெஸ்டி'க்கான அர்த்தத்தை கொடுக்கிறது நித்யா மேனனின் நடிப்பு. 'கண்ணாலே பேசினால் நான் என்ன செய்வேன' பாடல் உண்மையில் நித்யா மேனனுக்கு பொருந்துகிறது.

ராஷிகா கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

விருமனுக்குப்பிறகு தந்தையாக மீண்டும் பிரகாஷ்ராஜ். போலீஸ் அதிகாரியாக, தந்தையாக, அப்பாவிற்கு மகனாக மட்டுமல்லாமல், சில சென்டிமென்ட் காட்சிகளில் நம்மை சிலிர்க்க வைக்கிறார்.

எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது பாரதிராஜாவின் நடிப்பு. வெள்ளித்திரையில் மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

அவருடைய ஹ்யூமர் காட்சிகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் வெகுவாக ரசிக்கவும் செய்கிறது. நக்கல், லொள்ளு என புதுமையான பார்வையாளர்களுக்கு பாரதிராஜாவின் நடிப்பு நிச்சயம் ஈர்க்கும். முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, மு.ராமசாமிக்கு சில காட்சிகள் என்றாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்" என இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருப்பதாகச் சொல்கிறது இந்து தமிழ் திசை.

தேவையற்ற சண்டை, பிரமாண்டம், ஆபாசம் இல்லாமல் ஒரு யதார்த்தக் காதல் பிளஸ் குடும்பக் கதையாக இருப்பது படத்தை ரசிக்க வைப்பதாகச் சொல்கிறது தினமலர் நாளிதழின் இணையதளம்.

"படத்தில் நகைச்சுவைக்கென்று தனியாக யாரும் இல்லை. முக்கியக் கதாபாத்திரங்களே அவ்வப்போது டைமிங் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இடைவெளைக்குப் பிறகு தனுஷ் குடும்பத்தின் கிராமத்துப் பயணம் என படம் டைவர்ட் ஆகிறது. ஆனால், அங்கு ஒரு காதல் கதையைக் காட்டி ஒட்டியிருக்கிறார்கள். பின்னர் மீண்டுவந்து சரியாக முடிகிறது.

அனிருத் - தனுஷ் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நீண்ட இடைவெளிக்குப் பின் அமைந்த கூட்டணியில் பாடல்கள் திருப்தி தரவில்லை. தாய்க் கிழவி பாடல் மட்டும் கொஞ்சம் ஆட்டம் போடவைக்கிறது. பின்னணி இசை அனைத்தையும் இதற்கு முன்பு கேட்ட ஃபீலிங்" என்கிறது தினமலர் நாளிதழின் இணையதளம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :