You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேருந்தில் உரசியதாக வெளியான வீடியோவால் இளைஞர் மரணம் என புகார்; கேரளாவில் நடந்தது என்ன?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)
கேரளாவில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இறந்துபோன நபரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கேரளாவில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் பெரும் கருத்துப் போர் நடந்து வருகிறது.
இவ்வழக்கை கேரளாவின் வடக்கு மண்டல டிஐஜி விசாரிக்க வேண்டுமென்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறந்து போன தீபக், திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானவர், அவர் மீது இத்தகைய புகார்கள் வேறு எதுவுமே வந்ததில்லை என்றும் பிபிசி தமிழிடம் அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்த காணொளி!
கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் தனியார் ஆடை நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, தனது வேலை நிமித்தமாக கண்ணனூர் அருகிலுள்ள பையனூரிலிருந்து மட்டனூர் என்ற ஊருக்கு தனியார் பேருந்து ஒன்றில் தீபக் சென்றுள்ளார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தின் நடுப்பகுதியில் தீபக் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார். அவருக்கு அருகில் சில பெண்களும் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்த பயணம் பற்றி சமூக ஊடகங்களில் மறுநாளில் ஒரு காணொளி பரவியது.
தீபக் பயணம் செய்த பேருந்தில் அவருக்கு அருகில் நின்று பயணம் செய்த கோழிக்கோடு வடகரையைச் சேர்ந்த ஷிஞ்சிதா முஸ்தபா என்ற பெண், பேருந்தில் தனக்கு அருகில் நின்ற ஆண் ஒருவர், தவறான நோக்கத்துடன் தனது முழங்கையால் தன்னுடைய உடலின் மீது பாலியல் சீண்டல் செய்ததாக காணொளியுடன் தனது கருத்தையும் பதிவிட்டு கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த காணொளி ஒரே நாளில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதைப் பார்த்த பலரும், தீபக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டுள்ளனர்.
இதற்கு மறுநாள் அதாவது கடந்த ஜனவரி 18 ஞாயிறு அன்று காலையில், தீபக் தனது வீட்டிலுள்ள தன்னுடைய அறைக்குள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி காணொளியில் பரவிய தகவல்களால் தங்கள் மகன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவருடைய பெற்றோர் தெரிவித்தனர்.
தீபக்கின் மரணத்தை மர்ம மரணம் என்று கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீபக்கின் மரணம் குறித்த தகவலும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
ஷிஞ்ஜிதா, சமூக ஊடகங்களில் தீபக்கைப் பற்றி பரப்பிய கருத்தால்தான் அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
தீபக் மரணத்துக்கு, ஷிஞ்ஜிதா பரப்பிய காணொளிதான் காரணமென்று குறிப்பிட்டிருந்த ஆண்களுக்கான தேசிய கவுன்சில் என்கிற ஆண்கள் நல அமைப்பு, அவர் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும் விமர்சித்திருந்தது.
சமூக ஊடகங்களில் கடுமையான விவாதம் கிளம்பிய நிலையில், ஷிஞ்ஜிதா சுயமாகப் பேசி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் பொதுவெளியில் தனக்கு நேர்ந்ததைப் பற்றியே காணொளி வெளியிட்டதாகவும், அவர் இப்படி முடிவெடுப்பார் என்று தான் கருதவில்லை என்றும் தெரிவித்திருந்ததாக சில மலையாள தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. அந்த காணொளி சிறிது நேரத்தில் நீக்கப்பட்டுவிட்டது. ஷிஞ்ஜிதாவின் அனைத்து விதமான சமூக ஊடகக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே தனது மகன், பெரிதும் அச்சமடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தீபக்கின் பெற்றோர் கேரள ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
தீபக் பணியாற்றிய ஆடை நிறுவனத்தின் உரிமையாளர் பிரசாத், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''என்னுடைய நிறுவனத்தில்தான் தீபக் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். மிகவும் கடமையுணர்வுடன் பணி செய்பவர். எங்கள் நிறுவனத்தில் நிறைய பெண்கள் பணியாற்றினாலும் இதுவரை ஒருவரும் அவரைப் பற்றி எந்தப் புகாரும் சொன்னதில்லை. தன்னைப் பற்றிப் பரவிய காணொளியையும், அதுதொடர்பான விமர்சனங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தார். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதியிருந்த நிலையில், மனம் உடைந்து இப்படிச் செய்துவிட்டார்.'' என்று கூறியுள்ளார்.
திருமணமாகி விவகாரத்து பெற்றிருந்த தீபக்!
இதேபோன்று இவர்கள் இருவரும் பயணம் செய்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரும், பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். அவர்களின் பேருந்து உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், இந்த காணொளியைப் பார்த்துவிட்டு தங்களிடம் விளக்கம் கேட்டதாகக் கூறியுள்ள அவர்கள், தங்கள் பேருந்திற்குள்ளும் சிசிடிவி இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீபக் நின்ற இடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவாக கேமராவில் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் தனக்கு இப்படியொரு பாலியல் சீண்டல் நடந்ததாக அந்தப் பெண் தங்களிடம் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி காவல் நிலையத்தில் தீபக் தாயார் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில், ஷிஞ்ஜிதா முஸ்தபா மீது, தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
தீபக் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்ததுடன் தனது மகன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோழிக்கோடு மாநகர காவல் ஆணையரைச் சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் தேவதாஸ், அப்துல் ரஹீம் பூக்கத் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், கேரள மாநில மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இவ்வழக்கை வடக்கு மண்டல டிஜஜி விசாரிக்க வேண்டுமென்று ஆணையத்தின் நீதித்துறை உறுப்பினர் கே.பைஜூநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ள அவர், பிப்ரவரி 19-ஆம் தேதி கோழிக்கோடு பொதுப்பணித்துறை ஓய்வு இல்லத்தில் ஆணையத்தின் அமர்வு இதைப் பரிசீலிக்குமென்று கூறியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய தீபக்கின் நண்பர் அஸ்கர், ''நானும் தீபக்கும் நீண்டகால நண்பர்கள். எந்த வயதிலும் அவர் மீது இதுபோன்று எந்த குற்றச்சாட்டும் வந்ததில்லை. அவருக்குத் திருமணமாகி ஓராண்டிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் குழந்தைகள் ஏதுமில்லை. அவர்களிடையே மூன்றாண்டுகளுக்கு முன்பு விவாகரத்தும் ஆகிவிட்டது.'' என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய தீபக்கின் மற்றொரு நண்பர் அனூப், ''நான் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறேன். தினமும் ஒரு முறையாவது தீபக்கும் நானும் பேசிவிடுவோம். ஆனால் நான் எனது வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் 2 நாட்களாக அவனிடம் பேசவில்லை. அவனும் என்னை அழைக்கவில்லை. அவனுக்கு இப்படி ஒரு மனக்கஷ்டம் ஏற்பட்டது எனக்குத் தெரியவேயில்லை. இனிமேல் அவனுடன் பேசவே முடியாது என்பதை நினைத்தால் பெரும் வேதனையாக இருக்கிறது.'' என்றார்.
ஷிஞ்ஜிதா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து பேசிய கோழிக்கோடு மாநகர காவல்துறையினர், அனைத்து வாக்குமூலங்களும், இந்த சம்பவம் தொடர்புடைய பல்வேறு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
பி.காம் படித்துவிட்டு மார்க்கெட்டிங் பணியில் இருந்த தீபக்கிற்கு, வேறு யாரும் உடன்பிறந்தவர்கள் இல்லை என்று கூறிய அனூப், அவர்களின் பெற்றோர் மீது அவர் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார் என்றார். எங்கே இருந்தாலும் அவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பார் என்றும், அவர்களின் நிலைதான் மிகவும் வேதனை தருவதாகவுள்ளது என்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆல் கேரளா மேன்ஸ் அசோசியேஷன் தலைவர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பினர், தீபக்கின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அமைப்பின் நிர்வாகி ராகுல் ஈஷ்வர், சங்கம் சார்பில் தீபக்கின் பெற்றோருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படுமனெ்று கூறியுள்ளார்.
ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நடக்கும் கருத்துப்போர்!
தீபக்கிற்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டு வரும் நிலையில், ஷிஞ்ஜிதாவை ஆதரித்து சிநேகா என்பவர் எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் அப்பதிவில், ''இந்த முழங்கை சீண்டல் பொதுவாக நடக்கிறது. மார்பகங்களைத் தொட்டுவிட்டு, பின்னர் குற்றத்திலிருந்து தப்பித்து தன்னை நிரபராதியாகக் காட்டிக்கொள்வது ஆண்களால் நன்கு அறியப்பட்ட தந்திரம்'' என்று கூறியுள்ளார்.
எந்தக் காரணத்திற்காகவும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியுள்ள சிநேகா, ''ஒருவருக்குக் குடும்பம், வேலை, பதவி அல்லது கல்வியறிவு இருப்பதால் அவர் இதைச் செய்ய மாட்டார் என்று பாசாங்கு செய்வதை நிறுத்துங்கள். இந்த வீடியோவை நிராகரிப்பவர்கள் கேட்கிறார்கள்: அந்தப் பெண் ஏன் நகரவில்லை? உண்மையான கேள்வி இதுதான்— தனது முழங்கை அவளது மார்பகத்தில் அழுத்துகிறது என்று முழுமையாகத் தெரிந்திருந்தும், அந்த மனிதன் ஏன் நகரவில்லை?'' என்று கேட்டுள்ளார்.
இருவருக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வெவ்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், இத்தகைய காணொளிகளை வைத்து சமூகஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிடுவது குறித்தும் கடுமையாக சிலர் விமர்சித்துள்ளனர்.
சூரஜ் குமார் என்பவர், ''சமூக ஊடகங்களில் நடத்தப்படும் இந்த விசாரணைப்போக்குதான் தீபக் உயிரைப் பறித்துள்ளது.'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது தற்செயலாக இந்த தொடுதல் நிகழ்ந்திருப்பது போலிருப்பதாகவும், விளம்பரத்திற்காக செய்யப்பட்டுள்ள செயலாகத் தெரிவதாகவும் கூறியுள்ள அவர், இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென்று கோரியுள்ளார். உண்மை வெளிவருவதற்கு முன்பே சமூக ஊடக விசாரணைகள் வாழ்க்கையை அழித்துவிடும் என்பது வேதனையானது என்றும் சூரஜ் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வ அணுகுமுறை என்ன?
சிநேகா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுள்ள முகம்மது நெளஷாத் என்பவர், ''இந்த காணொளியை எடுத்தவர், இதை சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்குப் பதிலாக அதையே ஆதாரமாக வைத்து காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு