You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தியாவில் டி20 உலகக்கோப்பை ஆட மாட்டோம்' என்ற வங்கதேச முடிவு பற்றி அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?
வங்கதேச கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்குச் செல்லாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம்(பிசிபி) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பாதுகாப்பு மதிப்பாய்வுக்கு பிறகு ஐசிசி இதனை நிராகரித்துவிட்டது.
வியாழக்கிழமை வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், "ஐசிசியிடம் இருந்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களின் பாதுகாப்பு கவலைகளை ஐசிசி பரிசீலிக்கும் என்றும், இலங்கையில் விளையாடும் கோரிக்கையை ஏற்கும் என்றும் நம்புகிறோம்" என்றார்.
மறுபுறம் பிசிபி தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் கூறுகையில், வங்கதேச கிரிக்கெட் குறித்து தாம் பெருமைப்படுவதாகவும், ஆனால் ஐசிசியின் பங்கு கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான செய்திகள், இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் விளையாடப் போவதில்லை என்ற தனது முடிவில் வங்கதேசம் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், சில ஊடக செய்திகள் முன்னாள் வீரர்களை மேற்கோள் காட்டி, இது ஒரு தவறான முடிவு என்றும் விமர்சித்துள்ளன.
அதேசமயம், பாகிஸ்தானிலும் இந்த விவகாரம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீப், பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்க வேண்டும் என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளார்.
வங்கதேச ஊடகங்களில் எந்த மாதிரியான விவாதங்கள் இடம்பெறுகின்றன?
வங்கதேசத்தின் முதன்மையான நாளிதழான புரோத்தோம் ஆலோ 'போட்டி நடைபெறும் இடம் மாற்றப்படாவிட்டால், வங்கதேசம் உலகக்கோப்பையில் விளையாடாது' என்பதைத் தனது முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
வங்கதேசம் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்று ஐசிசி தனது இறுதி முடிவை ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசுடன் கலந்தாலோசிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் 24 மணிநேரம் அவகாசம் கோரியது. இருப்பினும், அந்த நேரத்திற்குப் பிறகும் வங்கதேசம் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
ஐசிசி போட்டி நடைபெறும் இடத்தை மாற்றாத வரை, பாதுகாப்பு காரணங்களால் இந்த ஆண்டின் டி20 உலகக்கோப்பையில் வங்காளதேசம் விளையாடாது என்பதே தற்போதைய இறுதி முடிவாகும்.
வியாழக்கிழமை வங்காளதேச கிரிக்கெட் வாரியம், ஐசிசி-க்கு மற்றொரு மின்னஞ்சலை அனுப்பி தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அந்த நாளிதழ் எழுதியுள்ளது.
அத்துடன், வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஐசிசியின் சுயாதீனக் குழுவிடம் ஒப்படைக்குமாறு பிசிபி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் குழு சுயாதீன வழக்கறிஞர்களை கொண்டது. இது ஐசிசி தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பாகும்.
அரசின் இந்த முடிவிற்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று நம்பப்படுவதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
'டெய்லி ஸ்டார்' இதழிடம் பேசிய முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், "பிப்ரவரி 12-ல் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு இந்தியா - வங்கதேச கிரிக்கெட் உறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன். விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு இந்தியா-வங்கதேச கிரிக்கெட் உறவுகள் மேம்படலாம்'
ஆகஸ்ட் 5, 2024 அன்று ஷேக் ஹசீனா அதிகாரம் இழந்து இந்தியா வந்தடைந்த பிறகு, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.
இப்போது பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் உறவுகள் மேம்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் முக்கிய ஊடகங்களில் ஒன்றான டெய்லி ஸ்டார் இதழிடம் அஷ்ரபுல் கூறுகையில், "பிசிபி என்ன செய்ய முடியும்? இந்த முடிவு அரசிடமிருந்து வந்தது" என்றார்.
"இன்னும் 22 நாட்களில் புதிய அரசு வந்துவிடும், இரு நாடுகளின் (இந்தியா மற்றும் வங்கதேசம்) சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். புதிய அரசு அமையும் போது, அது முந்தைய அரசின் முடிவுகளுக்குப் பொறுப்பேற்காது."
"விளையாட்டிற்குள் அரசியல் வரக்கூடாது, அதை நாங்கள் விரும்பவில்லை. உலகக்கோப்பையில் விளையாடாதது வருத்தமளிக்கிறது. ஆனால் வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் விஷயங்களைச் சரிசெய்துவிடும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
அதே சமயம், பிடிநியூஸ்24 (bdnews24) தனது செய்தியில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
பிடிநியூஸ்24 தகவலின்படி, ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டது குறித்து அமினுல் இஸ்லாம் கூறுகையில், "முஸ்தபிசுர் காயமடையவில்லை. அவர் தனது பெயரைத் திரும்பப் பெறவும் இல்லை. வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அவரது தடையின்மைச் சான்றிதழை திரும்பப் பெறவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்" என்றார்.
"வங்கதேசம் போன்ற கிரிக்கெட் பிரியமிக்க நாடு இந்தத் தொடரில் இல்லையென்றால், அது ஐசிசி-க்கு பெரிய இழப்பாக இருக்கும்" என அமினுல் இஸ்லாம் மேலும் கூறினார்.
'உள்ளூர் கிரிக்கெட்டிற்கும் உலகக் கோப்பைக்கும் வித்தியாசத்தை மறந்துவிட்டோம்'
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றிய செய்யது அஷ்ரபுல் ஹக் என்பவரிடமும் டெய்லி ஸ்டார் பேசியது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் பங்கேற்காதது குறித்து ஹக் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
"முழுப் பிரச்னையும் சரியாகக் கையாளப்படவில்லை என்பதே உண்மை. விளையாட்டையும் அரசியலையும் ஒருபோதும் கலக்கக் கூடாது. உள்நாட்டுத் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள தவறிவிட்டோம் என்று நினைக்கிறேன்" என்றார்.
இந்த விவகாரத்தை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என்று டெய்லி ஸ்டார் அவரிடம் கேட்டது.
"வியூகம் தவறானது. ஆரம்பத்திலிருந்தே நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு இடம் இருக்க வேண்டும். 1980-களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருந்தது. அப்போது பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் ஜியா உல் ஹக் அந்த அச்சங்களை நீக்க ஜெய்ப்பூரில் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றார். கார்கில் போருக்குப் பிறகு 2004-ல் முழு இந்திய அணியும் பாகிஸ்தான் சென்றது. அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திய அணி லாகூர் புறப்படுவதற்கு முன், 'வெற்றி தோல்வி முக்கியமல்ல, பாகிஸ்தான் மக்களின் இதயங்களை வெல்வது முக்கியம்' என்று கூறினார்," என அவர் பதிலளித்தார்.
"2008 பயங்கரவாதத் தாக்குதலின் போது நான் ஏசிசி (ACC) தலைமை செயல் அதிகாரியாக இருந்தேன். பின்னர் இந்தியாவின் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிசிசிஐ தலைவராக இருந்த ஷஷாங்க் மனோகர் ஆகியோருடன் பேசி, இரு நாடுகளுக்கும் இடையே இதே நிலை நீடித்தால் விஷயங்கள் ஒருபோதும் முன்னேறாது என்று கூறினோம். அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டு 2010-ல் ஆசியக் கோப்பையில் விளையாட வந்தனர். எனவே இது போன்ற விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 'நான் வரமாட்டேன்' என்று மட்டும் சொல்வது வேலைக்கு ஆகாது," என்று அவர் கூறினார்.
கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது வங்கதேசத்தின் தவறு என்று ஹக் கூறினார்.
"விளையாட்டில் ஏன் இவ்வளவு கடுமையான நிலைப்பாடு? நாம் நடைமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டும். முழு செயல்முறையிலும் நாம் ஐசிசி-யுடன் தொடர்பில் இருந்தோம், ஏனென்றால் அவர்கள்தான் அதன் தலைவர். ஐசிசி பாதுகாப்பு மதிப்பீட்டைச் செய்து, பாதுகாப்பு நிலைமை சரியாக இருப்பதாகக் கூறியது. இது அவர்களின் தொடர் என்பதால், நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜதந்திர வழிகள் எப்போதும் திறந்தே உள்ளன. நமது வாரியத் தலைவர் நேரடியாக இந்திய வாரியத்திடம் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டிருக்கலாம்" என்றார்.
உலகக்கோப்பையைத் தவிர்ப்பது மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானிலும் விவாதம்
பாகிஸ்தான் சேனலான ஏஆர்ஒய் நியூஸின் 'ஸ்போர்ட்ஸ் ரூம்' நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர் ஷாஹித் ஹாஷ்மி, இந்தியாவுடனான இந்த மோதலில் வங்கதேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தினார்.
"முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தான் முழு சர்ச்சையும் தொடங்கியது. ஒரு வீரருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத போது, முழு அணிக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் அங்கு ஆபத்து இருக்காதா?,"என்ற வங்கதேசத்தின் கேள்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு ஷாஹித் ஹாஷ்மி கூறுகையில், "நிச்சயமாக அதிக ஆபத்து இருக்கும். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த அறிவிப்பை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மிகப்பெரிய தவறு. அவர்கள் இதைச் செய்ய விரும்பினால் சில நாட்களுக்குப் பிறகோ அல்லது டி20 உலகக்கோப்பைக்குப் பிறகோ செய்திருக்கலாம். அல்லது வங்கதேச அணி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகு செய்திருக்கலாம்" என்றார்.
இவை அனைத்தும் ஐசிசியின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அவர் கூறினார்.
"இந்தியா பாதுகாப்பு காரணங்களைச் சொல்லும்போது அது கேட்கப்படுகிறது, ஆனால் வங்கதேசம் ஒரு சிறிய நாடு என்பதால் அதற்கு ஆதரவு கிடைப்பதில்லை" என்று ஷாஹித் ஹாஷ்மி கூறினார்.
உறுப்பு நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தது.
இதே விவாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஆலோசகர் தஃபஸுல் ஹைதர் ரிஸ்வியிடம் வங்கதேசத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டபோது, ஐசிசி இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மீது ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டால், வங்கதேசம் இந்த விவகாரத்தை ஐசிசியின் சுயாதீனக் குழுவிடம் (தகராறு தீர்வு குழு) கொண்டு செல்லலாம்."
"ஐசிசி உறுப்பினராக அவர்களுக்கு அந்தக் குழுவிடம் செல்லும் உரிமை உள்ளது. இந்த விஷயத்தில், ஒரு உறுப்பு நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகப் பாகிஸ்தானும் இந்தப் பிரச்னையை எழுப்பலாம்" என்றார்.
அதே நேரத்தில், 'காட்பிஹைண்ட்ஷோ' என்ற யூடியூப் சேனலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப், பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐசிசி இந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தை விமர்சித்த ரஷித் லத்தீப், "பாகிஸ்தானும் இந்தியாவும் இல்லையென்றால் உங்கள் உலகக்கோப்பையில் 50 சதவீதப் பங்கு இல்லை. தற்போதைய கிரிக்கெட் அமைப்பிற்குச் சவால் விட இதுவே சரியான நேரம். பாகிஸ்தான் வங்கதேசத்துடன் இருப்பதாகக் கூறி டி20 உலகக்கோப்பையில் விளையாட மறுக்க வேண்டும்" என்றார்.
பிரச்னையின் முழு பின்னணி என்ன?
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவி வரும் பதற்றம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு உத்தரவிட்டதே இந்த பிரச்னையின் தொடக்கமாக அமைந்தது.
முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2026 ஐபிஎல் தொடருக்காக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு வாங்கியிருந்தது.
அவரை அணியிலிருந்து நீக்கியது குறித்து வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், நாட்டிற்கும் இழைக்கப்படும் அவமதிப்பை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
வங்கதேசம் மற்றொரு நடவடிக்கையாகத் தனது நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதித்தது.
ஜனவரி 4-ம் தேதி, வங்கதேச கிரிக்கெட் வாரியம், அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு, பாதுகாப்பு காரணங்களால் வங்கதேச அணி டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்கு வராது என்று ஐசிசிக்குக் கடிதம் எழுதியது.
இதற்குப் பதிலளித்த ஐசிசி, தான் அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் செய்துள்ளதாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து, தனது கிரிக்கெட் அணி உலகக்கோப்பை விளையாட இந்தியாவுக்குச் செல்லாது என்பதை வங்கதேசம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு