'ஐரோப்பாவை மிரட்டிப் பணியவைக்க முடியாது' - டென்மார்க் பிரதமர்
"ஐரோப்பாவை மிரட்டிப் பணியவைக்க முடியாது" என்று டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து குறித்த கருத்துகளைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிரீன்லாந்து தொடர்பாக டிரம்பின் வர்த்தக வரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பரிசீலித்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்து குறித்த தனது முன்மொழிவை டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்த்தால், அந்த 8 அமெரிக்க நட்பு நாடுகள் மீது பிப்ரவரி மாதம் புதிய வர்த்தக வரிகளை விதிப்பேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த முன்மொழிவு, டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொள்வதை உள்ளடக்கியது. கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அதை பலவந்தமாக கைப்பற்றும் சாத்தியக்கூறையும் அவர் நிராகரிக்கவில்லை.
டிரம்பால் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாடுகள், அவரது திட்டம் உறவுகளில் ஒரு "ஆபத்தான சீரழிவை" ஏற்படுத்தும் என்று கூறி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகள் ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியையும் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.