சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் சாலைகளில் தற்போது பகல் வேளையிலும் பலர் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அதேபோன்று, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் புல்வெளிகளில் பனி போர்த்தியது போன்று உறைபனியை காண முடிகிறது.

ஜனவரி மாதம் முடிய இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

ஜனவரி 18ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ். இது கடந்த சில தினங்களில் சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை. அதே பகுதியில் ஜனவரி 20 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸ். இப்படி, கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், சில மாறுபாடுகள் இருந்தாலும் சராசரியாக 19-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியே உள்ளது.

'20 டிகிரி அல்லது அதற்கும் கீழே'

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பரவலாகவே இத்தகைய குளிரான வானிலை நிலவிவருகிறது. ஜனவரி 20ம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை வேலூரில் 15.8, தருமபுரியில் 16.5, கோயம்புத்தூர் 18.8, திருச்சி 19, சேலத்தில் 18.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.

மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஊட்டியில் 6.8, கொடைக்கானலில் 6, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸாக உள்ளது.

கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாகப்பட்டினத்தில் 19, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 19.4, சென்னை மீனம்பாக்கத்தில் 19.3 டிகிரி செல்சியஸாக உள்ளது.

இந்த எண்களை உற்றுநோக்கினால், மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி அல்லது அதற்கும் கீழே இருப்பதைக் காணலாம்.

ஜனவரி 20 அன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 24 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பின்படி, சமவெளி பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸ். மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் ஜனவரி மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை என்னவாக இருந்தது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளை வைத்து ஒப்பிட்டோம். உதாரணமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த பத்தாண்டு கால குறைந்தபட்ச வெப்பநிலை எப்படி இருந்தது என்பதை கீழே உள்ள படத்தில் அளித்துள்ளோம்.

என்ன காரணம்?

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குளிர்ந்த வானிலை தொடர்வது ஏன் என, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டோம்.

"மேகமூட்டம் குறைவாக இருக்கும்போது தரையின் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் குளிர் அசாதாரணமானது அல்ல, பொதுவான ஒன்றே. ஆனால், கடந்த 5 ஆண்டு கால தரவுகளை பார்த்தால், இப்போது குளிர் அதிகமாக இருக்கிறது. அதற்கு முன்பு சென்னை உட்பட பல மாவட்டங்களில் இதைவிட குளிர் இருந்திருக்கிறது. வேலூர், தருமபுரியில் கடந்த சில ஆண்டுகளைவிட குளிர் அதிகமாக இருக்கிறது." என தெரிவித்தார்.

இது இயல்புக்கு மாறான குளிர் என கூற முடியாது என்ற பிரதீப் ஜானின் கருத்தையே மற்றொரு தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்தும் கூறுகிறார்.

"இதை இயல்புக்கு மாறான குறைந்த வெப்பநிலை என சொல்ல முடியாது. ஆனால், இரவு நேர வெப்பநிலை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இது புதிதல்ல. தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தான் எப்போதும் குளிர் அதிகரிக்க ஆரம்பிக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு திசையிலிருந்து காற்று வரும். கிழக்கு திசை காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். அப்போது மேகமூட்டமான சூழல் நிலவும் என்பதால், இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்காது.

இப்போது வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட விடைபெற்றுவிட்டது. ஆனால் மேகமூட்டம் இல்லாததால் இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்கிறது." என்றார்

இதே நிலை தொடருமா?

ஜனவரி 22ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அந்த சமயத்தில் லேசான மழை அல்லது மேகமூட்டம் ஏற்படும்போது, இயல்புநிலையிலோ அல்லது அதற்கு சற்று அதிகமான வெப்பநிலையோ நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"மழை முடிந்த பிறகு வடதிசையிலிருந்து காற்று வீசும் என்பதால் இரவு நேர வெப்பநிலை மீண்டும் குறைய ஆரம்பிக்கும். இதன் போக்கு இப்படித்தான் இருக்கும்." என்கிறார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த்.

இதையே பிரதீப் ஜானும் கூறுகிறார். "ஜனவரி 25ம் தேதி வாக்கில் தமிழ்நாட்டில் பரவலாக ஓரிரு தினங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்த பிரதீப் ஜான், "அப்போது, இரவு நேர வெப்பநிலை அதிகரித்து பின்னர் மீண்டும் குறையக்கூடும்" என கூறியுள்ளார்.

என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இப்படியே வெப்பநிலை குறைந்துகொண்டே போகும் என சொல்ல முடியாது எனக்கூறுகிறார் அவர்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய பாலச்சந்திரன் பிபிசியிடம் பேசுகையில், "வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் காரணமாக குளிர் அதிகமாக இருக்கிறது.

உதாரணமாக, 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்றால், வடதிசை காற்றுடன் சேர்ந்து அது 10 டிகிரி செல்சியஸாக இருக்கும்." என்றார்.

தமிழகத்தில் குளிர் அலைகளின் தாக்கமா?

பொதுவாக, குளிர் அலைகள் வட இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும்.

குளிர் அலை என்றால் என்ன என்பதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு வரையறையை வைத்துள்ளது. அதன்படி, மனித உடல் தாங்க முடியாத அளவிலான மிகக் குறைந்த வெப்பநிலையே குளிர் அலைகள் எனப்படுகிறது. அதன்படி, சமவெளி பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் நிலவும்போது அவை குளிர் அலைகள் என வரையறுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், தமிழகத்தில் தற்போது நிலவுவது குளிர் அலைகள் அல்ல.

தமிழகத்தில் குளிரான வானிலை தற்போதுவரை தொடர்வதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா என பாலச்சந்திரனிடம் கேட்டோம். "காலநிலை மாற்றம் காரணமாக பல விஷயங்கள் நடக்கின்றன. 40-45 ஆண்டுகளில் இருந்த சூழல் இப்போது இல்லை. எனவே, வானிலை மாற்றத்தில் அதன் தாக்கம் இருக்கலாம். எனினும், பல ஆண்டுகளாக நிலையாக வானிலை மாறிவரும்போதுதான் அதை அறுதியிட்டு கூற முடியும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு