தெற்காசிய அரசியலால் கிரிக்கெட் பாதிக்கப்படுகிறதா? - சர்வதேச நிபுணர்களின் பார்வை

    • எழுதியவர், சம்பத் திஸாநாயக்க
    • பதவி, பிபிசி சிங்கள சேவை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2026 டி20 உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், வங்கதேச அணியின் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB - பிசிபி) தங்கள் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே இலங்கையில் நடத்த வேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஐசிசி கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 'உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், போட்டிகள் இந்தியாவில் நடந்தால் அதில் பங்கேற்பதில்லை' என்று வங்கதேசமும் உறுதியாகக் கூறிவிட்டது.

வங்கதேசத்தின் இந்த முடிவு தெற்காசிய புவிசார் அரசியல் சூழலால் கட்டுப்படுத்தப்பட்டதே என்ற கருத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சர்வதேச உறவியல் நிபுணர்களும் ஒருமித்துள்ளனர். மேலும், இந்த முழு நிகழ்வுகளின் தொடர்ச்சியே புவிசார் அரசியலுடன் நேரடியாக இணைந்ததே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதில்லை என்று வங்கதேசம் முடிவு செய்தால், அதன் ஐசிசி உறுப்பினர் அந்தஸ்தே இடைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிபிசி சிங்களாவிடம் பேசிய சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபய்சிங்கே, "இது அரசியல் பிரச்னை என்பதால், விளையாட்டிற்கான பிரச்னையாக இருக்க முடியாது" என்று கூறினார்.

மேலும், "வங்கதேசம் பங்கேற்கவில்லை என்றால், இது சரியாக கையாளப்படாவிட்டால் உலகளாவிய பிரச்னையாகவும் மாறும். யாரோ ஒருவர் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்கவேண்டும். ஆனால் இந்தக் கட்டத்தில் வங்கதேசம் தான் அதைச் செய்யவேண்டும்" என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், " வங்கதேசம் முன்மொழிந்தபடி போட்டியின் குழுக்களை (group) மாற்ற முடியாது. அது சாத்தியமில்லை. அரசியல் காரணங்களால் விளையாட்டை பாதிக்க அனுமதிக்க முடியாது" என்று வலியுறுத்தினார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்ய மாட்டோம் என்றும், தங்கள் போட்டிகளை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்றும் வங்கதேசம் ஏற்கனவே ஐசிசிக்கு தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கேட்டுக்கொண்டதன் பேரில், ஐபிஎல்லின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவமே இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னையின் உடனடி காரணமா என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலியாவின் இந்தோ பசிபிக் ஆய்வுகளுக்கான மையத்தில் (Centre for Indo-Pacific Studies) பணியாற்றும் சர்வதேச உறவியல் ஆராய்ச்சியாளர் ஹசித் கந்தஉடஹேவா பதிலளித்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சம் வழங்கியதும், அதனைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்தியா தலையிட்ட விதமும் குறித்து, வங்கதேச மக்களிடையே அதிருப்தி உள்ளது என்று அவர் கூறினார். இந்த அதிருப்தியே தற்போது ஒரு அரசியல் நெருக்கடியாக மாறி, இப்போது தாக்கம் ஏற்படுத்துவதாக ஹசித் கந்தஉடஹேவா தெரிவித்தார். "இப்போது விளையாட்டே புவிசார் அரசியலாக மாறியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது" என்றும் அவர் கூறினார்.

சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபய்சிங்கேவும், இது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்னையே என்று தெரிவித்தார்.

"சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பைக்கும், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் நடத்துகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஒரு உள்நாட்டு போட்டி. நான் நடுநிலையான பார்வையிலிருந்தே பேசுகிறேன்... சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருப்பது குறித்து நான் பேசவில்லை. அந்த விஷயத்துக்குள் நாம் போகவேண்டாம். அவர்கள் எப்போதும் நடுநிலையாக இருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், இது ஒரு உள்நாட்டு விவகாரம்தான். உலகக் கோப்பை என்பது சர்வதேச அரங்கில் நடைபெறும் போட்டி. ஆகவே, இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை.

ஆனால் அதே நேரத்தில், அந்த வீரரை அனுப்பிய இந்தியாவின் முடிவு சர்ச்சைக்குரியதாக உள்ளது. வங்கதேசம் இதை தங்கள் முகத்தில் அறையப்பட்டது போலப் பார்க்கிறது. இங்கே நாம் பேசுவது 'ஈகோ' தொடர்பான விஷயங்கள். இந்த பிரச்னையின் அடிப்படை காரணம் என்ன? அதன் அடிப்படை காரணம் ஒரு அரசியல் பிரச்னைதான். அரசியல் பிரச்னையால்தான் இது இவ்வளவு தூரம் வந்துள்ளது. அரசியல் காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவாகவும் இது இருக்கலாம்.

அந்த வீரரை அனுப்புவது, அல்லது ஒரு அணியை அனுப்ப வேண்டாம் என்று இப்படியாக முடிவு செய்வது - இவை அனைத்துமே விளையாட்டு சார்ந்த முடிவுகள் அல்ல, அரசியல் சார்ந்த முடிவுகளாகவே தெரிகின்றன" என்று ரோஷன் அபய்சிங்கே கூறினார்.

'விளையாட்டும் அரசியலும் தனித்தனியாக இருக்க வேண்டியவை'

பிபிசியிடம் பேசிய சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபய்சிங்கே, விளையாட்டும் அரசியலும் அவசியமாக இரண்டு தனித்தனி தளங்களில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

"விளையாட்டுக்கும் அரசியலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இருக்கக் கூடாது. ஆனால் இரண்டும் ஒன்றாகக் கலந்து பல பிரச்னைகள் உருவாகும் நிலையை நாம் பார்க்கிறோம். ஒரு நாடாக நாமும் இதை அறிந்திருக்கிறோம்; உலக அளவிலும் இதைக் காண்கிறோம். குறிப்பாக இன்றைய காலத்தில் புவிசார் அரசியல் மிகுந்த தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இது மிகவும் வருத்தத்துக்குரியது. தெற்காசியாவின் முக்கியமான நான்கு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகியவற்றின் உறவு, விளையாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

"தெற்காசியாவின் இந்த நான்கு நாடுகள் விளையாட்டு ரீதியாக ஒன்றிணைந்தால், நமது வலிமையை உலகிற்கு காட்ட முடியும்" என்று கூறிய அவர், "தற்போது இந்த மூன்று நாடுகளுடனும் நல்ல உறவில் இருப்பது இலங்கை மட்டுமே. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நல்ல உறவு இல்லை. இப்போது வங்கதேசம் - இந்தியா இடையே பிரச்னை உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானும் வங்கதேசத்தை நெருங்கி வருவதைப் பார்க்கிறோம். இப்படியாக இந்த அமைப்பு சிதறத் தொடங்கினால், அது முழு கிரிக்கெட் விளையாட்டுக்கே ஒரு பெரிய பிரச்னையாக மாறும்" என்றும் கூறினார்.

"இந்த நாடுகளுக்கிடையே நல்ல உறவு இல்லாவிட்டால், அது விளையாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும். நாளை 'நாங்கள் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்ய மாட்டோம்' என்று இந்தியா சொன்னால் என்ன ஆகும்? அதுவொரு பெரிய சிக்கலாகும். இந்தியா - வங்கதேசம் இடையே போட்டிகளே இல்லாமல் போனால், அது உலக கிரிக்கெட்டுக்கே ஒரு பெரிய இழப்பு.

பாகிஸ்தான் - இந்தியா இடையிலான சர்வதேச போட்டிகளைப் பார்க்க மக்கள் ஏன் அதிகமாக வருகிறார்கள்? அந்த இரு நாடுகளின் போட்டிகளை மக்கள் உண்மையிலேயே ரசிக்கிறார்கள். அதனால்தான் அரசியலும் விளையாட்டும் முழுமையாகத் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் நிலைப்பாடு. அரசியல் எங்கேயாவது கலந்து விட்டால், அங்கே பிரச்னை உருவாகிறது. அவர்கள் விளையாட்டு கோணத்தில் பார்க்காமல், தங்களது அரசியல் கோணத்தில்தான் பார்க்கிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

'இது ராஜ்ஜிய மோதலாக மாறும் அபாயம் மிக அதிகம்'

"அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவதில்லை. தாக்கப்படுவது எப்போதும் விளையாட்டுதான்" என்று கூறிய ரோஷன் அபய்சிங்கே, இந்த பிரச்னை விளையாட்டின் உணர்வையும் (spirit of the game) பாதிப்பதாகக் கூறினார்.

வங்கதேசம் எப்படியாவது இந்தத் தொடரைப் புறக்கணித்தால், அது ஒரு தெற்காசிய நாட்டிற்கு அழகல்ல என்றும், இந்தியாவின் சர்வதேச அடையாளத்தைப் பாதிக்கும் என்றும் ஹசித் கந்தஉடஹேவா தெரிவித்தார். அத்தகைய அடையாளப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டால், அது இந்தியாவின் விளையாட்டு ராஜதந்திரத்தைப் (sports diplomacy) பாதிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே இதற்குக் காரணம்.

மேலும் பேசிய ஹசித் கந்தஉடஹேவா, "தற்போதுள்ள நிலையில், விளையாட்டு மட்டத்தில் ஒரு எதிர்ப்பு உள்ளது, ஆனால் இது ஒரு ராஜ்ஜீய மோதலாக மாறி, அரசியல் சித்தாந்தங்கள் தொடர்பான விஷயங்களாக அதிகரிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது"

விளையாட்டுகளில் அரசியல் சூழல்களைக் கொண்டுவருவதும், விளையாட்டு மூலம் அந்த அரசியல் சூழல்களை வெளிப்படுத்த முயற்சிப்பதும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் சூழ்நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது அடுத்த கட்டம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசியல் மோதல்கள் வீரர்களின் மனதில் நுழைகின்றன

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்கள் கிரிக்கெட்டுக்குள் பரவியது இதற்கு முன்பு ஒருபோதும் காணப்படவில்லை.

முந்தைய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் சுமூகமாகப் பேசிக்கொள்வது காணப்பட்டது. அந்த சந்தர்ப்பங்களின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளுடன் பதிவேற்றப்பட்டன.

ஆனால், கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்ததையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வழங்கிய கோப்பையை ஏற்க மறுத்ததையும் காண முடிந்தது.

'கார்கிலுக்குப் பிறகு கூட விளையாடினோம்'

இந்தியாவைச் சேர்ந்த மூத்த விளையாட்டு எழுத்தாளரான சாரதா உக்ரா, "தெற்காசியாவில் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் எப்போதும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இருப்பினும், முதல் முறையாக, அரசாங்கத்தின் நேரடித் தலையீடு மற்றும் கிரிக்கெட்டில் ஒரு கொள்கைத் திணிப்பு போன்ற ஒரு பெரிய மாற்றத்தை நாம் இப்போது காண்கிறோம்.

கார்கிலுக்குப் பிறகு 1999 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடினோம். கிரிக்கெட் வேறு, போர் வேறு என்ற கண்ணோட்டத்தை அது ஏற்படுத்தியது. உங்கள் வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் அல்லது ஒருவருக்கொருவர் உள்ள உறவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவரப்போகிறீர்கள் என்றால், அது இந்த விளையாட்டை நிச்சயம் சேதப்படுத்தும்" என்று கூறினார்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ-வின் பாகிஸ்தான் நிருபர் தன்யால் ரசூல், "தெற்காசியா இல்லையென்றால் கிரிக்கெட் இல்லை. தெற்காசியாதான் தற்போது கிரிக்கெட்டின் உயிர்நாடி. கிரிக்கெட்டை முதன்மை விளையாட்டாகக் கொண்ட உலகின் ஒரே பிராந்தியம் இதுதான்.

எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால், அடிப்படையில், அரசியல் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் தலையிடுகிறது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன, வங்கதேசத்துக்கு இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளும் மோசமடைந்து வருகின்றன" என்று வருத்தம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு