You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லால் சிங் சத்தா: ஆமிர் கான் படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?
ஆமிர் கான் நடித்து வெளியாகியிருக்கும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென வலதுசாரிகளும் இந்து அமைப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். காரணம் என்ன?
ஆமிர் கானும் கரீனா கபூரும் நடித்து வெளியாகியிருக்கும் 'லால் சிங் சத்தா', ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது. ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான 'ஃபாரஸ்ட் கெம்ப்' படத்தின் ரீ - மேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
லால் சிங் சத்தா ரயிலில் பயணம் செய்யும்போது உடன் பயணிப்பவர்களிடம் தன் கதையைப் பகிர்ந்துகொள்கிறான். மெதுவாகக் கற்கும் திறனுள்ள 'லால் சிங் சத்தா'வாக பதான்கோட் அருகில் பிறந்து, வளர்ந்து, ராணுவத்தில் பணியை முடித்து, மிகப் பெரிய உள்ளாடை நிறுவனத்தை நடத்திவருகிறான். சிறு வயதிலிருந்து தான் நேசித்த தோழியை பார்க்கச் செல்லும் அந்தப் பயணத்தில் தன் கதையைப் பகிர்ந்துகொள்கிறான். அன்பு, காதல், கண்ணீர், வீரம் நிறைந்த அந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு, தான் காதலித்த பெண்ணுடன் இணைகிறான்.
ஆனால், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே வலதுசாரி அமைப்புகளும் இந்து அமைப்புகளும் இந்தப் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் கோரிவந்தனர். கடந்த இரு நாட்களாக #BoycottLalSinghChaddha என்ற ஹாஷ்டாகின் கீழ் இந்தப் படத்திற்கான புறக்கணிப்பு அழைப்புகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
'லால் சிங் சத்தா' படத்தில் புறக்கணிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது?
'லால் சிங் சத்தா' படத்தில் ஆமிர் கான் சீக்கியராக நடித்திருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி, கார்கில் போரிலும் பங்கேற்று எதிர்த்தரப்பு இஸ்லாமியரைக் காப்பாற்றுகிறார். இந்தக் கதையின் ஊடாக 1970களுக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் நடந்த சம்பவங்கள் காட்சிகளாக அவ்வப்போது வந்து போகின்றன. ஆனால், இந்த சம்பவங்கள் குறித்து எந்த விமர்சனப் பார்வையும் இல்லாமல், காலகட்டத்தைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் காட்சிகள் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்து தெய்வங்கள் குறித்தோ, இந்து மதம் குறித்து விமர்சித்தோ, அவமதித்தோ இந்தப் படத்தில் காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. கதையிலோ, திரைக்கதையிலோ அப்படியான சூழல்கள்கூட ஏதும் இல்லை. ஆனாலும், இந்தப் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது படத்திற்கான எதிர்ப்பு தொடங்கிவிட்டது. அப்போதே இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டுமென்று பலர் கோர ஆரம்பித்துவிட்டனர். படம் வெளியாகும் நாள் நெருங்கியபோது, உத்தரப்பிரதேசத்தில் இருந்து செயல்பட்டுவரும் இந்து அமைப்பான சனாதன ரக்ஷக் சேனா, இந்தப் படத்தை இந்தியா முழுவதும் தடைசெய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறது. இந்தப் படத்தில் இந்துக் கடவுள்களை அவர் கேலி செய்கிறார் என்றும் அந்த அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
"சனாதனிகள் இந்தப் படத்தை ஓடவிடமாட்டோம்" என கர்ஜித்தனர். உத்தரப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.
இந்த சேனாவின் இளைஞர் பிரிவின் தலைவரான சந்திர பிரகாஷ் சிங், ஆமிர் கான் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டியதோடு, இந்துக் கடவுள்களையும் அவமதித்ததாகக் கூறினார். வீடுவீடாகப் போய், இந்தப் படத்தை யாரும் பார்க்க வேண்டாம் எனக் கேட்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சிலர், ஆமிர்கான் இந்தப் படத்தில் சீக்கியர்களைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி படத்தை புறக்கணிக்கக் கோருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான மான்டி பனேஸர் மிகக் கடுமையான கருத்துக்களைக் கூறி, இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டுமெனக் கூறினார். இந்திய ராணுவத்தையும் சீக்கியர்களையும் இந்தப் படம் கேவலப்படுத்துவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் இவர்.
'லால் சிங் சத்தாவும் அடிமுட்டாள், ஃபாரஸ்ட் கம்பும் அடிமுட்டாள்' என்றொரு ட்வீட்டையும் இவர் பதிவுசெய்தார்.
இந்தப் படம் இப்படி புறக்கணிக்கப்படுவதற்கு உண்மையிலேயே இந்தப் படத்தின் காட்சிகள்தான் காரணமா என்ற கேள்வியும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஆமிர் கான் தெரிவித்த சில கருத்துகள் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 2015ஆம் ஆண்டு நவம்பரில் நாளிதழ் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்ற ஆமிர் கான், இந்தியாவில் சகிப்பின்மை வளர்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இந்தக் கருத்தைத் தெரிவித்தது 'moral offence' என்று கூறியது. சிவசேனையின் பஞ்சாப் மாநிலத் தலைவர், ஆமிர்கானை யாராவது அறைந்தால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளிப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். Incredible India என்ற சுற்றுலா பிரச்சாரத்திலிருந்தும் ஆமிர் கான் நீக்கப்பட்டார்.
2016ல் Dangal படம் வெளியானபோது இதேபோல எதிர்ப்புகளும் புறக்கணிப்பு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டங்களை நடத்தியது. இப்போது #BoycottLalSinghChaddha டிரெண்ட் செய்யப்படுவதைப் போல அப்போது #BoycottDangal என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இருந்தபோதும் டங்கல் மாபெரும் வெற்றிபெற்றது.
ஆனால், ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் திரளவில்லை. படம் வெளியான முதல் நாளில் திரையரங்குகளில் 15-20 சதவீத இருக்கைகளே நிரம்பின. வெள்ளிக்கிழமையன்றும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. முதல் நாள் வசூல் வெறும் 12 கோடி ரூபாய் அளவுக்குத்தான் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில், இந்தப் படம் தமிழில் வெளியான பல திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு நான்கைந்து பேர்கூட வராததால், வெள்ளிக்கிழமையன்று காலைக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. மதியக் காட்சிகளிலும் பெரிய அளவில் ஆட்கள் திரளவில்லை.
வேறு சிலர், இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரும் ஷாருக்கானின் படமான பதான் படமும் புறக்கணிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்