You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் போராட்டத்தின் போது மசூதிகளுக்கு தீ வைத்தது யார், ஏன்?
- எழுதியவர், ஹுசாம் மஹ்பூபி
- பதவி, பிபிசி பாரசீக சேவை
இரானில் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களின்போது மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பல மசூதிகளுக்குத் தீ வைக்கப்பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெருமளவில் பகிரப்பட்டன.
ஜனவரி 17 அன்று, இரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி ஆற்றிய உரையில், நாடு தழுவிய போராட்டங்களின்போது '250 மசூதிகள் அழிக்கப்பட்டன' என்று கூறினார்.
இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை 'எதிரி படைகள்' என்று வர்ணித்த அவர், இத்தகைய "கலவரக்காரர்களின் நோக்கம் புனிதத் தலங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்துறை மையங்களைத் தாக்குவதே" என்று கூறினார்.
இரான் அதியுயர் தலைவரின் கூற்றுப்படி, "துரோகிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஏஜென்ட்களின் தலைமையில் அறியாத மக்கள் இந்த மோசமான செயல்களிலும் கடுமையான குற்றங்களிலும் ஈடுபட்டனர்."
இரானில் இணையக் கட்டுப்பாடுகள் காரணமாக, தாக்குதலுக்கு உள்ளான அல்லது தீ வைக்கப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கையை ஊடகங்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
முன்னதாக, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில், மசூதிகளுக்குத் தீ வைத்தவர்களுக்கு 'நாட்டிற்குள்ளும் வெளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது' என்றும் அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்றும் கூறியிருந்தார்.
மொசாட் மீது இரானிய அரசின் குற்றச்சாட்டு
இஸ்லாமியக் குடியரசான இரானில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் வெளிநாட்டுப் பாதுகாப்பு முகமைகளுடன் தொடர்புடைய 'கலவரக்காரர்கள்', 'கிளர்ச்சியாளர்கள்' மற்றும் 'பயங்கரவாதிகள்' என்று வர்ணிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
இரானின் அரசு ஊடகங்கள் நாட்டில் எரிக்கப்பட்ட மசூதிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரவலாக ஒளிபரப்பியுள்ளன. இதில் சாதிகியா ஃபர்ஸ்ட் ஸ்கொயரில் உள்ள இமாம் சாதிக் மசூதி மற்றும் டெஹ்ரானின் அபுசார் மசூதி போன்றவை அடங்கும். இந்த நடவடிக்கைகளை ''மொசாட்டின் கூலிப்படையினருடன்'' அரசு தொடர்புபடுத்தியுள்ளது.
பிரான்சின் லொரைன் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் சயீத் பைவண்டி, மசூதிகள் மீதான தாக்குதல்களைப் போராட்டக்காரர்கள்தான் நடத்தினார்கள் என்று இதுவரை உறுதியாகக் கூற முடியாது என்று பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், கடந்த காலத்தில் இரானில் மதத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு இரானிய அரசு வெளியிட்ட அறிக்கைகளைப் பேராசிரியர் பைவண்டி சுட்டிக்காட்டுகிறார்.
'கிரீன் மூவ்மெண்ட்' போராட்டம் நடந்த நேரத்திலும் போராட்டக்காரர்கள் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, 1994ஆம் ஆண்டில் மஷ்ஹத்தில் எட்டாவது ஷியா இமாமின் தர்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பிற்குப் பிறகு, "பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து இதே போன்ற கதைகளை கேட்டோம். ஆனால் அந்த நேரத்தில் குண்டுவெடிப்பை முஜாஹிதீன்-இ-கல்க் அமைப்புடன் தொடர்புபடுத்தியது முற்றிலும் தவறு என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது."
பேராசிரியர் பைவண்டியின் கூற்றுப்படி, இரானிய அரசு தனது கூற்றுகள் சரியென்று கருதினால், உண்மைகளை வெளிக்கொண்டுவர ''நடுநிலையான நபர்களைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை'' அமைக்க வேண்டும்.
அலி ரேஸா முனாஃப்சாதா பிரான்சில் உள்ள வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இரானில் மசூதிகள் மற்றும் மதத் தலங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களின் தன்மை மற்றும் அளவை ஒரு 'புதிய வழக்கம்' என்று அவர் விவரிக்கிறார்.
அவரது கூற்றுப்படி, போராட்டக்காரர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. இரானில் நிலவும் அடக்குமுறை அமைப்பின் அடையாளமாக மசூதிகள் திகழ்வதாக மக்கள் கருதுவதாக அவர் கூறுகிறார்.
"இஸ்லாமியக் குடியரசின் அதிகாரத்தை மக்கள் நேரடியாக எதிர்த்துப் போராடுவதால், அவர்கள் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சின்னங்களைத் தாக்குகிறார்கள்."
கடந்த 40 ஆண்டுகளில், மசூதிகள் மற்றும் பிற மதத் தலங்கள் இஸ்லாமியக் குடியரசான இரானின் அதிகாரத்தின் அடையாளங்களாக மாறிவிட்டன.
அரசுடன் தொடர்புடைய பல மசூதிகள் புரட்சிகரப் பாதுகாவலர்களுடன் தொடர்புடைய 'பஸ்ஸிஜ் மிலிஷியா'வின் மையங்களாகச் செயல்படுகின்றன.
'மத உணர்வுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல்'
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு மசூதிகள் அழிக்கப்படும் விவகாரத்தை ஒரு காரணமாக அரசு ஏன் முன்வைக்கிறது?
இத்தகைய 'அரசுப் பிரசாரம்' முதலாவதாக நாட்டில் உள்ள இரானிய அரசின் ஆதரவாளர்களுக்காகவும், இரண்டாவதாக இந்த எதிர்ப்பு இயக்கத்தில் சேரத் தயங்கி இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிரிவினருக்காகவும் செய்யப்படுகிறது என்று பேராசிரியர் பைவண்டி கருதுகிறார்.
"எதிர்ப்பாளர்களுக்கு எதிராக 'மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதும்', 'அவர்களின் நோக்கத்தைத் தீயதாகச் சித்தரிப்பதும்', அல்லது போராட்டக்காரர்களை மத விரோதிகள் அல்லது இறை நம்பிக்கையற்றவர்கள் என்று அறிவிப்பதுமே இத்தகைய நடவடிக்கைகளை அரசு முன்னிலைப்படுத்துதற்குக் முக்கிய காரணம்," என்று அவர் கூறினார்.
ஜெர்மனியில் வசிக்கும் மத அறிஞர் ஹசன் யூசுபி அஷ்கவாரி, அரசு மட்டத்தில் மத உணர்வுகளைத் தூண்டுவதை 'ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை' சுட்டிக்காட்டினார். மேலும், இஸ்லாமியக் குடியரசான இரான் தனது எதிர்ப்பாளர்களை 'அழிக்க' முயற்சிப்பதாகவும், அவர்களை 'இஸ்லாம், குரான் மற்றும் மசூதிகளின் எதிரிகளாக' சித்தரிப்பதாகவும் பிபிசியிடம் கூறினார்.
இருப்பினும், இது ஒருதலைப்பட்சமானது அல்ல என்றும், இஸ்லாமியக் குடியரசான இரான் மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு மசூதிகளைப் பயன்படுத்துவது எப்படித் தவறானதோ மற்றும் கண்டிக்கத்தக்கதோ, அதேபோல் எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ எந்த நோக்கத்திற்காகவும் மசூதிகளை அழிப்பதோ அல்லது தீ வைப்பதோ தவறான செயல் என்றும், அதற்கு 'எதிர்மறையான விளைவுகள்' ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
ஹசன் யூசுபி அஷ்கவாரியின் கூற்றுப்படி, இத்தகைய நடவடிக்கைகளைப் போராட்டக்காரர்கள் எடுத்திருந்தால், அது 'இஸ்லாமிய எதிர்ப்புப் போக்கின்' அடையாளமாகும்.
இரானிய சமூகத்தின் பெரும்பகுதி மதப்பற்று கொண்டது என்றும், "இரானில் இஸ்லாத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்ற கருத்து வரலாற்று ரீதியாக ஒரு பெரிய தவறான புரிதல்," என்றும் அவர் கூறுகிறார்.
அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் மசூதி அல்லது குரானுக்கு தீ வைக்க முயன்றிருந்தால், அந்த நடவடிக்கைகளை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதத் தேவையில்லை என்றும், மாறாகத் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்தும் நிறுவனத்திற்கு எதிரான அடையாளப் பூர்வமான எதிர்ப்பாக இதைப் புரிந்து கொள்ளலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புரட்சிக்கு முன் மசூதிகள் மீது 'மக்கள் தாக்குதல் நடத்தவில்லை'
இஸ்லாமியக் குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பே, இரானின் மசூதிகள் சமூகத்தில் முக்கியப் பங்காற்றின. பல சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அப்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவும் இருந்தது.
முனாஃப்சாதாவின் கூற்றுப்படி, ரேஸா ஷா பஹ்லவியின் ஆட்சிக்காலத்தில், துருக்கிய மதச்சார்பின்மை மாதிரியைப் பின்பற்றி, இரானிய அரசு மதக் கல்வியின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பியது. மேலும் 'ஏதோ ஒரு வகையில் மதத்தைக் கட்டுப்படுத்துவது' அதன் நோக்கமாக இருந்தது.
பஹ்லவி ஆட்சியில் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்லாமியக் குடியரசான இரானின் வரலாற்றாசிரியர்கள் குற்றம் சாட்ட முயன்றாலும், சில சந்தர்ப்பங்களில் அரசு 'மசூதிகளுக்கு உதவியது' என்பதே உண்மை என்று அவர் கருதுகிறார்.
வரலாற்று ஆய்வாளர் முனாஃப்சாதாவின் கூற்றுப்படி, முகமது ரேஸா ஷா பஹ்லவியின் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் 'கம்யூனிச இறை மறுப்பாளர்களுக்கு எதிராகப் போரிடும்' இடங்களாக இருந்தன. மேலும் "உண்மையில், முகமது ரேஸா ஷாவின் பார்வையில் மதவாதிகளை விடக் கம்யூனிஸ்டுகளே மிகவும் ஆபத்தானவர்கள்."
இருப்பினும், ஹசன் யூசுபி அஷ்கவாரியின் பார்வையில், புரட்சிக்கு முன் மசூதிகள் கட்டப்பட்டதை அரசின் 'ஆதரவு' அல்லது 'ஊக்குவிப்பு' என்று கருத முடியாது.
புரட்சிக்கு முன் இஸ்லாத்தின் பரவல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, மசூதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 'முற்றிலும் இயல்பானது' என்று அவர் கருதுகிறார்.
முனாஃப்சாதாவின் கூற்றுப்படி, புரட்சிக்கு முன், மசூதிகள் அரசின் ஆதரவு பெற்றவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசு அவற்றை ஒருபோதும் குறிவைத்ததில்லை.
பாரம்பரிய இடங்களைக் கருத்தியல் ஆயுதமாகப் பயன்படுத்துதல்
நிபுணர்களின் கூற்றுப்படி, இரானிய மசூதிகளின் நிலையான மற்றும் பாரம்பரிய நோக்கத்தில் ஒரு பெரிய மாற்றம் காணப்படுகிறது. முன்பு அவை வழிபாடு மற்றும் ஆன்மீக விவகாரங்களுக்கான இடமாக மட்டுமே கருதப்பட்டன.
புரட்சிக்கு முன், பல உலமாக்கள் (மத அறிஞர்கள்) மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டுவதற்கு மசூதிகளைப் பயன்படுத்தினர். உதாரணமாக, இஸ்லாமியக் குடியரசின் தற்போதைய அதியுயர் தலைவர் அலி காமனெயி, மஷ்ஹத்தின் 'கராத் மசூதி' உட்படப் பல மசூதிகளில் உரையாற்றினார். அவரது உரைகளின் உள்ளடக்கங்கள் அரசுக்குக் கவலையளிக்கும் விஷயமாக இருந்தன.
புரட்சிக்கு முந்தைய சூழல் மற்றும் 'அரசியல் கட்டுப்பாடுகளை' சுட்டிக்காட்டும் ஹசன் யூசுபி அஷ்கவாரி, அந்த நேரத்தில் 'மசூதிகள் போராட்ட மையமாக மாறியிருந்தன' என்றும், புரட்சிக்குப் பிறகும் இராக்குடனான எட்டு ஆண்டுகாலப் போரின்போது படைகளைத் திரட்டவும் உதவவும் மசூதிகளே முக்கிய மையமாகத் திகழ்ந்தன என்றும் கூறுகிறார்.
எவ்வாறாயினும், இரண்டு காலகட்டங்களிலும் மசூதிகள் 'போராட்ட மையமாக' இருந்தன என்று நாம் வைத்துக் கொண்டாலும், 1979 புரட்சிக்குப் பிறகு மசூதிகளுக்கு வழங்கப்படும் உதவி புரட்சிக்கு முந்தைய உதவிக்கு ஈடானது அல்ல.
இஸ்லாமியக் குடியரசு மசூதிகளுக்கு உதவ அரசு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அரசு சாரா நிதி ஆதாரங்களைத் தவிர, அரசு பட்ஜெட் திட்டங்களிலும் மசூதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் மத விவகாரங்களைத் தவிர, 'முஸ்லிம்களின் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார' விவகாரங்களுக்கும் மசூதிகள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஹசன் யூசுபி அஷ்கவாரி வலியுறுத்துகிறார்.
இருப்பினும், அத்தகைய நடவடிக்கைகள், குறிப்பாக நவீன காலங்களில், மசூதியின் சமூக அந்தஸ்தைப் பலவீனப்படுத்துகின்றன என்று பேராசிரியர் பைவண்டி எச்சரிக்கிறார்.
"மத அரசாங்கம் மசூதிகளின் கட்டமைப்பைத் தனது அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றுகிறது. மசூதிகளின் இமாம்கள் அரசை அதிகம் சார்ந்திருக்கிறார்கள். மசூதிகள் அரசின் கொள்கையை ஊக்குவிக்கும் மற்றும் அரசை ஆதரிக்கும் இடமாக மாறிவிட்டன''
குறிப்பாக இஸ்லாமியக் குடியரசான இரானில் அரசுக்கும் மதத் தலங்களுக்கும் இடையிலான ராணுவத் தொடர்புகளைப் பேராசிரியர் சயீத் பைவண்டி விமர்சிக்கிறார். "அரசுடன் தொடர்புடைய படைகளின் நடவடிக்கைகள் மசூதிகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன."
மசூதிகள் இப்போது புனிதம் சார்ந்த அடையாளமாக இல்லை என்று சில இரானியர்கள் கருதுகிறார்கள். 2023ஆம் ஆண்டின் சிஎன்என் செய்தி ஒன்று, மஹ்சா அமினி இயக்க போராட்டத்தின் போது அரசால் பயன்படுத்தப்பட்ட ரகசியத் தடுப்புக்காவல் மையங்களைக் கண்டறிந்தது, அவற்றில் சில மசூதிகளாகவும் இருந்தன.
மஷ்ஹத் நகரம் உட்பட, கைதிகள் இந்த இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதை பல ஆதாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
மதராஸாக்கள் மீது 'அடையாளப் பூர்வமான' தாக்குதல்கள்
சமீபத்திய போராட்டங்களில் மசூதிகளுடன், மதப் பள்ளிகள் (மதராஸாக்கள்) மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகளும் வந்தன. இத்தகைய தாக்குதல்கள் "மிகவும் அடையாளப் பூர்வமானவை என்றும், குறைந்தபட்சம் சமூகத்தின் ஒரு முக்கியப் பகுதிக்கும் மத அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கின்றன" என்றும் சயீத் பைவண்டி கருதுகிறார்.
சில அறிஞர்கள் இரானின் தற்போதைய சூழலை, மதத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான கூட்டணியால் போராட்டக்காரர்கள் அதிருப்தி அடைந்த வரலாற்றுக் காலங்களுடன் ஒப்பிடுகின்றனர்.
இரானில் மசூதிகள் மீதான தாக்குதலைப் புரட்சியாளர்கள் தேவாலயங்கள் மீது நடத்திய தாக்குதலுடனும், பிரெஞ்சுப் புரட்சியின் போது மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டதுடனும் ஒப்பிடலாம் என்று முனாஃப்சாதா கூறுகிறார். அந்தத் தாக்குதல்கள் 'முடியாட்சி, நிலப்பிரபுத்துவம் மற்றும் மதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் நடத்தப்பட்டன.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி தேவாலயம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. முனாஃப்சாதாவின் கூற்றுப்படி, "மத அடிப்படைவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், மதத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் புரட்சியாளர்கள் விரும்பினர்."
1905ஆம் ஆண்டில், பிரான்சில் 'லைசித்தே' (மதச்சார்பின்மை) சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இது மதத்தையும் அரசையும் பிரிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் மதக் கட்டடங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது பிரான்சில் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை.
ஆனால் இரானில் ஒரு மத அரசாங்கத்தின் கீழ், பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உட்பட அனைத்துக் குடிமக்களிடையேயும் 'சட்ட ரீதியான சமத்துவத்தை' நிலைநாட்டுவது சாத்தியமில்லை என்று ஹசன் யூசுபி அஷ்கவாரி கூறுகிறார்.
இஸ்லாமியக் குடியரசு வீழ்ந்து, வருங்கால அரசாங்கம் அத்தகைய சமத்துவத்தில் நிலைத்திருந்தால், 'மதம் மற்றும் மதத் தலங்களின் புனிதம் பாதுகாக்கப்படும்,' என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு