பெண்கள் அதிகம் அழுவது ஏன்? மூன்று வகையான கண்ணீர் பற்றி தெரியுமா? அறிவியல் பார்வை

நாம் வருத்தமாக, உணர்ச்சிவசப்பட்ட நிலை, கோபம் அல்லது மகிழ்ச்சியாக இருந்தால்கூட அழுகிறோம்.

ஆனால், உணர்வுப்பூர்வமாக கண்ணீர்விடும் ஒரே உயிரினம் மனிதன் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

பல விலங்குகள் தன்னுடைய குட்டிகளுக்கு ஆபத்து குறித்து சமிக்ஞை செய்வதற்காக பெரிதும் சத்தம் எழுப்பி அழும், ஆனால் அவற்றிடம் சிக்கலான உணர்வுப்பூர்வ தருணங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக கண்ணீரை தூண்டுவதற்கான மூளை பாதைகள் இல்லை.

கண்ணீர் எப்படி உருவாகிறது என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டாலும் மனிதர்கள் ஏன் அழுகின்றனர், உணர்ச்சிவசப்படுவதால் வரும் அழுகையின் நோக்கம் என்ன என்பது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

கண்ணீர் என்பது என்ன?

"சளி (mucus), எலெக்ட்ரோலைட், தண்ணீர், புரதங்கள் மற்றும் லிப்பிடுகள் (கொழுப்பு) ஆகிய 5 கூறுகள் சேர்ந்தே கண்ணீர் உருவாகிறது," என ஸ்விட்சர்லாந்தில் உள்ள மனித உயிரியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர் (postdoctoral fellow) மேரி பேனியெர்-ஹெலாவுவே விளக்குகிறார்.

பிபிசி உலக சேவையின் கிரவுட்சயின்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த 5 கூறுகளுக்கும் வெவ்வேறு தன்மைகள் உள்ளன என்றார். உதாரணமாக, புரதங்கள் நச்சு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டவை, அதே சமயம் எலெக்ட்ரோலைட்டுகள் உடல் செயல்களுக்கு அத்தியாவசியமான தாதுக்களாக விளங்குகின்றன.

மூன்று வகையான கண்ணீர் உள்ளது.

"உங்கள் கண்களின் மேற்பரப்பில் எப்போதும் இருக்கும் ஈரப்பதமூட்டும் கண்ணீர் (Basal tears) ஒருவகை. கண்களில் உராய்வை தடுக்கும் வகையில் இது செயல்படுகிறது," என அவர் கூறுகிறார்.

ஆனால், பூச்சி அல்லது தூசி கண்களுக்குள் சென்று எரிச்சலூட்டும்போது அதற்கு எதிர்வினையாக ஏற்படும் கண்ணீர் ரெஃப்ளக்ஸ் (reflex) கண்ணீர் எனப்படுகிறது.

இது கருவிழிப்படலத்தில் உள்ள நரம்பு செல்களால் உணரப்படுகிறது. கருவிழிப்படலம் (cornea) என்பது, கண்ணில் உள்ள தெளிவாகத் தெரியக்கூடிய, குவிமாட வடிவிலான வெளிப்புற படலமாகும், இது கிருமிகள் மற்றும் கழிவுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படலமாக செயல்படுகிறது.

முழு உடலிலும் இப்பகுதியில் தான் நரம்பு செல்கள் மிக அதிக அடர்த்தியில் உள்ளன. இப்பகுதி வெப்பநிலை, வெளிப்புற அழுத்தம் மற்றும் வறண்டுபோதல் போன்ற உணர்வுகளை உணரும் என்கிறார் முனைவர் பேனியெர்.

நரம்பு செல்களிலிருந்து தகவல்கள் மூளையின் கண்ணீர் சுரப்பி உட்கரு (lacrimal nucleus) எனும் பகுதிக்கு செல்லும், அது கண்ணீர் சுரப்பிகளுக்கு சமிக்ஞைகளை அனுப்பி கண்ணீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

உணர்ச்சிவசப்படும் போது ஏற்படும் கண்ணீர்

கண்ணீரின் மூன்றாவது வகை ஒருவர் உணர்ச்சிவசப்படும் போது ஏற்படுவது, இதுதான் மிகவும் சிக்கலான ஒன்று.

உணர்ச்சிவசப்படுவதை உணரும் மூளையின் பகுதிகளும் கண்ணீர் சுரப்பி உட்கருவுடன் தொடர்புகொள்கின்றன, ஆனால் எளிமையான பாதுகாப்பு அனிச்சை செயலாக அல்லாமல் இன்னும் அதிக சிக்கலான பாதைகள் வழியே அவை தொடர்புகொள்கின்றன.

நெதர்லாந்தில் உள்ள டில்பர்க் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உளவியல் துறையின் தகைசால் பேராசிரியர் அட் விங்கெர்ஹோயெட்ஸின் கூற்றுப்படி, அழுவது என்பது ஒரு தனிப்பட்ட உணர்வைவிட, அதிகப்படியான உணர்வுகளின் தேக்கத்தையே பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

"உணர்ச்சிகள் அரிதாகவே தனித்த ஒரு வடிவில் வெளிப்படுகின்றன. பெரும்பாலும் அவை ஒரு கலவையாகவோ அல்லது பலவித உணர்ச்சிகளின் மாற்று வடிவமாகவோ தான் உள்ளன." என்கிறார் அவர்.

நமக்கு வயதாக ஆக உணர்வுரீதியாக நாம் எதற்கெல்லாம் அழுகிறோம் என்பது மாறுபடும் என அவர் விளக்குகிறார். குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் வலி, அழுகைக்கான முக்கிய தூண்டுகோலாக இருக்கிறது, ஆனால் பெரியவர்கள் மற்றும் மூத்தவர்களுக்கு அது குறைவாகவே உள்ளது.

நமக்கு வயதாக ஆக, நாம் அழுவது மற்றவர்கள் மீது கொண்டுள்ள அனுதாபத்துடன் அதிகமாக இணைக்கப்படுகிறது - "நம்முடைய தனிப்பட்ட துன்பங்களுக்காக மட்டுமல்லாமல், மற்றவர்களின் துன்பத்துக்காகவும் அழுகிறோம்."

ஒரு கலை அல்லது இயற்கையின் அழகால் ஏற்படும் நேர்மறையான உணர்வுகளின் போதும் கண்ணீர் தூண்டப்படலாம் என, விங்கெர்ஹோயெட்ஸ் கூறுகிறார்.

அழுவதால் என்ன நிகழும்?

அழுதவுடன் ஒருவித ஆசுவாசம் கிடைப்பதாக பலரும் கூறுகின்றனர், ஆனால் அந்த உணர்வு உண்மையானதா என்பது குறித்து அறிவியல் ரீதியான விவாதம் நடைபெறுகிறது.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் மருத்துவ உளவியலாளருமான லாரென் பைல்ஸ்மா, நாம் அழுவது உண்மையிலேயே நம்மை ஆசுவாசப்படுத்துகிறதா என்பதை அறிய இதய துடிப்புகளை கண்டறியும் சென்சார்களை பயன்படுத்தி ஆய்வு செய்துவருகிறார்.

இதயத்துடிப்பை பதிவு செய்யும் கருவி (Electrocardiograms) நம்முடைய நரம்பு அமைப்பு எப்படி செயல்புரிகிறது என்பது குறித்த சில தகவல்களை நமக்கு வழங்கலாம்.

நாம் அழத் தொடங்குவதற்கு சற்று முன்பு நம்முடைய பரிவு நரம்பு மண்டலம் (sympathetic nervous system - இதயத்துடிப்பை அதிகரித்து ஆபத்து, தீவிர உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு தயார்படுத்தும் அமைப்பு) உச்ச நிலையை அடைந்திருக்கலாம் என அவருடைய ஆரம்பக்கட்ட முடிவுகள் காட்டுகின்றன. இந்த நரம்பு மண்டலம் 'fight or flight' என்றும் அழைக்கப்படுகிறது.

"அழத் தொடங்கியதும் இணைப்பரிவு மண்டலச் (parasympathetic) செயல்பாட்டில் அதிகரிப்பை பார்ப்பதாக," கூறுகிறார் அவர். நரம்பியல் அமைப்பின் இந்த பகுதி, நம்மை அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்த உதவுகிறது.

ஆனால், அழுகை எப்போதும் நமக்கு சிறந்த உணர்வை தராது, குறிப்பாக நாம் மன அழுத்தம் அல்லது அதிகமான சோர்வில் இருக்கும்போது தராது என, விங்கெர்ஹோயெட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

இது நாம் எதற்காக அழுகிறோம் என்பதையும் பொறுத்தது. "நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய சூழல்களில் அழும்போது மட்டுமே நம் மனநிலை மேம்படுகிறது, ஆனால் நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழல்களில் அழும்போது அவ்வாறு செய்ய முடிவதில்லை," என்கிறார் அவர்.

நம்மை சுற்றியிருப்பவர்களும் இதில் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

"உங்களை புரிந்துகொண்டு உங்களுக்கு ஆதரவை தந்து சமாதானப்படுத்தினால் நீங்கள் நன்றாக உணர முடியும். ஆனால், அவர்கள் உங்களை கிண்டல் அல்லது கோபத்தை வெளிப்படுத்தி உங்களை அவமானகரமாக உணரச்செய்தால் உங்களால் நல்ல உணர்வை பெற முடியாது," என அவர் விளக்குகிறார்.

சமூக சமிக்ஞை

அழுவது மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதிலும் தாக்கத்தை செலுத்தும் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.

இஸ்ரேலில் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உணர்ச்சிவசப்பட்ட பெண்களின் கண்ணீரை முகர்ந்த ஆண்கள், உப்பு கரைசலை முகர்ந்த ஆண்களை விட குறைவான ஆக்ரோஷத்துடன் உள்ளனர் என கண்டறிந்தது.

கண்ணீர் நமக்கு உதவி தேவை என்பதை காட்டும் சமூக சமிக்ஞையாக செயல்படுவதாகவும் உதவி செய்வதற்காக மக்கள் முன்வருவதற்கான வாய்ப்பை கண்ணீர் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

உணர்ச்சிவசப்படும்போது வரும் கண்ணீர் நம்மை இன்னும் நம்பத்தகுந்தவராக மாற்றுவதாக சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன, இதுதான் நம் முன்னோரை ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வதற்கு உதவியுள்ளது.

அழும் கைக்குழந்தைகளைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையின் அழுகுரல் பெரியவர்களின் மூளையில் உள்ள சில பகுதிகளைத் தூண்டி, அதன் மூலம் பராமரிப்புக்கான ஒரு எதிர்வினையைத் தொடங்குகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

மனிதர்களுக்கு நீண்ட குழந்தைப் பருவம் இருப்பதாலும், அந்தக் காலகட்டத்தில் நாம் நமது பெற்றோரைச் சார்ந்திருப்பதாலும், கண்ணீர் அதன் வாயிலாக பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று விங்கெர்ஹோயெட்ஸ் நம்புகிறார்.

ஒரு குழந்தையின் கண்ணீர் பெரியவர்களிடம் உள்ள ஆக்ரோஷத்தைக் குறைக்க உதவும் என்ற ஒரு கருத்து இருப்பதாக அவர் கூறுகிறார், ஏனெனில் சத்தமாக அழுவது "மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், நம்மை ஆக்ரோஷமாக மாற்றக் கூடியதாகவும் இருக்கிறது".

"அது குழந்தைக்கு ஒருவித சுய பாதுகாப்பு முறையாக இருப்பது மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது. அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது." என அவர் கூறுகிறார்.

பெண்கள் அதிகம் அழுவது ஏன்?

ஆண்கள் ஒரு மாதத்தில் சராசரியாக ஒரு முறை அழுகின்றனர் அல்லது அழுவதே இல்லை, அதே சமயம் பெண்கள் சராசரியாக நான்கு முதல் ஐந்து முறை அழுகின்றனர்.

இது கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கமாக இருக்கலாம் என்றாலும், இது பல்வேறு கலாசாரங்களிலும் காணப்படுகிறது என்பது, இது மட்டுமே முழுமையான காரணம் அல்ல என்பதை உணர்த்துவதாக உளவியலாளர் விங்கெர்ஹோயெட்ஸ் கூறுகிறார்.

"பொதுவாகவே பெண்கள் உணர்வுரீதியாக எளிதில் எதிர்வினையாற்றுபவர்களாக உள்ளனர். அழுகை என்பது அந்த வேறுபாட்டின் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.," என்கிறார் அவர். "நரம்பியல், ஹார்மோன், தனிப்பட்டநபர் சார்ந்த வேறுபாடுகளும் இருக்கலாம்."

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நாம் அழும் அளவை பாதிக்கின்றன என்பதற்கு தற்போது உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று பைல்ஸ்மா கூறுகிறார். இருப்பினும், பாலினங்களுக்கிடையேயான வேறுபாடுகள் மற்றும் கர்ப்பம், முதுமை போன்ற காரணங்களால் ஹார்மோன்கள் ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்று அவர் சந்தேகிக்கிறார்.

'அழுவது ஒருவித ஆச்சரியக்குறி'

அவர் ஆளுமைப் பண்புகளின் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். அழுவது என்பது குறிப்பாக நரம்பியல் கோளாறுகள் அல்லது வெளிப்படையான குணம் கொண்டவராக (extrovert) இருப்பதோடு தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளார்.

"நரம்பியல் கோளாறு என்பது மனச்சோர்வு மற்றும் பதற்றத்துடன் தொடர்புடையது, அதனால்தான் அந்தத் தொடர்பை நாம் அங்கே காண்கிறோம்," என அவர் பரிந்துரைக்கிறார்.

"அனுதாப உணர்வு அதிகமாகக் கொண்டவர்கள் அதிகம் அழக்கூடியவர்களாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்; மற்றவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதைப் பார்த்து அதற்கு எதிர்வினையாக அவர்கள் அழுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம்." எனவும் அவர் கூறுகிறார்.

இறுதியாக, அழுவது என்பது சமூகத் தொடர்பைப் பற்றியதாகவே தெரிகிறது.

"அழுவது ஒருவித ஆச்சரியக்குறி போலச் செயல்படுவதாகத் தெரிகிறது. 'சரி, இது மிகவும் முக்கியமான ஒன்று' என உங்களை அழுகை உணர வைக்கலாம்." என விங்கெர்ஹோயெட்ஸ் கூறுகிறார்.

(பிபிசி உலக சேவையின் கிரவுட்சயின்ஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. )

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு