You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா, ரஷ்யா - இந்தியா என்ன செய்கிறது?
- எழுதியவர், சித்தார்தா ராய்
- பதவி, சீன விவகாரங்கள் நிபுணர்
2025 ஆம் ஆண்டில், உலகின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த மதிப்பு, அவை அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்கள் மீது செய்துள்ள முதலீட்டைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
மத்திய வங்கிகள் வைத்துள்ள தங்கத்தின் கையிருப்பு 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க கருவூல பத்திரங்களின் மீது செய்யப்பட்ட முதலீடுகள் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக தொடர்கிறது.
அமெரிக்க டாலருக்கு பிறகு, யூரோவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய சர்வதேச கையிருப்பாக தங்கம் மாறியுள்ளது.
2022-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சொத்துகளை முடக்கிய பிறகு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் நடவடிக்கையை வேகப்படுத்தியதால் இந்த மாற்றமானது நிகழ்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்த மூன்று ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு ஆயிரம் டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கின. அதன் விலை உச்சத்தில் இருந்தபோதும் கூட 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 634 டன் தங்கம் வாங்கப்பட்டது.
சீன ஆய்வாளர்கள் கூற்றின்படி, தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பது மத்திய வங்கிகள் டாலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, டாலர் தொடர்புடைய சொத்துகள் மீதான அபாயங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.
டாலரின் மீதான நம்பகத்தன்மை பலவீனமடையும் பட்சத்தில் அதிகப்படியான தங்கக் கையிருப்பு, ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்புகளை நிலைப்படுத்த உதவுகிறது.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் இருப்பு 7.6% ஆக உள்ளது. அடுத்ததாக ரஷ்யா மற்றும் இந்தியாவின் சர்வதேச கையிருப்பில் தங்கத்தின் பங்கு முறையே 41.3% மற்றும் 13.57% ஆக உள்ளது.
அமெரிக்க கடன் அதிகரிப்பு, கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை, உலகளவிலான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகள் டாலரைச் சார்ந்திருப்பதை படிப்படியாக குறைத்து, தங்க கையிருப்பை படிப்படியாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது உலகளாவிய நிதி கட்டமைப்பில் அதிக பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும்.
2024-ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் ரஷ்யா இருந்தபோது பிசிபிபிஐ (BCBPI) எனப்படும் பிரிக்ஸ் எல்லை கடந்த பரிவர்த்தனை முன்னெடுப்பை (BRICS Cross-Border Payments Initiative) ரஷ்யா முன்மொழிந்தது.
இந்த முன்னெடுப்பு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை எளிமையாக்குவதையும், அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்ட நிதி கட்டமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய போக்கானது சீனாவின் யுவான் நாணயத்திற்கு சர்வதேச பயன்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
உலக தங்க கவுன்சில், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த பகுப்பாய்வு, பிரிக்ஸ் நாடுகளில், குறிப்பாக சீனாவில் தங்கக் குவிப்பு முறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. தங்கக் குவிப்பு எவ்வாறு யுவானின் சர்வதேச பயன்பாட்டுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதையும் இது பகுப்பாய்வு செய்கிறது.
இருப்பினும், சீன நாணயத்தை முழுமையாக உலகமயமாக்குவதற்கு தற்போதைய நிலை இன்னும் போதுமானதாக இல்லை.
பிரிக்ஸ் நாடுகளின் தங்க இருப்பு
பிரிக்ஸ் நாடுகளில், குறிப்பாக உலகின் மிகப்பெரிய இரண்டு தங்க உற்பத்தியாளர்களான சீனாவும் ரஷ்யாவும் தங்களின் தங்கக் கையிருப்புகளை அதிகரிப்பது புதிது அல்ல.
2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, இரு நாடுகளும் தங்களின் தங்கக் கையிருப்புகளை உயர்த்தத் தொடங்கின. அந்த நெருக்கடி அமெரிக்க வங்கி அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியதுடன், டாலர் மதிப்பில் உள்ள சொத்துகளில் முதலீடு செய்வது தொடர்புடைய அபாயங்களை மறுபரிசீலனை செய்ய வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கட்டாயப்படுத்தியது.
இருப்பினும், இந்த இரு நாடுகளின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. ரஷ்யா, பெரிய அளவிலும் தொடர்ச்சியான முறையிலும் தங்கம் வாங்கும் கொள்கையைப் பின்பற்றியது. 2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய படையெடுப்பு மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த பரவலான பொருளாதார தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் தங்கக் கையிருப்பு உச்ச நிலையை எட்டியது.
இதற்குப் பிறகும், ரஷ்யாவின் தங்கக் கையிருப்பு பெரும்பாலும் நிலையானதாகவே இருந்தது. 2025-ஆம் ஆண்டில், உள்நாட்டு நிதிநிலை பற்றாக்குறையை ஈடுசெய்ய, ரஷ்யா தங்களின் தங்கக் கையிருப்பின் ஒரு பகுதியை விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் அணுகுமுறை திட்டமிட்டதும், விலையை அடிப்படையாகக் கொண்டதுமாக இருந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும்போது, சீன மக்கள் வங்கி அதிக அளவில் தங்கத்தை வாங்கியது.
2015-ஆம் ஆண்டில் சீனா கொள்முதல் செய்த 708.22 டன் தங்கமே இதுவரையிலான மிகப்பெரிய வருடாந்திர கொள்முதலாகும். அமெரிக்காவின் மத்திய வங்கி, 2013-ஆம் ஆண்டில் தனது பத்திரம் வாங்கும் திட்டத்தை படிப்படியாகக் குறைக்கப் போவதாக அறிவித்ததற்குப் பிறகு இந்த கொள்முதல் நடைபெற்றது.
2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனா தங்கம் வாங்கும் வேகத்தை குறைத்தாலும், குறைந்த அளவில் தங்கத்தை வாங்குவதை தொடர்ந்தே வருகிறது. இது நீண்டகால அடிப்படையில் தங்கக் கையிருப்புகளை அதிகரிக்கும் திட்டத்தில் சீனா உறுதியாக இருப்பதை காட்டுகிறது.
2018-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக தங்கக் கையிருப்புகளை இந்தியா அதிகரிக்கத் தொடங்கியது.
ரஷ்யா மற்றும் சீனாவை விட மாறுபட்ட வகையில் (டாலருக்கு அப்பாலான சர்வதேச வர்த்தக கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கக் கடன் பத்திரங்களில் தங்களின் முதலீடுகளை விரைவாகக் குறைத்த நாடுகளாக இருந்த போதிலும்), இந்தியா 2024-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்களில் பெருமளவில் முதலீடு செய்துவந்தது. இதன் நோக்கம், வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குள் கூடுதல் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதாகும்.
ஆனால், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்களில் இந்தியாவின் முதலீடு தற்போது 21% ஆக உள்ளது. உலகளாவிய நிதி அபாயங்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையாக, தங்கம் மற்றும் டாலர் அல்லாத பிற சொத்துகளில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் மாற்று பணப் பரிமாற்ற முறை
உலகளவில் அந்நிய செலாவணி கையிருப்பு தங்கத்தை நோக்கி நகரும் நிலையில், லண்டன் உலோக சந்தை (London Metal Exchange) முறையை போல மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே மதிப்பு மிக்க உலோகங்களுக்கான சந்தை (Precious Metals Exchange) முறையை உருவாக்க ரஷ்யா முன்மொழிந்தது.
நாடுகள் மீதான பொருளாதார தடைகளால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து வர்த்தகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், 2025-இல் பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு வரை இந்த திட்டத்தில் எந்த உறுதியான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதற்கு சீனாவின் தற்போதைய தங்க சந்தை அமைப்பு ஒரு காரணம் என நம்பப்படுகிறது. சீனா ஏற்கெனவே யுவான் அடிப்படையில் ஷாங்காய் தங்க சந்தையை இயக்குகிறது.
ஹாங்காங்கில் சர்வதேச தங்க வர்த்தக மையத்தை நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. இதனால், புதிய பிரிக்ஸ் பரிவர்த்தனை மையத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, உலக தங்க சந்தையில் சீனாவுக்கு ஏற்கெனவே உள்ள அமைப்பை பயன்படுத்துவது நடைமுறைக்கு எளிமையானதாக கருதப்படுகிறது.
2022-ஆம் ஆண்டிலிருந்து, பிரிக்ஸ் நாடுகளுக்கான நாணயத்தை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதில், தங்கம் அல்லது பிற பொருட்களுடன் இணைக்கப்பட்ட ஒரு நாணயம் குறித்த யோசனைகளும் அடங்கும். ஆனாலும், இந்த அனைத்து முன்மொழிவுகளும் தற்போது வரை விவாத நிலையிலேயே உள்ளன.
விரிவாகப் பார்க்கும்போது, பொருளாதார வளர்ச்சி நிலைகளில் உள்ள வேறுபாடுகள், கொள்கை முன்னுரிமைகள் மற்றும் வெளிநாட்டு கொள்கை அணுகுமுறைகள் ஆகியவை, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்தியுள்ளன.
இது, அந்தந்த நாடுகளின் நாணயங்களில் வர்த்தகத்தை அதிகரிக்கும் முயற்சிகளையும் பாதிக்கிறது. அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் வர்த்தக சமநிலை மற்றும் பணப் புழக்கத்தைச் சார்ந்தவையாகும் .
இந்தியா–சீனா இடையிலான 102.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகப் பற்றாக்குறை இந்த சவாலைத் தெளிவாக காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டால், சர்வதேச அளவில் குறைந்த பயன்பாடு கொண்ட நாணயத்தை (ரூபாயை) சீனா பெரும் அளவில் கையிருப்பாக வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
இந்த காரணத்தினால், இத்தகைய ஒப்பந்தங்கள் சீனாவுக்கு ஈர்ப்புடையதாக கருதப்படுவதில்லை.
பிரிக்ஸ் நாடுகளை தாண்டி யுவானை சர்வதேசமயமாக்கல்
பிரிக்ஸ் நாடுகளுக்கு அப்பால், எல்லைத் தாண்டிய பரிவர்த்தனைகளில் யுவான் பயன்பாட்டை அதிகரிக்க தனது நிதி அமைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இதற்காக சீனா முன்னெடுத்து வரும் முக்கிய முயற்சிகளில் ஒன்று 'எம்பிரிட்ஜ்' திட்டமாகும். இது, ஹாங்காங், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணய தளமாகும்.
சீனாவில் அதிகரித்து வரும் தங்க கையிருப்பு யுவானின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பார்வையை வலுப்படுத்தியுள்ளது. 2009-ஆம் ஆண்டில் யுவானை உலகமயமாக்கும் திட்டத்தை சீனா தொடங்கியதிலிருந்து, 32 இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தங்களில் சீன மக்கள் வங்கி கையெழுத்திட்டுள்ளது.
அதன் மொத்த மதிப்பு 4.5 டிரில்லியன் யுவானாகும். இதில் கிட்டத்தட்ட பாதியளவு ஆசிய நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.
இந்த நட்பு நாடுகளில், 15 நாடுகள் கச்சா பொருட்கள் (commodities) தொடர்பான வர்த்தகத்தை சீனாவுடன் மேற்கொள்கின்றன. எட்டு நாடுகள் சீனாவை மையமாகக் கொண்ட உற்பத்திச் சங்கிலியுடன் இணைந்துள்ளன.
சர்வதேச நாணயமாக அமெரிக்க டாலரின் ஆதிக்கம் சவாலுக்குள்ளாகி வரும் நிலையில், யுவானில் பொருட்களை வர்த்தகம் செய்யும் முயற்சிகளை சீனா அதிகரித்து வருகிறது.
யுவானுக்கான சர்வதேச கட்டமைப்பையும் சீனா விரிவுபடுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், சீன மக்கள் வங்கி 33 நாடுகளில் உள்ள 35 வெளிநாட்டு யுவான் கிளியரிங் வங்கிகளுக்கு (ரென்மின்பியில் சர்வதேசப் பணப் பரிமாற்றங்களைச் செயல்படுத்த உதவும் வங்கிகள்) அனுமதி வழங்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் மட்டும், இந்த வங்கிகள் மூலம் 937.6 டிரில்லியன் யுவான் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 47.3 சதவிகிதம் அதிகமாகும். அதே ஆண்டில் எல்லை தாண்டிய யுவான் ரசீது மற்றும் பணம் செலுத்துவது 64.1 டிரில்லியன் யுவானாக இருந்தது. இது ஆண்டு அடிப்படையில் 23 சதவிகித உயர்வாகும்.
பிராந்திய அளவில், 2024-ஆம் ஆண்டில் ஆசியான் (ASEAN) நாடுகளுடனும் ஐரோப்பாவுடனும் சீனா மேற்கொண்ட யுவான் பரிவர்த்தனைகள் தலா 8.9 டிரில்லியன் யுவானாக இருந்துள்ளது.
ஆசியான் பிராந்தியத்தில் யுவான் பரிவர்த்தனை வளர்ச்சி 50.7 சதவிகிதமாக இருந்த நிலையில், ஐரோப்பாவில் அது 13.1 சதவிகிதமாக மட்டுமே இருந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை அமைப்பு (Cross-Border Interbank Payment System – CIPS) 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தமாக சுமார் 600 டிரில்லியன் யுவான் மதிப்பிலான பரிவர்த்தனைகளை கையாளும் எனக் கணிக்கப்பட்டது.
இத்தகைய சாதனைகள் இருந்தபோதிலும், உலகளவில் மத்திய வங்கிகளின் அந்நிய செலாவணி கையிருப்பில் யுவானின் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது. 2024ஆம் ஆண்டில் அது வெறும் 2.06% ஆக மட்டுமே இருந்தது.
2025-ஆம் ஆண்டு நவம்பர் நிலவரப்படி, உலகளாவிய பரிவர்த்தனைகளில் யுவானின் பங்கு 2.94% ஆக இருந்தது. ஒரு நாணயத்தின் சர்வதேசமயமாக்கல் பொதுவாக, வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது, மத்திய வங்கிகளின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதன் நிலை, விலை நிர்ணயத்தில் அதன் பங்கு, முதலீடு மற்றும் நிதி திரட்டலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
சீனாவின் பொருளாதார வலிமையும், அதன் வர்த்தக ஆதிக்கமும், யுவானுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கினாலும், நிதிச் சந்தைகளின் வெளிப்படையான செயல்பாடு, செறிவு மற்றும் நிதி கொள்கைகளை முன்கூட்டியே கணிக்க முடிவது ஆகிய அம்சங்களில், யுவான் இன்னும் முக்கிய சர்வதேச நாணயங்களை விட பின்தங்கியே உள்ளது.
சீனாவின் அதிகரித்து வரும் தங்கக் கையிருப்புகள், யுவான் மீதான நம்பிக்கையை உயர்த்தி, அதன் சர்வதேசமயமாக்கலுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளன. ஆனால், அது உண்மையாகவே ஒரு சர்வதேச நாணயமாக மாற, மூலதன கணக்கு தாராளமயமாக்கல் அவசியமாகிறது. (அதாவது, ஒரு நாட்டின் அரசாங்கம், வெளிநாட்டினரின் முதலீடுகள், கடன் வாங்குதல், மற்றும் பிற மூலதன பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகளைக் குறைத்து, எளிதாக்குவதாகும்)
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, நிதித் துறையில் வெளிப்படைத்தன்மையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் அந்நிய செலாவணி கையிருப்பாக யுவானின் பங்கை விரைவாக உயர்த்துவதைக் காட்டிலும், வர்த்தக பயன்பாட்டிலும் எல்லைத் தாண்டிய பரிவர்த்தனைகளிலும் அதன் பயன்பாட்டை அதிகரிப்பதே சீனாவின் முன்னுரிமையாக உள்ளது.
இதற்காக, மூலதன கணக்கை தாராளமயமாக்குவதும், நாணயத்தை முழுமையாக மாற்றத்தக்கதாக்குவதும் அவசியம். ஆனால், இதை சீனா தவிர்க்க விரும்புகிறது.
இந்த ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?
இந்தக் கட்டுரைக்கான ஆய்வுத் தரவுகள், உலக தங்கக் கவுன்சில் (World Gold Council), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund), உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான நிதி தொலைத்தொடர்பு சங்கம் (SWIFT) மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியவை வெளியிட்ட யுவான் சர்வதேசமயமாக்கல் தொடர்பான அறிக்கைகளில் இருந்து பெறப்பட்டவை.
இந்த ஆய்வு 2007 முதல் 2025 வரையிலான பெரும்பாலான காலப்பகுதியை உள்ளடக்கியது. 2007ஆம் ஆண்டு என்பது உலக நிதி நெருக்கடிக்கு முந்தைய ஆண்டாகும். பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் தங்கக் குவிப்பு நடைமுறைகளில் காணப்படும் போக்குகளை ஆய்வு செய்ய, தரமான பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டது.
சீனாவின் தங்கக் கையிருப்பு யுவானை சர்வதேசமயமாக்கும் அதன் முயற்சிக்கு எவ்வாறு சாதகமான சூழலை உருவாக்குகின்றன என்பதை மதிப்பீடு செய்ய, இந்த ஆய்வு குறிப்பாக சீனா மீது கவனம் செலுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு