You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்கர் பரிந்துரையில் சாதனை படைத்த 'சின்னர்ஸ்' படத்தின் கதை என்ன?
- எழுதியவர், இயன் யங்ஸ்
- பதவி, கலாசார செய்தியாளர்
'சின்னர்ஸ்' என்ற வேம்பயர் திகில் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளில் 16 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், ஒரே திரைப்படம் அதிகப் பரிந்துரைகளைப் பெற்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தப் படம் 14 பரிந்துரைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த ஆண்டு இதற்குப் போட்டியாக இருக்கும் லியோனார்டோ டிகாப்ரியோவின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரில்லர் திரைப்படம் 13 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சின்னர்ஸ் படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் அதன் நாயகன் மைக்கேல் பி ஜோர்டான் மற்றும் அவரது பிரிட்டன் சக நடிகர்களான வுன்மி மொசாகு மற்றும் டெல்ராய் லிண்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வெற்றியாளர்கள் மார்ச் 15 அன்று ஹாலிவுட்டில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.
பரிந்துரைகளில் முன்னணியில் உள்ள படங்கள்
- சின்னர்ஸ் - 16
- ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் - 13
- மார்ட்டி சுப்ரீம் - 9
- ஃபிராங்கண்ஸ்டைன் - 9
- சென்டிமென்டல் வேல்யூ - 9
- ஹேம்நெட் - 8
'சின்னர்ஸ்' ஒரு திகில் படம் மட்டுமல்ல
ஆஸ்கர் போன்ற விருது விழாக்களில் திகில் படங்கள் பொதுவாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போக்கை 'சின்னர்ஸ்' முறியடித்ததுடன், எதிர்பார்ப்புகளையும் மிஞ்சியுள்ளது.
இது 1951-ல் 'ஆல் அபௌட் ஈவ்', 1998-ல் 'டைட்டானிக்' மற்றும் 2018-ல் 'லா லா லேண்ட்' ஆகிய படங்கள் படைத்த 14 பரிந்துரைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
சின்னர்ஸ் படத்தில் 1930-களில் மிசிசிப்பிக்குத் திரும்பும் இரட்டை சகோதரர்களாக மைக்கேல் பி ஜோர்டான் நடித்துள்ளார். அவர்கள் அங்கு அமைக்கும் இசை-நடனக் கூடம் ரத்தம் குடிக்கும் வேம்பயர்களால் தாக்கப்படுகிறது. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ்-நைஜீரிய நடிகை வுன்மி மொசாகு மற்றும் லண்டனில் வளர்ந்த டெல்ராய் லிண்டோ ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு நடிப்புக்கான விருதுகளில் பிரிட்டிஷ் நம்பிக்கையை இவர்கள் இருவரும் தாங்கி நிற்கின்றனர்.
ரியான் கூக்ளர் இந்தப் படத்தை இயக்கி, எழுதி, தயாரித்ததற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும், சிறந்த திரைப்படத்திற்கான பிரிவிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது.
பிபிசி ரேடியோ 1-ன் திரைப்பட விமர்சகர் அலி பிளம்ப் கூறுகையில், "1990-களின் முற்பகுதியில் 'தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்' படத்திற்குப் பிறகு எந்தவொரு திகில் படமும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதில்லை. அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது" என்றார்.
சின்னர்ஸ் திரைப்படம் முழுத் திரையுலகிலிருந்தும் இவ்வளவு பரவலான பாராட்டைப் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
இது ஒரு திகில் படம் என்பதைத் தாண்டி "அதற்கும் மேலானது" என்று அவர் மேலும் கூறினார். "இதில் வேம்பயர்கள் இருந்தாலும், அதையும் தாண்டி இதில் நிறைய விஷயங்கள் உள்ளன."
பிபிசி கலாசார ஆசிரியர் கேட்டி ரசால் கூறுகையில், "என் பார்வையில், இது பழிவாங்கும் திரில்லர். அமெரிக்காவின் இனப் பிரச்னைகளை வெளிப்படுத்தும் ஸ்டைலான இசைப்பயணம். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம், இசையின் ஆற்றல் மற்றும் மீட்டுதலை வெளிப்படுத்தும் படமாகும்'' என்றார்.
"வேம்பயர்கள், கே.கே.கே இனவெறியர்கள், முன்னாள் தாதா இரட்டையர்கள், மிசிசிப்பி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ப்ளூஸ் இசை வரலாறு - இவை அனைத்தையும் இணைத்தது இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் என்று யார் கண்டது?" என்றும் அவர் குறிப்பிட்டார்.
படத்தின் பின்னணி என்ன?
1930களில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடைமுறையில் இருந்த இனவெறி சட்டங்களின் பின்னணியில் இந்த படம் அமைந்திருக்கிறது.
கதையின் நாயகன் மைக்கேல் ஜோர்டான் 'ஸ்டேக்', 'ஸ்மோக்' என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிகாகோவில் பல ஆண்டுகளை கழித்த பின்னர் மிஸிஸிப்பியில் உள்ள தங்களின் சொந்த ஊரில் உள்ளூர் கருப்பின மக்களுக்காக இசை-நடனக் கூடத்தைத் (juke joint) தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த இரட்டையர்கள் வருகின்றனர்.
அந்த இசை-நடனக் கூடத்தில் என்னென்ன நடக்கின்றன என்பதே கதை.
யதார்த்தத்திற்கும் இயற்கையை மீறிய நிகழ்வுகளுக்கும் இடையே இக்கதை பயணிக்கிறது. இனவெறி, குடும்பம், மூடநம்பிக்கை, ஆன்மீகம் என பலவற்றையும் இத்திரைப்படம் உள்ளடக்கியுள்ளது.
மர்மமும் திகிலும் நிறைந்த இக்கதை, தீமைக்கு எதிரான மனிதர்களின் போராட்டத்தையும் இசையின் வலிமையையும் ஒருங்கே விவரிக்கிறது.
இயக்குநர்: ரியான் கூக்ளர்
ஒளிப்பதிவு: ஆட்டம் துரால்ட் அர்காபாவ்
படத்தொகுப்பு: மைக்கேல் பி ஷாவெர்
இசை: லுட்விக் கோரன்சன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு