தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து சில நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் - என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளையும், மரபையும் மீறி அவையில் இருந்து வெளியேறி சென்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியது ஏன் என்பது குறித்து 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து லோக் பவன் (ஆளுநர் மாளிகை) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றான, 'ஆளுநர் பேசுகையில் மைக் அணைக்கப்பட்டது' என்ற குற்றச்சாட்டிற்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் நாளில் ஆளுநர் மட்டுமின்றி, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் என்ன நடந்தது?

தமிழக சட்ட மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வழக்கமாக, ஆளுநர் உரையின் நேரலை வழங்கப்படும் நிலையில் இந்த முறை வழங்கப்படவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். "ஆளுநருக்கு மரியாதை அளிக்க நானும் இந்த அரசும் தவறியதில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ஆளுநர் உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இருந்தபோதும் ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டதைப் போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்ததிற்கு உரியது. தமிழக சட்டமன்றம் எட்டரைக் கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன மாமன்றம். ஆளுநர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் அக்கறை கொண்டவராக உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களின் ஆதரவோடு பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், நம்முடைய ஆளுநர் அதற்கு மாறாக செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும் பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார். அது அவருடைய சொந்த விருப்பம் என்று கருதலாம். அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் அவர் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

இந்தப் பேரவையின் மாண்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கீழ்க்காணும் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோருகிறேன்" என்று கூறிவிட்டு, தீர்மானத்தை வாசித்தார்.

"ஏற்கனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் ஆளுநர் சென்றுவருவதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கிலம் மொழியாக்கம் ஆளுநரால் படிக்கப்பட்டதாக இந்தப் பேரவை கருதுகிறது. அவ்வாறே, அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம்பெறலாம். மேலும் மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவரால் படிக்கப்படவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம், நான் முன்மொழிந்துள்ள தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என தீர்மானத்தை வாசித்தார்.

இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இதற்குப் பிறகு அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

ஆளுநர் வெளியேறியது ஏன்? லோக் பவன் விளக்கம்

சட்டப்பேரவை வளாகத்திலிருந்து ஆளுநர் ஆர்.ரவி. வெளியேறிய சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையிலிருந்து (லோக் பவன்) ஒரு செய்திக் குறிப்பு வெளியானது. அதில், ஆளுநர் உரையை வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

  • ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
  • அந்த உரையில் ஆதாரமற்ற பல உரிமைக்கோரல்களும், தவறாக வழிநடத்தும் அறிக்கைகளும் உள்ளன. மக்களைத் துயரப்படுத்தும் பல முக்கியமான பிரச்னைகள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
  • மாநிலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற அரசின் கூற்று உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடன் போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOUs) காகித அளவில் மட்டுமே உள்ளன. உண்மையான முதலீடு என்பது அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டு தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களைக் கவரும் தன்மையை இழந்து வருவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு இன்று பின்தங்கியுள்ளது.
  • 'போக்சோ' குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ள போதிலும், பெண்கள் பாதுகாப்பு விவகாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
  • போதைப்பொருட்களின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஆனால் அது எளிதாக கடந்து செல்லப்பட்டுள்ளது;
  • தலித்துகளுக்கு எதிரான அத்துமீறல்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. இருப்பினும், அது உரையில் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது;
  • தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கு கவலையளிப்பதாகத் தெரியவில்லை. இது உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
  • கல்வித் தரத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சியும், கல்வி நிறுவனங்களில் நிலவும் பரவலான நிர்வாகச் சீர்கேடுகளும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதித்து வருகின்றன. அதிகமான விரிவுரையாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். நமது இளைஞர்கள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கி நிற்கின்றனர். இது அரசாங்கத்தைத் தொந்தரவு செய்வதாகத் தெரியவில்லை, இந்த விவகாரம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது;
  • பல ஆயிரம் கிராம ஊராட்சிகளில் பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால் அவை முடங்கிக் கிடக்கின்றன. அவை நேரடியாக அரசாங்கத்தின் தனி அதிகாரிகளின் கீழ் உள்ளன. பல கோடி மக்களுக்கு அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்துகளுக்கும் உணர்வுக்கும் எதிரானது. கிராம ஊராட்சிகள் மீண்டும் செயல்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், உரையில் இது பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை;
  • மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோவில்களில் அறங்காவலர் குழுக்கள் இல்லை, அவை நேரடியாக மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆழ்ந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பண்டைய கோவில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவுகள் 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அலட்சியமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன;
  • தொழில்துறையை நடத்துவதற்கான நேரடி மற்றும் மறைமுகச் செலவுகள் காரணமாகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு அவை மிக முக்கியமான துறையாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்களது நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த விவகாரம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
  • கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள கடைநிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியின்றியும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை;
  • தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளதுடன், அடிப்படை அரசியலமைப்புக் கடமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மோதல்கள்

2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தினார். அந்த உரையை அவர் முழுமையாக வாசித்தார். இதற்குப் பிறகு, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால், எந்த ஆளுநர் உரையையும் அவர் முழுமையாக வாசிக்கவில்லை.

2023ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், அவைக் குறிப்பில் பதிவுசெய்யப்படும் உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.

2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது.

அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதற்கு காரணமான திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" எனக் குறிப்பிட்டார்.

லோக்பவன் வெளியிட்ட அறிக்கையை வாசித்த அவர், "ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளவை அனைத்தும் முக்கியமான பிரச்னைகள். அதிமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, ஆனால் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது" என்று குற்றம்சாட்டினார்.

ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து பேசிய பழனிசாமி, "உரையில் உண்மைத்தன்மை இல்லையென்பதால் ஆளுநர் அதை வாசிக்கவில்லை. தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்று ஆளுநர் சொல்வது நியாயம் தான். ஆனால், அதை இந்த அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது." என்று கூறினார்.

"ஆளுநரின் உரையில் முதலமைச்சரின் கருத்துகளும் உள்ளன. ஆளுநர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் பார்க்கிறது" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.

ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதா?

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "ஒப்புதல் பெற்ற உரையை வாசிப்பதே ஆளுநரின் கடமை. அதுவே மரபு, அதை அவர் செய்யவில்லை." என்று கூறினார்.

லோக்பவன் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "சபாநாயகர் பேசும்போது பிற உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படும், அதேபோல அவரது (ஆளுநர்) மைக்கும் அணைக்கப்பட்டிருக்கலாம். இது சட்டப்பேரவை மரபு." என்று கூறினார்.

"ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட கடமை என்பது உரையை வாசிக்க வேண்டும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அன்றி வேறு யாரும் சட்டப்பேரவையில் கருத்து சொல்லமுடியாது, அதை அனுமதிக்கவும் முடியாது" என்றும் அப்பாவு கூறினார்.

ஜனவரி 24ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடப்பாண்டு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு