You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிருத்திகா உதயநிதி பேட்டி: "நீ ஸ்கிரிப்ட் எழுதி பார்க்கவில்லையே என மாமா சொன்னார்"
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சமீபத்தில் "பேப்பர் ராக்கெட்" என்ற வெப்சீரீஸ் ஒன்றை இயக்கி ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி. மக்கள் எப்படி இந்த வெப்சீரீசை எடுத்துக்கொள்வார்கள் என்று, ஆரம்பத்தில் தான் நினைத்ததாகவும், ஆனால் பலர் இந்த தொடரை தங்கள் சொந்த வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து தன்னிடம் கருத்துக்களைப் பகிரும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தன் அனுபவங்களை பிபிசி தமிழுக்காக பகிர்ந்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
"முதன்முதலில் ஓடிடி தளத்தில் வருவதற்கு முன்பே உதயநிதியிடம் ஸ்கிரிப்டை காண்பித்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னதும் மனசுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. நானே இந்த படத்தை தயாரித்திருக்கலாம் என்று சொன்னபோது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தொடரை இயக்க வேண்டும் என்று நினைத்த போது பெரிதாக எனக்கு இப்படி தான் செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லை. என் எண்ணங்கள், நான் சந்தித்த மனிதர்கள், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என அதை மனதில் வைத்து தான் இயக்கினேன்" என கூறுகிறார் கிருத்திகா.
"நானே பேசுவது போல் உள்ளது என்றனர்"
இந்த தொடரில் மனித வாழ்வின் சந்தோஷங்கள், உறவின் அவசியங்கள் குறித்து பேசி இருக்கும் கிருத்திகா உதயநிதி, கல்லூரி படிக்கும் போதே தன் உடன் பயிலும் நண்பர்களுக்கு அறிவுரை கூறுவாராம். இந்த தொடர் வெளிவந்ததும், அவருடைய நண்பர்கள் பல பேர், இவரை அழைத்து "பேப்பர் ராக்கெட்" தொடர் நீயே பேசுவது போல உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.
இந்தத் தொடரை பார்த்ததும் பல பேர் இவரிடம் நாங்கள் ஜோடியாக பயணம் மேற்கொள்ள போகிறோம், என் அப்பா இப்போது தான் நோயிலிருந்து குணமடைந்து இருக்கிறார், அவரையும் அழைத்துச் செல்ல இருக்கிறேன், நான் விவாகரத்து பெற்றதால் மனஅழுத்தத்தில் உள்ளேன் இந்த தொடரை பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது என்று சொன்னார்களாம்.
"என்னுடைய குழந்தைகள் இருவரும் நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாதி தூக்கத்தில் இருந்து எழுந்த நான் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். Its too good amma என்று சொன்னார்கள். எனக்கு அப்பாடா என்று இருந்தது. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த தொடர் இயக்கி உள்ளேன். இந்த தொடருக்கு முன்னர் நான் வேறு ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதில் நடிகர் தேர்வில் தாமதம் ஆனது. பின்னர் இந்த Project வந்ததால் இதை முடித்துவிடேன். மக்களுக்கு போய் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு புறம் "பேப்பர் ராக்கெட்" வெப்சீரீஸ் குறித்த தகவல்களை பகிர்ந்தும், மறுபுறம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மகிழ்ச்சியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கிருத்திகா.
"நன்றாக இருந்தது என்று மாமா சொன்னார்"
"எனக்கு திருமணமான புதிதில் உதயநிதி என்னிடம், "என் அம்மாவை பற்றி உனக்கு தெரியாது, உனக்கு இருக்கு," என பயமுறுத்தினார். நானும், அச்சச்சோ நமக்கு எதுவுமே தெரியாதே.. சமைக்கவும் தெரியாதே.. என்ன ஆகப் போகுதோ தெரியலையே என்று பயந்து கொண்டே இருந்தேன். ஆனால் என் அத்தை அத்தனை அனுசரணையாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு என்னிடம் அவர், "நீ வீட்டை பற்றிக் கவலைப்படாதே, அதை நான் பார்த்துக்கொள்கிறேன். தொழில் வாழ்க்கையில் உனக்கு என்ன தோன்றுதோ அதை நீ தாராளமாக செய்யலாம்," என்று ஊக்கப்படுத்தினார்.
அதேபோல என் அத்தை போன்று வீட்டை யாராலும் மிகச்சரியாக பராமரிக்க முடியாது. என்னால் நிச்சயமாக முடியவே முடியாது. மிகவும் சுவையாக சமைப்பார். சிறுதானிய உணவுகளுக்கும் பாரம்பரிய உணவுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். யார் என்ன உதவி என்று வந்து கேட்டாலும், அதை தயங்காமல் செய்வார்.
அதேபோல என்னுடைய மாமனார், இந்த தொடரை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, "நீ எப்போமா இதை செய்தாய்? நீ எங்குமே உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதி நான் பார்க்கவில்லையே?" என்று கேட்டார். தொடர் நன்றாக இருந்தது என்று சொன்னதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கிருத்திகா.
தன்னுடைய மாமனாரிடம் மிகவும் பிடித்தது Perfection & Dedication என்றும், அதை தான் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பார்த்து எப்போதும் வியப்பதாகவும் கூறுகிறார் கிருத்திகா.
இந்த படம் இயக்கி முடித்த பிறகு உதயநிதியுடன் டிரிப் செல்ல திட்டமிட்டதாகவும் ஆனால் அவர் தொடர்ந்து வேலை மும்முரத்தில் இருப்பதால் சரியான நேரம் வரும் வரை காத்திருப்பதாகவும் கிருத்திகா கூறுகிறார்.
"எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் முயற்சி மற்றும் உழைப்பை கொடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். சினிமாதுறையை பொறுத்தவரை நான் தொடர்ந்து எனக்கான உழைப்பை கொடுத்து வருகிறேன். வருங்காலத்தில் இன்னும் திட்டங்கள் உள்ளன ஆனால் இப்போது அது குறித்து யோசிக்க நேரம் இல்லை" என்று முடித்தார் கிருத்திகா உதயநிதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: