'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?

    • எழுதியவர், பிரியங்கா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பெருங்கடல் என்பது பயணிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இங்கு தான் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுமார் 12 பெரிய மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகள் ஒவ்வொரு நாளும் கையாளப்படுகின்றன.

வணிக கப்பல் துறை எதிர்காலத்தில் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

வணிக கப்பல் வேலையில் அதிக சம்பளம் மற்றும் உலகைச் சுற்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. மிக இளம் வயதிலே முக்கியமான பொறுப்பு கிடைப்பது இந்த வேலையை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. ஆனால் இதில் சவால்களும் உள்ளன.

வணிக கப்பல் துறை என்றால் என்ன? அதில் சேர்வதற்கான வழிகள் என்ன? யாருக்கு இந்த துறை சரியான தேர்வாக இருக்கும் மற்றும் இதில் எழக்கூடிய சவால்கள் என்ன?

வணிக கப்பல் துறை என்றால் என்ன?

இளைஞர்கள் பலரும் இந்திய கடற்படையில் இணையலாமா அல்லது வணிக கப்பல் வேலையில் இணையலாமா என குழப்பத்தில் உள்ளனர். இரண்டு பாதைகளும் கடலை நோக்கித் தான் செல்கின்றன என்றாலும் அதன் இலக்குகள் முற்றிலும் வேறாக உள்ளன.

முதலில் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்வோம்.

கடற்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியின் வேலைவாய்ப்பு இயக்குநராக உள்ள கேப்டன் சந்திரசேகர் இதைப்பற்றி பேசுகையில், "கடலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலைகளை வணிக கப்பல்கள் செய்கின்றன. அதில் லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். ஆனால் கடற்படை என்பது பாதுகாப்புக்கானது. ராணுவம், விமானப் படை போல இந்திய பாதுகாப்பு படைகளின் ஒர் அங்கமாக கடற்படை உள்ளது." என்றார்.

மெர்சன்ட் நேவி டீகோடட் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் பிரநீத் மெஹ்தா கடலில் முதன்மை பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார்.

"கடற்படைக்கான பாதை என்பது வித்தியாசமானது. அதற்கென தனி தேர்வு உள்ளது. நீங்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நீங்கள் மூன்று ஆண்டுகள் தீவிரமான பயிற்சி எடுக்க வேண்டும்.வணிக கப்பல் துறை ஒரு தனியார் துறை, கடற்படை என்பது முழுவதும் அரசுத் துறை, இந்த துறை நாட்டிற்கு சேவை செய்கிறது. சம்பளங்களில் கணிசமான வேறுபாடு உள்ளது," என்று தெரிவித்தார்.

வணிக கப்பல் துறையில் பல்வேறு வேலைகள் உள்ளன.

வழிநடத்தல் துறை அல்லது டெக் துறை (Navigation Department or Deck Department): இந்த துறைக்குள் நுழைய கடற்சார் அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பணி கடல்நிலைகளைப் புரிந்து கொண்டு கப்பலை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வது ஆகும். இதில் டெக் கேடட், மூன்றாம் அதிகாரி, இரண்டாம் அதிகாரி மற்றும் கேப்டன் எனப் பல்வேறு நிலைகள் உள்ளன.

என்ஜின் துறை (கடற்சார் பொறியியல்): வழிநடத்தல் துறை போலவே கப்பலின் என்ஜின், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு பொறுப்பான துறை ஆகும். இந்தப் பணிக்கு கடற்சார் பொறியியலில் பி.டெக் அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். கடற்சார் பொறியியல் படிப்பிற்கு இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவு தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். கூடுதலாக பட்டதாரி கடற்சார் பொறியியல் என்கிற 1 வருட சிறப்பு பட்டயபடிப்பும் உள்ளது. ஜூனியர் பொறியாளராக இணைந்து அடுத்தடுத்து நான்காம் நிலை பொறியாளர், மூன்றாம் நிலை பொறியாளர், இரண்டாம் நிலை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் வரை உயரலாம்.

மின்-தொழில்நுட்ப அதிகாரி (இடிஓ): வணிக கப்பலின் என்ஜின் துறையில் வேலை செய்யும் இவர் சென்சார் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளைக் கண்காணிப்பதற்கு பொறுப்பானவர். இதற்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு டிஜி ஷிப்பிங் அங்கீகாரம் பெற்ற இடிஓ படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

ஜிபி ரேடிங் (உதவிக் குழு): இதில் அதிகாரி நிலையில் எந்தப் பணியும் கிடையாது. ஆனால் கப்பல் மற்றும் குழுவினரை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இதற்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. வயது 17 முதல் 25-ற்குள் இருக்க வேண்டும். 10வது அல்லது 12வது வகுப்பு முடித்த பிறகு ஆறு மாத ஜிபி ரேடிங் படிப்பு ஒன்றை முடித்தால் போதும்.

யாருக்கானது?

பிரதிக் திவாரி தற்போது ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் மூத்த மேலாளராக உள்ளார். 2006-ஆம் ஆண்டு அவர் 12-ஆம் வகுப்பை முடித்தபோது மற்ற மாணவர்களைப் போல அவருக்கு என்ன படிப்பதென்று தெரியவில்லை.

"என் குடும்பத்தினர் நான் ஐடி அல்லது கணிணி அறிவியல் படிக்க வேண்டும் என விரும்பினர். நான் வேறு ஏதாவது வித்தியாசமாக படிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது வணிக கப்பல் பற்றி எனக்குத் தெரியாது. அப்போது வழிகாட்டுதல்களும் இல்லை என்பதால் முடிவு எடுப்பது கடினமாக இருந்தது. நான் கடற்சார் பொறியியல் படிக்க முடிவு செய்தேன். நான்கு ஆண்டு படிப்பு முடித்த பிறகு கடற்சார் பொறியாளராக எனது பயணம் தொடங்கியது," என்கிறார் பிரதிக் திவாரி.

இந்தப் பயணம் எளிதானது இல்லை என்றும் அவர் குறிப்பிடும் அவர் இது யாருக்கு உகந்தது என்பதையும் பட்டியலிடுகிறார்.

  • பொறியியல், இயந்திரங்கள், நேவிகேஷன் அமைப்புகள் போன்றவற்றில் விருப்பம் கொண்டவர்கள்.
  • வீட்டை விட்டு நீண்ட காலம் விலகி இருக்கக்கூடியவர்கள்
  • மிகவும் ஒழுக்கம் நிறைந்த சூழலில் பொறுப்புடன் வேலை பார்க்கக்கூடியவர்கள்
  • உடலளவிலும் மனதளவிலும் உறுதியுடன் இருப்பவர்கள்
  • பயணத்திலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள்

வணிக கப்பல் வேலை பல சவால்களைக் கொண்டது என்கிறார் பிரநீத் மெஹ்தா. "உதாரணமாக ஆறு மாதங்கள் கடலில் செலவழிக்க வேண்டும். வீட்டை விட்டும் குடும்பத்தை விட்டும் இவ்வளவு நீண்ட காலம் விலகி இருப்பது தனிமை மற்றும் தீவிர மன அழுத்தத்தை உருவாக்கலாம். எந்த நேரத்திலும் உடலளவிலும் மனதளவிலும் தயாராக இருப்பதும் கடினமான ஒழுக்கத்தை கடைபிடிப்பதும் அவசியமான பணி இது," என்கிறார்.

மேலும் அவர், "சமீப நாட்களில் வேலைகளும் அரிதாகி வருகிறது. பலரும் அதிகம் போட்டி உள்ள துறைகளுக்கே செல்கின்றனர். மாறாக தொடர்ந்து அதிகரித்து வரும் உலக வர்த்தகம் மற்றும் விநியோகத்தால் வணிக கப்பல் துறை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே கடற்சார் படிப்புகளை தேர்வு செய்வதற்கு உகந்த தருணம் இது. இங்கே போட்டி குறைவு, சம்பளமும் அதிகம்." எனத் தெரிவித்தார்.

படிப்புகள் என்னென்ன?

கடற்சார் அறிவியல் பட்டயபடிப்பு (டிஎன்எஸ்) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு டெக் துறையில் சேர்வதற்கான படிப்பு.

கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி - டெக் துறையில் சேர்வதற்கான 3 ஆண்டு படிப்பு

கடற்சார் பொறியியலில் பி.டெக் - என்ஜின் துறையில் சேர்வதற்கான 4 ஆண்டு படிப்பு

பட்டதாரி கடற்சார் பொறியியல்: நீங்கள் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு மெக்கானிக்கல் துறையில் பி.டெக் படித்திருந்தால் இந்த 8-12 மாத படிப்பை முடித்து என்ஜின் துறையில் சேரலாம்.

மின்-தொழில்நுட்ப அதிகாரி (எடிஒ) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மின்னணுவியல், மின்னது-தொடர்பியல் துறைகளில் பி.டெக் முடித்திருந்தால் நீங்கள் 4 மாத படிப்பு ஒன்றை முடித்து என்ஜின் துறையில் சேரலாம்.

ஜிபி ரேடிங்: டெக் மற்றும் என்ஜின் துறைகளில் சேர்வதற்கான 6 மாத படிப்பு இது.

யார் சேரலாம்?

நீங்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 60% மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்ணும் பெற்றிருந்தால் வணிக கப்பல் துறையில் எளிதாக நுழையலாம். பார்வை திறன் 6/6 என இருக்க வேண்டும்.

இந்தியாவில் வணிக கப்பல் துறை படிப்புகளுக்கான ஒரே பல்கலைக்கழகமாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யூ) உள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி அல்லது கடற்சார் பொறியியலில் பி.டெக் படிப்புகளில் சேரலாம்.

இது தொடர்பாக கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதற்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம்.

12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்றால் ஜிபி ரேடிங் மூலமாகவும் வணிக கப்பல் துறையில் நுழையலாம், ஆனால் அதிகாரி ஆக முடியாது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 17 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சம்பளம் எப்படி இருக்கும்?

வணிக கப்பல் துறையில் இளம் வயதிலே நல்ல சம்பளம் பெற முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதில் போட்டியும் குறைவு, கடந்த ஆண்டு ஐஎம்யூ நுழைவுத் தேர்வில் 40,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.

ஒரு கேடட் (Cadet) ஆக சேர்ந்தால் ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு சுமார் 30,000 ரூபாய் இருக்கும் என்கிறார் கேப்டன் சந்திரசேகர். நான்காண்டு படிப்பு முடித்து ஒருவர் அதிகாரியானால் 45,000 - 90,000 வரை சம்பளம் பெறலாம்.

வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை அதிகாரியில் இருந்து இரண்டாம் நிலை அதிகாரி ஆக டிஜி ஷிப்பிங் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது திறன் சான்றிதழ் (சிஒசி) என அழைக்கப்படுகிறது. ஆனால் இது பதவி உயர்வை உறுதி செய்யாது. பதிவு உயர்விற்கான ஒரு தகுதி மட்டுமே.

முதன்மை பொறியாளர் மற்றும் கேப்டனின் சம்பளம் மாதத்திற்கு 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருக்கலாம் என்கிறார் பிரதிக். எனினும் இது ஒருவரின் அனுபவம் மற்றும் வேலை பார்க்கும் கப்பலைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக மற்ற சரக்கு கப்பல்களைவிடவும், எண்ணெய் கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.

எங்கு படிக்கலாம்?

கடற்சார் படிப்புகளில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வழங்கப்படுவதில்லை. மாறாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அல்லது டிஜி ஷிப்பிங் அங்கீகரித்த குறிப்பிட்ட கல்வி நிலையங்கள் இதற்காக உள்ளன.

இந்தியாவில் சுமார் 200 கடற்சார் கல்வி நிலையங்கள் உள்ளன.

மத்திய பல்கலைக்கழகமான ஐஎம்யூவின் தலைமையிடம் கொல்கத்தாவிலும் அதன் வளாகங்கள் சென்னை, மும்பை, விசாகப்பட்டனம் மற்றும் கொச்சியிலும் உள்ளன.

இங்கு கடற்சார் பொறியியலில் பி.டெக், கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி, ஜிஎம்இ பட்டயபடிப்பு, இடிஒ படிப்பு மற்றும் கடற்சார் மேலாண்மையில் முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவை போக சென்னையில் உள்ள கடற்சார் கல்வி மற்றும் பயிற்சிக்கான அகாடமி மற்றும் புனேவில் உள்ள டொலானி கடற்சார் நிறுவனத்திலும் கடற்சார் படிப்புகளை மேற்கொள்ளலாம்.

ஜிபி ரேடிங், உதவிக் குழு மற்றும் கடலுக்குச் செல்வதற்கு முந்தைய பயிற்சி போன்றவற்றை பெற வேண்டுமென்றால் அதற்கென சில கல்வி நிலையங்களும் உள்ளன.

  • ஆங்லோ ஈஸ்டர்ன் கடற்சார் அகாடமி (கொச்சி)
  • தென் இந்தியா கடற்சார் அகாடமி (சென்னை)
  • கடற்சார் பொறியியல் மற்றும் பயிற்சிக்கான லயோலா இன்ஸ்டிடியூட் (சென்னை)
  • சர்வதேச கடற்சார் அகாடமி (நொய்டா)
  • அறிவியல் கடற்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (கொல்கத்தா)

கட்டணங்களைப் பொருத்தவரை கடற்சார் பொறியியல் மற்றும் கடற்சார் அறிவியல் படிப்புகளுக்கு ஐஎம்யூவில் ஆண்டு ஒன்றுக்கு 2.25 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை ஆகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் இவை வேறுபடலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு