You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு': திருவள்ளூர் காதல் தம்பதி கூறுவது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"வேறு சாதியில் காதலித்து திருமணம் செய்ததால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் தவறாகப் பேசுகின்றனர். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஊரில் வாழவே முடியவில்லை"
-கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுலாபுரம் கிராமத்தில் வசிக்கும் 23 வயதான பானுமதி கூறிய வார்த்தைகள் இவை.
இதே கிராமத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டே தங்களை ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஊர்ப் பிரமுகர்களின் தூண்டுதலின்பேரில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 17 ஆம் தேதியன்று காவல்நிலையத்தில் பானுமதி புகார் அளித்துள்ளார்.
ஆனால், 'இவை முற்றிலும் தவறான குற்றச்சாட்டுகள்' என ஊர்ப் பிரமுகர்கள் பிபிசி தமிழிடம் மறுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பெரிய ஓபுலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்தக் கிராமத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் வசிக்கின்றனர்.
இதே கிராமத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மீனவ சமூக குடும்பங்கள் வசிக்கின்றன. இச்சமூகத்தைச் சேர்ந்த பானுமதியை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரேம்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் இதே ஊரில் இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பணியைச் செய்து வருகிறார்.
"ஐந்தாண்டுகளாக காதலித்து 2022 ஆம் ஆண்டு பானுமதியை திருமணம் செய்து கொண்டேன். வேறு சாதியில் திருமணம் செய்ததால் ஊருக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஒரு வருடமாக வெளியில் வசித்து வந்தோம்" எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
ஊருக்குள் தனக்கு சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் நேர்ந்ததாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"சாதி தான் அனைத்துக்கும் காரணம்"
"முதல் குழந்தை பிறந்த பிறகு வாடகை கொடுக்க முடியாததால் மீண்டும் பெரிய ஓபுலாபுரம் கிராமத்துக்கு வந்தோம். நாங்கள் திரும்பி வந்ததை ஊர்ப் பெரியவர்கள் ஏற்கவில்லை. எங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவிட்டனர்" என்கிறார் அவர்.
கிராமத்துக்குள் நடக்கும் திருமணம், இறப்பு என எந்த நிகழ்வுகளிலும் தங்களால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேம்குமார், "ஊருக்குள் நாங்கள் வந்த பிறகு இளைஞர்களைத் தூண்டிவிட்டு சிலர் அடிக்கச் சொல்கின்றனர். இரவில் வீட்டின் மீது கற்களை எறிகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சமாதானம் பேசி அனுப்பிவிடுகின்றனர்" என்கிறார்.
"சாதி தான் அனைத்துக்கும் காரணம்" எனக் கூறும் பிரேம்குமாரின் மனைவி பானுமதி, "வெளியில் எங்கு சென்றாலும் தவறாக பேசுகின்றனர். வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஊரில் வாழவே முடியவில்லை" எனவும் தெரிவித்தார்.
தொடர் பிரச்னைகளால் கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
'ஊர்க்கட்டுப்பாடு எனக் கூறி ஒதுக்கிவிட்டனர்'
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதியன்று பெரிய ஓபுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் மரணமடைந்தார். இதையறிந்து பிரேம்குமாரின் மனைவிவழி உறவினர்கள் சிலர் மாலை அணிவிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆனால், மாலை அணிவிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "அப்போது அவர்களை சிலர் அடித்துள்ளனர். அடிவாங்கிய நபர்கள் என் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிதுநேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் என் வீட்டுக்கு வந்து என்னையும் அவர்களையும் அடித்தனர்" என்கிறார் பிரேம்குமார்.
இதன் பின்னணியில் ஊர்ப் பிரமுகர்கள் உள்ளதாகக் கூறும் பிரேம்குமார், தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். அதில், இளைஞர்களை சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மற்றொரு காணொளியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட காட்சியும் போலீசார் முன்னிலையில் சிலரை அடிப்பது போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
"எங்களைத் தாக்கியதைப் பார்த்து போலீஸ் வந்ததாக நினைத்தோம். ஆனால், சம்பவ இடத்தில் போலீசாரும் எங்களைத் தாக்கினர். அவர்களால் நாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியும் கேட்காமல் அடித்தனர்" என்கிறார் பிரேம்குமார்.
தாக்குதல் தொடர்பாக 17 ஆம் தேதியன்று இரவு ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரேம்குமாரின் மனைவி பானுமதி புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், 'எங்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு இல்லை. மீனவ சமுதாயப் பெண்ணை திருமணம் செய்த காரணத்துக்காக ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் என் கணவரை ஒதுக்கி வைத்துள்ளனர்' எனக் கூறியுள்ளார்.
'கூட்டாக சேர்ந்து தாக்கினர்'
ஜனவரி 17 ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்துப் புகார் மனுவில் கூறியுள்ள பானுமதி, 'ரஞ்சித் இறப்புக்கு சென்ற எனது அண்ணனை ஊரைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர். எங்கள் வீட்டுக்கு வந்து கதவு, கட்டில், வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கினர்' எனக் கூறியுள்ளார்.
'இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான கேசவன், சந்திரன், மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகியோர் எங்களை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்' எனவும் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.
பானுமதி அளித்த புகாரின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புச் சட்டம் (PROHIBITION OF HARASSMENT OF WOMEN ACT, 2002) உள்பட ஒன்பது பிரிவுகளில் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
"முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தாலும் எங்களை அடித்தவர்கள் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
பெரிய ஓபுலாபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில், பெருமாள் கோவில், மதுரை வீரன் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன. இங்கு நடக்கும் விழாக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் வரி வாங்குவது வழக்கமாக உள்ளது.
"நான் வேறு சாதியில் திருமணம் செய்ததால் கோவில் வரியை வாங்க மறுத்துவிட்டனர். கடந்த ஆண்டு திருவிழாவுக்கு வரி வாங்க மறுத்ததால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தேன்" எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். "ஆனால், வரியை வாங்க மாட்டோம் என ஊர்ப் பிரமுகர்கள் கூறிவிட்டனர்" என்கிறார் அவர்.
"வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை" என்கிறார் பிரேம்குமார்.
'காலம்காலமாக உள்ள நடைமுறை' - ஊர் நிர்வாகி
பிரேம்குமார் குடும்பத்தினரிடம் கோவில் வரி வாங்கப்படாதது குறித்து, ஊர் நிர்வாகிகளில் ஒருவரான கேசவனிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் ஜனவரி 17 ஆம் தேதி பானுமதி அளித்த புகாரின் அடிப்படையில் கேசவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஊரில் யாராவது திருமணம் செய்தால் வரி கொடுக்கும் பட்டியலில் அவர்கள் பெயரைச் சேர்ப்போம். ஆனால், அந்த நபர் திருமணம் செய்த பிறகு ஊரைவிட்டுப் போய்விட்டார்" என்கிறார் கேசவன்.
"ஊருக்குள் மீனவ குடும்பங்கள் யாரும் கோவிலுக்கு வரி கொடுப்பதில்லை" எனக் கூறும் கேசவன், "அவர்கள் தனியாக செயல்படுகின்றனர். விழா நடந்தால் எதாவது நன்கொடை கொடுப்பார்கள். காலம்காலமாக இங்கு இதுதான் நடைமுறையாக உள்ளது" என்கிறார்.
கோவிலுக்கு வரி வாங்காமல் தவிர்ப்பது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்துப் பேசும் கேசவன், "ஆர்.டி.ஓ நடத்திய பேச்சுவார்த்தையில், 'இவ்வளவு காலம் வரி வாங்கியதில்லை. இனியும் வாங்க மாட்டோம்' எனக் கூறிவிட்டோம்'' என்கிறார்.
கோவிலில் கடவுளை வணங்குவதில் இடையூறு ஏற்பட்டால் மட்டும் தெரிவிக்குமாறு அவர்களிடம் கூறிவிட்டு அதிகாரிகள் கிளம்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி 17 ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் குறித்துக் கேட்டபோது, ''சடலத்துக்கு சடங்குகளை செய்து முடித்த பிறகு நடுவழியில் மாலை போடக் கூடாது என ஊருக்குள் விதி உள்ளது. ஆனால், பிரேம்குமாரின் உறவினர்கள் சிலர் நடுவழியில் மாலை போட வந்தனர்" என்கிறார்.
'ஆயுதம் காட்டி மிரட்டியதால் புகார்'
"அப்போது, பிரேம்குமாரின் உறவினர்களில் ஒருவர் ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதால் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம்" என்கிறார் கேசவன்.
''எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. பிரேம்குமார் மனைவி கொடுத்த புகாரின்பேரில் என்னையும் இன்னொருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்கிறார்.
கலப்புத் திருமணம் செய்தால் ஊரில் ஏற்க மாட்டார்கள் என அவர்களே முடிவு செய்து ஒதுங்கிவிட்டதாகக் கூறும் கேசவன், ''அவர்கள் தான் சிலருடன் சேர்ந்து தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார்.
''பிரச்னையைத் தீர்க்க தயாராக உள்ளோம்'' - காவல் ஆய்வாளர்
ஆரம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திக்கிடம் பிபிசி தமிழ் பேசியது.
''எங்களிடம் புகார் வந்தவுடன் ஊர்ப் பிரமுகர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பிரேம்குமார் தரப்பினர் புகார் கொடுத்துவிட்டனர்" என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பும் நான்கைந்து முறை பேசி சமாதானமாக சென்றுள்ளதாகக் கூறும் கார்த்திக், ''பிரேம்குமார் வீட்டுக்கு வெளியூரை சேர்ந்த மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் ரஞ்சித் என்பவரின் இறப்பு நிகழ்வில் மிரட்டல் விடுத்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது'' என்கிறார்.
"இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை" எனக் கூறும் காவல் ஆய்வாளர் கார்த்திக், "அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தை சிலர் மிகைப்படுத்திக் கூறுகின்றனர்'' என்கிறார்.
''இருப்பினும் காவலர்கள் மூலம் பிரேம்குமார் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஊரில் உள்ள நபர்களால் அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்குத் தயாராக இருக்கிறோம்'' எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரேம்குமார் தரப்பினர் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, காவல் ஆய்வாளரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு