You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடாவர் விமர்சனம்: அமலாபாலின் திரைப்படத்தில் நிஜமான 'சஸ்பென்ஸ்' இருக்கிறதா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: அமலா பால், ஹரீஷ் உத்தமன், ரித்விகா, முனீஸ் காந்த், நிழல்கள் ரவி, வேலு பிரபாகரன், அதுல்யா ரவி; இயக்கம்: அனூப் எஸ். பிரபாகர். வெளியீடு: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.
அமலா பால் தயாரித்து, நடித்திருக்கும் Cadaver திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இந்தப் படத்தின் கதையைப் பற்றிப் பேசும்போது, "அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் என கடாவர் படத்தின் தொடக்கமே சுவாரசியமாக உள்ளது" என்கிறது ஃபில்மிபீட் இணையதளம்.
"பிரபல மருத்துவரான சலீம் ரஹ்மானை ஒரு மர்ம மனிதன் காரோடு எரித்து கொலை செய்து விடுகிறான். இந்த கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி(திரிகுன்)க்கும் தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும்? வெற்றிக்கு வெளியில் இருந்து உதவும் அந்த மர்ம கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை." எனக் கதையை விவரிக்கிறது இந்த இணையதளம்.
படத்தில் வரும் சில திருப்பங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறது The Hinduவின் விமர்சனம்.
"Cadaver திரைப்படம், 'கொலையாளியைத் தேடும்' கதையைக் கொண்ட திரைப்படம். ஆனால், பரபரப்பு நம்மைத் தொற்றுவதேயில்லை. சில இடங்களில் படமாக்கல் சிறப்பாக இருக்கிறது என்றாலும் பல இடங்களில் அமெச்சூர் தனமாகவும் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் படத்தின் பலவீனமான அம்சங்கள் என்றாலும் படத்தின் இறுதியில் வரும் ட்விஸ்ட் இதையெல்லாம் ஏறக்கட்டிவிடுகிறது.
படத்தின் துப்பறியும் தருணங்களில் அமலா பால் சிறப்பாக நடித்திருந்தாலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் இன்னும் முயற்சி தேவை. படத்தின் தயாரிப்பாளரான அமலா பால்தான் திரையை பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறார் என்றாலும், கதை அவரைச் சுற்றி மட்டுமே நடக்கவில்லை. ஹரீஷ் உத்தமனுக்கும் நிறைய நல்ல காட்சிகள் கிடைத்திருக்கின்றன. படத்தில் பல காட்சிகளை யூகிக்க முடிகிறது. ஆனால், பல காட்சிகள் நம்பிக்கை ஏற்படுத்தும்வகையில் இருக்கின்றன." என்கிறது The Hindu.
திரைக்கதையில் இருந்ததை இயக்குனர் அனூப் பணிக்கர் முடிந்த அளவு சிறப்பாகவே படமாக்கியிருப்பதாகச் சொல்கிறது Times of India இணையதளம்.
"அமலா பாலின் பாத்திரப் படைப்பும் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் பாராட்டத்தக்கவை. நிச்சயமாக ஒரு தைரியமான நடவடிக்கைதான். குட்டையான முடியும் அறிவாளித் தோற்றத்துடனும் படத்தில் முக்கியமான பாத்திரம் அவர்தான் என்பதை உறுதிசெய்துவிடுகிறார். பிணவறையிலும் பிரேதப் பரிசோதனை செய்யும் இடங்களிலும் அவருடைய நடிப்பு நிச்சயம் கவனிக்கத்தக்கது. ஆனால், திரைக்கதையில் ஏற்றஇறக்கம் இருக்கிறது. முக்கியமான பகுதிகள் எல்லாம் முதல் பாதியிலேயே வந்துவிட்டதால், இரண்டாம் பாதியில் பெரிதாக ஏதுமில்லை. சில காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். ஆனால், அப்படியே விட்டிருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
உதாரணமாக, ஒரு உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென அமலா பால் சொல்லும்போது, அதை ஒரு சரியான சூழலில் உருவாக்கவில்லை. இத்தனைக்கும் கதையில் மிக முக்கியமான தருணம் அது.
இந்தப் படத்தில் மிகவும் ஆச்சரியம் தருவது இந்தப் படத்தின் பாத்திரங்களும் படமாக்கலும்தான். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேபோல, ரஞ்சின் ராஜின் பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், திரிகுன், அதுல்யா ரவி ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.
அபிலாஷ் பிள்ளை எழுதிய திரைக்கதை சற்று வேறு மாதிரி இருந்திருந்தால், Cadaver இன்னும் சிறப்பான படமாக இருந்திருக்கும். ஆனால், திரைக்கதையில் இருந்ததை முடிந்த அளவு நன்றாகவே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அனூப் பணிக்கர். நிச்சயம் பார்க்கலாம்." என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்