You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரீன்லாந்து: டிரம்ப் அறிவிப்பை சீனா எதிர்க்கும் வேளையில் ரஷ்யா மகிழ்வது ஏன்?
கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு 'அத்தியாவசியமானது' என்றும், அது நடக்காவிட்டால், ரஷ்யாவும் சீனாவும் 'கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும்' என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாதிடுகிறார்.
"அங்கே ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன, ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, சீனாவின் போர்க்கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன," என்று சமீபத்தில் டிரம்ப் கூறினார்.
கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் ஆளுகைக்குட்பட்ட பகுதியளவு தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும். டென்மார்க்கும் அதன் கூட்டாளிகளும் டிரம்பின் கிரீன்லாந்து திட்டத்தை எதிர்த்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக தனது முன்மொழிவை எதிர்த்தால், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய 8 நாடுகள் மீது பிப்ரவரி மாதம் புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் ஜனவரி 17-ஆம் தேதி தெரிவித்தார்.
கிரீன்லாந்தை 'ரஷ்யா மற்றும் சீனா ஆக்கிரமிக்கும்' என்ற அச்சத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். கிரீன்லாந்து தொடர்பான டிரம்பின் எண்ணங்கள் இந்த இரு நாடுகளிலும் அதிருப்தியைத் தூண்டும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
டிரம்பின் அறிக்கைக்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ரஷ்யா அதற்கு வேறுவிதமான எதிர்வினையை ஆற்றியுள்ளது.
ரஷ்யாவின் எதிர்வினை என்ன?
ரஷ்ய அரசு நடத்தும் செய்தித்தாள் டிரம்பைப் பாராட்டியுள்ளதுடன், கிரீன்லாந்து தொடர்பான டிரம்பின் திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பியத் தலைவர்களை விமர்சித்துள்ளதாக பிபிசி ரஷ்ய சேவை ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கூறுகிறார்.
"அமெரிக்க அதிபரின் வரலாற்று வெற்றிக்கான வழியில் டென்மார்க்கின் பிடிவாதமும், அமெரிக்காவின் நண்பர்களாகக் கருதப்படும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட முரண்டு பிடிக்கும் ஐரோப்பிய நாடுகளின் போலி ஒற்றுமையும் தடையாக உள்ளன," என்று ரஷ்ய செய்தித்தாளான 'ரோசிஸ்கயா கெசட்டா' எழுதியுள்ளது.
"2026 ஜூலை 4 அன்று, அமெரிக்கா தனது சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. அதற்குள் டிரம்ப் கிரீன்லாந்தைக் கையகப்படுத்தினால், அமெரிக்காவின் பெருமையை நிலைநாட்டிய நபராக அவர் வரலாற்றில் இடம்பிடிப்பார்."
"டிரம்பால் கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், அத்தகைய சாதனையை அமெரிக்க மக்கள் நிச்சயமாக மறக்க மாட்டார்கள்." என்றும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
இந்த ரஷ்ய செய்தித்தாள் டிரம்பிற்கு அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால், 'எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க வேண்டாம்'.
"கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பின்வாங்குவது ஆபத்தானது. இது இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் நிலையை பலவீனப்படுத்தும் மற்றும் கேபிடல் ஹில்லில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற வழிவகுக்கும், இது டிரம்பைப் பாதிக்கும். இருப்பினும், தேர்தலுக்கு முன்னதாக கிரீன்லாந்தை விரைவாகக் கையகப்படுத்துவது இந்த அரசியல் போக்கை மாற்றியமைக்கக்கூடும்."
சீனாவின் பதில் என்ன?
கிரீன்லாந்து தொடர்பான அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குச் சீனா பதிலளித்துள்ளது.
அமெரிக்கா தனது சொந்த நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக, 'சீன அச்சுறுத்தல்' என்ற போலிக் காரணத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை (ஜனவரி 19) தெரிவித்தார்.
"ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலான சர்வதேசச் சட்டமே, தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கின் அடித்தளமாகும். அது நிலைநிறுத்தப்பட வேண்டும்," என்று செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே குவோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
'பிபிசி மானிட்டரிங்' தகவல்படி, டிரம்பின் கிரீன்லாந்து திட்டம் மற்றும் அவரது அறிக்கைகள் தொடர்பாகச் சீன ஊடகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, சீனாவை ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரிப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது, இரண்டாவதாக, இதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது குறித்த ஐரோப்பாவின் 'நெருக்கடியை' முன்னிலைப்படுத்துவது.
ஜனவரி 12-ஆம் தேதி சீன அரசு நடத்தும் 'குளோபல் டைம்ஸ்' நாளிதழில் வெளியான தலையங்கம் ஒன்றில், கிரீன்லாந்து தொடர்பாக சீனாவை 'அச்சுறுத்தல்', 'வளங்களைக் கொள்ளையடிக்கும்' அல்லது 'விதிமீறும் நாடு' என்று விவரிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அறிக்கைகளைச் சீனா கடுமையாக எதிர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக ஆர்க்டிக் காலநிலையின் 'பாதுகாவலராக' சீனா ஆற்றி வரும் 'மகத்தான பங்கை' இத்தகைய அறிக்கைகள் புறக்கணிக்கின்றன என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் தனது 'ராணுவ விரிவாக்கம், ஒருதலைப்பட்சமான வளச் சுரண்டல் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளை' மறைப்பதற்காகவே அமெரிக்கா சீனாவை ஆர்க்டிக்கிற்கு ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கிறது என்று 'குளோபல் டைம்ஸ்' கட்டுரை கூறியது.
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் செயல்பாடுகள் சீராக அதிகரித்து வருவதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு ஆணையம் (NORAD) சிபிசி-யிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வந்துள்ளது. நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டே-வும் ஜனவரி 13-ஆம் தேதி ஆர்க்டிக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பதற்றமும் ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது.
ஜனவரி 9-ஆம் தேதி சர்வதேச நேயர்களுக்கான சீன அரசு ஊடகமான சிஜிடிஎன்-இல் (CGTN) வெளியான ஒரு கட்டுரை, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், சர்வதேச அமைப்பு மற்றும் நேட்டோ மீதான நம்பகத்தன்மையின் 'அடிப்படை முறிவை' சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தது.
இந்த நெருக்கடி டென்மார்க்கின் இறையாண்மைக்கான இறுதிச் சோதனை என்றும், "அனைத்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை" என்றும் அந்த கட்டுரை கூறியது.
ரஷ்யா மகிழ்வது ஏன்?
ஆனால் ரஷ்யா டிரம்பிற்கு இந்தப் புகழாரம் சூட்டுவது ஏன் ? வெளிப்படையாகவே ஊக்குவிப்பது ஏன்?
ஸ்டீவ் ரோசன்பெர்க்கின் கூற்றுப்படி, தற்போதைய சூழ்நிலையிலிருந்து கிடைக்கும் மிகப்பெரிய பலன்களை ரஷ்யா பார்ப்பதே இதற்குப் பின்னால் உள்ள காரணமாகும்.
கிரீன்லாந்து மீதான டிரம்பின் ஆர்வம், அந்தத் தீவைக் கையகப்படுத்துவதில் அவர் காட்டும் உறுதி மற்றும் அந்தத் திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பதாக அவர் விடுத்த அச்சுறுத்தல் ஆகியவை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான உறவுகளிலும், நேட்டோவிலும் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய கூட்டணியை பலவீனப்படுத்தும் அல்லது பிளவுபடுத்தும் எதுவாக இருந்தாலும் அது ரஷ்யாவின் பார்வையில் ஒரு பெரிய சாதகமான விஷயமாகும்.
கிரீன்லாந்து குறித்த ஒரு கட்டுரையில், ரஷ்ய நாளிதழான 'மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ்' (Moskovsky Komsomolets) கிண்டலாக ஒரு வரியை எழுதியது:
"ஐரோப்பா முற்றிலும் குழப்பமடைந்துள்ளது, உண்மையைச் சொல்வதானால், இதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு