இந்த வாரம் என்னென்ன திரைப்படங்களை பார்க்கலாம்?

கடந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி திரையரங்குகளை நிறைத்த நிலையில், இந்த வாரமும் பல முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

1. விருமன்:

கொம்பன் படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் இது. கார்த்தியோடு, அதிதி சங்கர், ராஜ்கிரண், சரண்யா, ஆர்.கே. சுரேஷ், கருணாஸ், சூரி, சிங்கம் புலி, வசுமித்ர உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. படத்தின் ஓடிடி உரிமை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கஞ்சாப் பூவு கண்ணால' பாட்டு ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.

2. கடமையை செய்:

2016ஆம் ஆண்டு வெளியான முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட்ராகவன் இயக்கியிருக்கும் படம் இது. எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சன்ட் அசோகன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜூன் 24ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது இந்தப் படம்.

3. லால் சிங் சத்தா:

1994ல் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான Forrest Gumpன் இந்தி - ரீமேக்தான் இந்தப் படம். ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அத்வைத் சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே ரிலீஸான நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

4. ரக்‌ஷா பந்தன் :

அக்ஷய் குமார் நடித்து இதற்கு முன்பு வெளியான சாம்ராட் ப்ருத்விராஜ், பச்சன் பாண்டே ஆகிய படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ரக்ஷா பந்தன் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருக்கிறார்கள். படத்தை ஆன்ந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார்.

ஒரு சாட் கடை வைத்திருக்கும் கதாநாயகன், தன் சகோதரிகள் நால்வருக்கும் நல்லபடியாக கல்யாணம் செய்துவைக்க நினைக்கிறான். அதற்கிடையில் ஏற்படும் காதலுக்கு, குடும்ப பொறுப்புகளே தடையாக இருக்கின்றன. படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே வெளியாகிவிட்டது.

5. Karthikeya 2:

இது ஒரு தெலுங்குப் படம். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியானபோது இதிலிருந்த அமானுஷ்ய தன்மைக்காக வெகுவாக கவனிக்கப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய சந்து மொன்டேட்டியே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திலும் நிகில் சித்தார்த்தான் கதாநாயகன்.

அனுபமா பரமேஸ்வரன், அனுபம் கேர் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். அமானுஷ்ய கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கான படம் இது. இந்தப் படம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகிறது.

6. நா தான் கேஸ் கொடு

மலையாளப் படம். ஆன்ராய்டு குஞ்சப்பன் படத்தை எடுத்த ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் வெளியாகும் படம் இது. குஞ்சாகோ போபன், காயத்ரி, பஷில் ஜோசப், சைஜு குரூப் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். திருந்தி வாழும் திருடனான ராஜீவன், பொதுப் பணித் துறை அமைச்சரோடு மோதுகிறான். வழக்கில் அவனே வாதாடுகிறான். வெற்றிபெற்றானா என்பதுதான் கதை. இந்தப் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிவிட்டது.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

1. Cadaver:

அமலா பால் நடித்து, தயாரித்திருக்கும் திரைப்படம். படத்தை அனூப் எஸ் பணிக்கர் இயக்கியிருக்கிறார். நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை விசாரிக்கும் காவல்துறைக்கு உதவுகிறார் கதாநாயகி.

சிறைக் கைதி ஒருவர்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய ஆரம்பிக்கின்றன என்று போகிறது கதை. ஒரு மெடிக்கல் த்ரில்லர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது இந்தப் படம்.

2. மலையான்குஞ்சு:

சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் ஃபகத் பாசில், சஜிஷா விஜயன் நடித்திருக்கும் திரைப்படம் இது. கேரளாவில் நடக்கும் ஒரு நிலச்சரிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சர்வைவல் த்ரில்லர் இந்தப் படம். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைமில் படம் வெளியாகியிருக்கிறது.

இவை தவிர, ஏற்கனவே வெளியான கார்கி (Sonyliv), Thank you (Amazon Prime), சபாஷ் மித்து (Voot, Netflix), தி வாரியர் (Disneyplus Hotstar) ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: