இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை விளையாட மறுத்த வங்கதேசம்: ஐ.சி.சி.யின் பதில் என்ன?

வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான தற்போதைய பதற்ற நிலையைக் காரணமாகக் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களின் அணி பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்குப் பிறகு, தேவையான அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் போட்டிகளை மாற்றுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சிக்கலைத் தீர்க்க ஐசிசி நிர்வாகம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பல்வேறு விவாதங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தியதாகவும், மத்திய மற்றும் மாநில காவல் துறைகளின் ஆதரவு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் திட்ட விவரங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் ஐசிசி கூறியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

ஐசிசி தனது அறிக்கையில் என்ன கூறியுள்ளது?

ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 தொடர் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும் என்றும், வங்கதேச அணியின் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் ஐசிசி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐசிசியின் கூற்றுப்படி, "வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்கள் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, ஜனவரி 21, புதன்கிழமை காணொளி மாநாடு மூலம் நடைபெற்ற ஐசிசி கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது".

மேலும், "சுயாதீன ஆய்வு உட்பட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுகளின்படி, நாட்டில் உள்ள எந்தப் போட்டி அரங்கிலும் வங்கதேச வீரர்கள், ஊடகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது" என்று தெரிவித்தது.

"போட்டி தொடங்குவதற்கு மிக அருகிலுள்ள இந்த நேரத்தில் எந்த மாற்றங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையில் அட்டவணையை மாற்றுவது, எதிர்கால ஐசிசி போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும்" ஐசிசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பேசிய ஐசிசி செய்தித்தொடர்பாளர், "இந்த முயற்சிகள் அனைத்துக்கும் மத்தியில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்து வருகிறது. மேலும், உள்ளூர் லீகில் அதன் ஒரு வீரர் தொடர்பாக நடந்த, இதற்கு சம்பந்தமில்லாத ஒரு தனி சம்பவத்துடன், போட்டியில் பங்கேற்பதை மீண்டும் மீண்டும் இணைத்து வருகிறது. இந்த விவகாரம், போட்டியின் பாதுகாப்பிற்கோ அல்லது பங்கேற்பு நிபந்தனைகளுக்கோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய "அச்சுறுத்தல் மதிப்பீடுகள், போட்டியை நடத்தும் நாடுகளின் உறுதிமொழிகள் மற்றும் போட்டிக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கேற்பு விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஐசிசியின் போட்டி அரங்குகள் மற்றும் அட்டவணை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகள், போட்டியில் பங்கேற்கும் அனைத்து 20 நாடுகளுக்கும் சமமாகப் பொருந்தும். வங்கதேச அணியின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையிலான எந்த சுயாதீன பாதுகாப்பு கண்டறிதலும் இல்லாத நிலையில், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி-யால் முடியாது" என்று கூறினார்.

இந்த சர்ச்சை எவ்வாறு தொடங்கியது?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ராஜதந்திர உறவுகள் ஆகஸ்ட் 2024-ல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து சமூகத்திற்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தியாவில் பல இந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

இதற்கிடையில், ஐபிஎல் 2026-க்காக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரூ.9.2 கோடிக்கு வாங்கியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கேகேஆர் அணியின் இணை உரிமையாளரான திரைப்பட நடிகர் ஷாருக் கானை இந்து அமைப்புகள் மற்றும் பல பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்குப் பிறகு, ஜனவரி 2-ம் தேதி, முஸ்தபிசுரை அணியிலிருந்து நீக்குமாறு கேகேஆர் அணியை பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

முஸ்தபிசுரை அணியிலிருந்து நீக்கியது குறித்து, வங்கதேச இடைக்கால அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகரான ஆசிஃப் நஸ்ருல், "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் செய்யப்படும் அவமதிப்பு எந்தச் சூழ்நிலையிலும் பொறுக்கப்படாது" என்று தெரிவித்திருந்தார்.

ஜனவரி 4-ம் தேதி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளில் பங்கேற்க இந்தியாவுக்கு தனது கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

இதையடுத்து, போட்டி அரங்குகளை மாற்றுமாறு ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து, தங்கள் அணியின் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

வங்கதேசம் கலந்துகொள்ளாவிட்டால்?

ஒருவேளை வங்கதேசம் இந்த டி20 உலகக் கோப்பையில் கலந்துகொள்ளாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி அந்த வாய்ப்பைப் பெறலாம் என்று தி ஹிந்து செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச டி20 ரேங்கிங் அடிப்படையில் அந்த அணி வாய்ப்பைப் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை பங்கேற்பை உறுதி செய்ய ஜனவரி 21 வரை வங்கதேசத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், அது இன்னொரு நாள் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் ஐசிசி வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ நிறுவனத்தை மேற்கோள் காட்டி 'தி ஹிந்து' செய்தி தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு