You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்கள் பூமிக்கு கீழ் எவ்வளவு கிலோ மீட்டர் ஆழம் சென்றுள்ளனர்?
நமது கோளின் மையத்தில் என்ன இருக்கலாம் என்பது குறித்துப் பல திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த உயிரினங்கள் வாழும் நிலத்தடி உலகங்கள் முதல் மாற்று மனித நாகரிகங்கள் வரை, இந்தக் கதைகள் கவர்ச்சி மிகுந்தவையாகவும் திகில் நிறைந்தவையாகவும் இருக்கின்றன.
ஆனால், நாம் பூமிக்கு அடியில் முழுமையாகச் செல்லவில்லை என்றாலும், நமது காலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி உண்மையில் நாம் நிறைய அறிந்து வைத்துள்ளோம். அதன் உண்மை நிலை கற்பனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
அப்படியானால் நம்மால் எவ்வளவு ஆழம் வரை செல்ல முடிந்தது? அங்கே என்ன இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்?
பூமியின் அடுக்குகள்
பூமிக்குள் நான்கு பரந்த அடுக்குகள் உள்ளன.
லண்டன் பல்கலைக் கழக கல்லூரியின் நில அதிர்வு ஆய்வாளர் பேராசிரியர் ஆனா ஃபெரேராவின் கூற்றுப்படி, இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
"நாம் அனைவரும் வாழும் இந்த மெல்லிய, உடையக்கூடிய அடுக்கான 'மேலோடு' பற்றி உங்களுக்குத் தெரியும்," என்று அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியான 'தி இன்ஃபினைட் மங்கி கேஜ்' (The Infinite Monkey Cage)இல் கூறினார்.
பூமியின் மேலோடு கடலுக்கு அடியில் மெல்லியதாக இருக்கும், ஆனால் கண்டங்களுக்கு அடியில் 70 கிமீ தடிமன் வரை இருக்கலாம்.
அதற்குக் கீழே 'மூடகம்' (Mantle) உள்ளது. இது சுமார் 3,000 கிமீ தடிமன் கொண்டது மற்றும் 'மேக்மா' (Magma) எனப்படும் பாறைகளால் ஆனது. இது மனித கால அளவில் பார்க்கும்போது திடமாகத் தோன்றும்.
"ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகள் அளவில் பார்த்தால், அது உண்மையில் மெதுவாக நகர்கிறது," என்கிறார் ஃபெரேரா.
பின்னர் 'வெளிக்கரு' (Outer Core) உள்ளது, இது பெரும்பாலும் திரவ இரும்பு, நிக்கல் ஆகியவற்றால் ஆனது. இதுதான் பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.
'உட்கரு' (Inner Core) திடமான இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது. இது பூமியின் மிக அதிக வெப்பமான பகுதியாகும். இங்கு 5,500°C வரை வெப்பநிலை இருக்கும்.
'அதிஆழ' பயணம்
ஒரு மனிதன் மேலோட்டிற்குள் சென்ற மிக ஆழமான பகுதி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 75கி.மீ தொலைவில் உள்ள 'எம்போனெங் தங்கச் சுரங்கம்' ஆகும். இது மேற்பரப்பிற்குக் கீழே 4 கிமீ ஆழம் வரை நீண்டுள்ளது.
ஒரு மனிதன் உடல் ரீதியாக இதைவிட ஆழமாகச் செல்லவில்லை என்றாலும், நாம் இன்னும் ஆழமாகச் செல்ல துளையிடும் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளோம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட மிக ஆழமான துளை, வடக்கு ரஷ்யாவில் சோவியத் யூனியனால் தோண்டப்பட்ட 'கோலா சூப்பர்டீப் போர்ஹோல்' ஆகும். இது தோண்டத் தொடங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1992இல் முடிக்கப்பட்டது. இது தரைக்குள் 12.2 கிமீ ஆழம் வரை செல்கிறது.
இது, நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக 27 முறை அடுக்கி வைத்ததற்குச் சமம். ஆனால் அந்த இடத்திலும் இது பூமியின் மையக்கரு இருக்கும் ஆழத்தில் மூன்றில் ஒரு பகுதி தூரம் மட்டுமே ஆகும்.
பூமியின் மேலோட்டில் ஆழமாகத் தோண்டுவது பல காரணங்களால் மிகவும் கடினமானது. பூமிக்குள் நீங்கள் எவ்வளவு ஆழமாகச் செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக வெப்பநிலை இருக்கும்.
வெப்பமடையும் வீதம் 'புவிவெப்பச் சாய்வு' (Geothermal gradient) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் புவி அறிவியல் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஜாக்சனின் கூற்றுப்படி, கண்ட மேலோட்டிற்கான சராசரி வெப்பநிலை ஒரு கிலோமீட்டருக்கு 25-32 டிகிரி செல்ஷியஸ்.
மற்றொரு சவால், பூமியின் உட்புறத்தில் உள்ள அபரிமிதமான அழுத்தம்.
இந்த அழுத்தத்தை எதிர்கொண்டு, ஒரு ஆழ்துளைக் கிணற்றைத் திறந்தே வைத்திருப்பது என்பது "மிகவும் கடினமான காரியம்" என்று ஜாக்சன் கூறினார்.
பூமியை ஸ்கேன் செய்தல்
மேற்பரப்பிற்கு அப்பால் நம்மால் அதிக தூரம் செல்ல முடியாது என்றால், பூமியின் உட்புறத்தை நாம் எவ்வாறு ஆய்வு செய்கிறோம்?
அதற்கான பதில் சுவாரசியமானது: நில அதிர்வு அலைகள் (Seismic waves).
இவை நிலநடுக்கங்களால் உருவாக்கப்பட்டு பூமி வழியாகப் பயணிக்கும் அதிர்வுகள் ஆகும்.
அவை வெவ்வேறு பொருட்கள் வழியாகச் செல்லும்போது வெவ்வேறு பண்புகளைப் பெறுகின்றன. அவற்றை நில அதிர்வு அளவிகள் (Seismometers) மூலம் அளவிட முடியும்.
"நாங்கள் நிறைய மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைச் செய்கிறோம், மாதிரிகளை உருவாக்குகிறோம். பின்னர் அந்தப் பதிவுகளை பூமியின் உட்புறப் படங்களாக மாற்றுகிறோம்," என்று ஃபெரேரா கூறினார்.
ஜாக்சன் இந்தப் படங்களை "பூமியின் சிடி ஸ்கேன்கள்" என்று விவரிக்கிறார்.
பூமியின் அடுக்குகளை ஆய்வு செய்வது நிலநடுக்கங்களுக்குப் பின்னாலுள்ள செயல்முறைகள், எரிமலைகள் மற்றும் மலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது போன்ற நமது உலகத்தைப் பற்றிய பல விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும் என்று இரு நிபுணர்களும் ஒப்புக்கொண்டனர்.
"இறுதியில் 'மூடகம்' (Mantle) எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும்," என்று ஃபெரேரா கூறினார்.
இதைக் கற்றுக்கொள்வது, பூமியின் உட்புற வெப்பத்தைப் பயன்படுத்தும் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வடிவமான புவிவெப்ப ஆற்றலுக்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்ள உதவுவது போன்ற கூடுதல் பயன்களைக் கொண்டிருக்கலாம்.
இந்த ஆராய்ச்சித் துறை சில நேரங்களில் ஆய்வு நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறினார். பூமி காலப்போக்கில் எவ்வாறு பரிணமித்தது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஒருவேளை அதைத் தூரத்திலுள்ள மற்ற உலகங்களுடன் பொருத்திப் பார்க்கவும் இது உதவக்கூடும்.
பிபிசி ரேடியோ 4இன் 'தி இன்ஃபினைட் மங்கி கேஜ்' அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு