சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட காடவ மன்னர்கள் என்ன செய்தனர்?

14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென்னிந்தியாவின் மீது டெல்லியிலிருந்து முகமதியப் படையெடுப்பு நடந்தபோது அதனை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் இருவிதங்களில் எதிர்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? காடவராயர்கள் என்ன செய்தனர்?

பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர்

தென்னிந்தியாவின் மீது நடந்த மிக முக்கியமான முகமதியப் படையெடுப்பு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரால் நடத்தப்பட்டது. அந்தத் தருணத்தில், அதாவது 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் துவாரசமுத்திரத்தையும் திருவண்ணாமலையையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்தான் மூன்றாம் வீர வல்லாளர்.

மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், பாண்டிய நாடு மிகப் பெரிய வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தது.

பாண்டிய நாட்டின் மன்னனாக இருந்த குலசேகர பாண்டியனுக்கு சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என இரு மகன்கள் இருந்தன. சுந்தர பாண்டியன், பட்டத்து அரசியான கோப்பெருந்தேவியின் மகனாகப் பிறந்தவர். வீர பாண்டியன் மற்றொரு மனைவியின் மகன். ஆனால், வீர பாண்டியனையே பட்டத்து இளவரசனாக அறிவித்தார் குலசேகர பாண்டியன். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனைக் கொன்றார். பிறகு சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் வாரிசுரிமை மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். பாண்டிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர்.

அந்தத் தருணத்தில் மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தார். பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் நடந்துகொண்டிருந்ததால், தெற்கில் உள்ள பிரதேசங்களைப் பிடிக்கும் நோக்கத்தோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டார் அவர். அவருடைய படை சென்ற வழிகளில் இருந்த ஊர்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதாக, பேராசிரியர் அ. சிங்காரவேல் எழுதிய 'தமிழகத்தில் விஜயநகர ஆட்சி' என்ற நூல் குறிப்பிடுகிறது.

இந்தக் காலகட்டத்தில் டெல்லி அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவருடைய தளபதியான மாலிக் காஃபூர் கி.பி. 1310ல் தென்னகத்தின் மீது படையெடுத்தார். வீர வல்லாளர் மதுரையை நோக்கிச் சென்ற காலகட்டத்தில் மாலிக் காஃபூரின் படைகள் துவாரசமுத்திரத்தை நெருங்கின. இதைக் கேள்விப்பட்ட மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை நோக்கித் திரும்பினார். அதற்குள் துவாரசமுத்திரத்தில் முகமதியரின் படைகள் மிகப் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தன.

முகமதியப் படைகளை எதிர்த்துப் போரிடலாம் என அவர்களுடைய தளபதிகள் கூறிய நிலையிலும், வீர வல்லாளர் அதனை விரும்பவில்லை. இதனால், டெல்லி சுல்தானின் மேலாதிக்கத்தை மூன்றாம் வல்லாளர் ஏற்க வேண்டியதாயிற்று என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென் இந்திய வரலாறு' நூல் கூறுகிறது.

இந்த நிலையில், வீரபாண்டியனுக்கு சேர மன்னனான ரவிவர்மன் உதவிசெய்ததால், சுந்தரபாண்டியன், துவாரசமுத்திரத்தில் தங்கியிருந்த மாலிக் காஃபூரிடம் உதவி கோரியதாக இந்த நூல் கூறுகிறது.

மாலிக் காஃபூர் மதுரையை நோக்கி படையெடுத்துச் சென்றபோது மூன்றாம் வல்லாளனும் அவர்களுடன் சென்றார். இந்தப் படை மதுரையைத் தாக்கி அழித்து, ராமேஸ்வரம் வரை சென்றது. இதற்குப் பிறகு, சுந்தரபாண்டியனின் மாமனால் பின்னடைவைச் சந்தித்த மாலிக்காஃபூர் டெல்லிக்கே திரும்பிவிட்டார். அப்படிச் செல்லும்போது மூன்றாம் வல்லாளரின் மகனை உடன் அழைத்துச் சென்ற மாலிக்காஃபூர் சுல்தானிடம், வல்லாளர் செய்த உதவியைப் பற்றிய கூறியதாகவும் தென் இந்திய வரலாறு நூல் கூறுகிறது.

திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்ட தலைநகரம்

இதற்குப் பிறகு டெல்லியில் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து முகமது பின் துக்ளக் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். மதுரை சுல்தானின் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வடக்கிலிருந்து வரும் முகமதியப் படைகளின் தொந்தரவில்லாமல் ஆட்சி செய்ய விரும்பிய மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை துவார சமுத்திரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றிக்கொண்டார்.

முகமதியப் படைகளால் தன் தலைநகரத்தை மாற்ற வேண்டிய கோபத்தில் இருந்த மூன்றாம் வல்லாளர், மதுரை மீது படையெடுத்து அங்கு ஆட்சியில் இருந்த முகமதியப் படைகளைத் தோற்கடிக்க நினைத்தார்.

அதன்படி அவரது படை மதுரையை நோக்கிப் புறப்பட்டது. இந்தப் படை காவிரிக் கரையில் கண்ணூர்க் குப்பம் என்ற இடத்தில் இருந்த கோட்டையை முற்றுகையிட்டது. இந்தத் தருணத்தில் மூன்றாம் வல்லாளர் மோசமான முடிவெடுத்ததாலேயே தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததாகச் சொல்கிறது தென் இந்திய வரலாறு நூல். அதாவது, கண்ணூர் குப்பம் கோட்டைக்குள் இருந்த முகமதியர்கள், சரணடவைதற்கு முன்பாக மதுரை சுல்தானின் யோசனையைப் பெற அனுமதிக்க வேண்டுமெனக் கோரியதால், அதற்கு அனுமதித்தார் மூன்றாம் வல்லாளர்.

இதற்குப் பிறகு, மதுரையின் சுல்தானாக இருந்த கியாசுதீன், 4,000 வீரர்களுடன் காவிரிக் கரையை வந்தடைந்தார். இந்தப் போரின் துவக்கத்தில் மூன்றாம் வல்லாளருக்கு வெற்றி கிடைத்தாலும், மதுரை சுல்தானின் படைகள் இறுதியில் அவரைத் தோற்கடித்தன. இந்தப் போரில் மிக மோசமான முறையில் மூன்றாம் வல்லாளர் கொல்லப்பட்டார். அவரது உடல் மதுரைக் கோட்டையில் தொங்கவிடப்பட்டதாகவும் 1342ல் இதனைப் பார்த்ததாக இபின் பதூதா குறிப்பிடுவதாகவும் தென் இந்திய வரலாறு கூறுகிறது.

இந்த மூன்றாம் வல்லாளர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்திருப்பது குறித்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

காடவராய மன்னர்கள்

காடவராய மன்னர்களைப் பொறுத்தவரை, இந்த மூன்றாம் வல்லாளரின் காலத்திற்கு முற்பட்டவர்களாகவே பதிவாகியிருக்கிறார்கள். 12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழ மன்னருக்குக் கீழே ஆணையர்களாக இருந்து, விரைவிலேயே சிற்றறசர்களாக வலிமையடைந்தனர்.

குறிப்பாக சோழப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில், கி.பி. 1229லிருந்து கி.பி. 1278வரை அவர்கள் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்திருப்பதாக சி.எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி எழுதிய History Of Gingee And Its Rulers நூல் குறிப்பிடுகிறது. தமிழகப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்களுக்கு இடையில் நடந்த போரில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம், வலிமைபெற்று வந்தனர்.

கி.பி. 1242லிருந்து கி.பி. 1278வரை ஆட்சிசெய்த கோப்பெருஞ்சிங்கன், இவர்களில் புகழ் வாய்ந்த மன்னனாக இருந்தார். இவர் பாண்டிய மன்னனான முதலாம் சுந்தர பாண்டியனுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். முந்தைய தென்னாற்காடு மாவட்ட பரப்பில் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்த காடவராயர்களின் தலைநகரமாக கூடல் (கடலூர்) இருந்ததாகவும் பிறகு சேந்தமங்கலத்திற்கு மாற்றப்பட்டது என்றும் ஸ்ரீநிவாஸாச்சாரி கூறுகிறார்.

இந்த கோப்பெருஞ்சிங்கன்தான் மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி வைத்தார். கி.பி.1243ல் சோழர்களிடமிருந்து சுயாதீனம் பெற்ற மன்னராக ஆட்சி செய்ய ஆரம்பித்த அவர் தனக்கு 'மகாராஜ சிம்மன்' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். ஒரு கட்டத்தில் சோழமன்னனான மூன்றாம் ராஜராஜனை கோப்பெருஞ்சிங்கன் சிறைப்பிடித்தார்.

கோப்பெருஞ்சிங்கன் மன்னராக இருந்த காலகட்டத்தில், ஹொய்சாள நாட்டை இரண்டாம் நரசிம்மன், சோமேஸ்வரன், மூன்றாம் நரசிம்மன் ஆகியோரே ஆட்சி செய்துவந்தனர்.

மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை அனிருத் கனிசெட்டி எழுதிய Lords of the Earth and Sea நூல் விவரிக்கிறது.

"மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்டபோது ஹொய்சாள மன்னராக இருந்த சோமேஸ்வரன், அவரை விடுவிக்க காடவராயர்கள் மீது படையெடுத்தார். காடவராய அரசின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் இருந்த கிராமங்கள் சூறையாடப்பட்டன. சேந்தமங்கலத்தை நெருங்கியபோது, அதற்குச் செல்லும் தண்ணீர் தடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு இறங்கிவந்த கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜனை விடுவிக்க ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோப்பெருஞ்சிங்கன் காலமானார்" என்கிறார் அனிருத்.

ஒரு சில வரலாற்றாய்வாளர்கள் இரண்டு கோப்பெருஞ்சிங்கர்கள் இருந்ததாகக் கருதுகின்றனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1185லிருந்து கி.பி. 1243 வரை ஆட்சி செய்ததாகவும் அடுத்த கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1243லிருந்து கி.பி. 1248 வரை ஆட்சி செய்ததாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், அது சரியான கருத்து அல்ல என ஆர். சத்தியநாதய்யர் தனது 'The Kadavaraya Problem' கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் வீர வல்லாளரும் மகாராஜ சிம்மன் என அழைக்கப்பட்ட கோப்பெருஞ்சிங்கனும் வெவ்வேறு காலத்திலேயே ஆட்சியில் இருந்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு