என்னை பாதித்த சிவரஞ்சினி கதாபாத்திரம்: நடிகை லக்ஷ்மிபிரியா பேட்டி

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை லஷ்மிபிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் கடந்த வந்த பாதை மற்றும் அனுபவங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் சினிமாவில் இருக்கீங்க? விருது அறிவிக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம் எப்படி இருந்தது ?

மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு மிகச் சிறந்த அங்கீகாரம் கூட. ஏதோ மற்ற நாள் போல அல்லாமல் இது என் வாழ்வின் சிறந்த நாள்.

"சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் " விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சிவரஞ்சினி கேரக்டர் எந்தளவிற்கு உங்களை ஈர்த்தது?

சிவரஞ்சினி என்னை போலவே இருந்த ஒரு கதாபாத்திரம். எனக்கு சிவரஞ்சினி போன்று பலரை தெரியும். எனக்கும் விளையாட்டு பின்னணி இருந்ததால் கூடுதலாக இந்த கதாபாத்திரத்தை பிடித்தது.இயக்குனர் வசந்த் அவர்களுக்கு இது முக்கியமான படம். நான் நினைத்தது அனைத்தும் இந்த படத்தில் கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தார். இந்த படத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்த படத்திற்கான உழைப்பை பார்க்கும் போது நான் இந்த படத்தில் இருப்பதே எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இயக்குநரின் ஒரு 'கனவு படத்திற்காக' நான் எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அதனால் என் சினிமா வாழ்வில் "சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்" ஓர் முக்கியமான படம்.

இந்த படத்தில் நீங்கள் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. இதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டீர்களா?

எனக்கு சிறப்பு பயிற்சி எதுவும் தேவைப்படவில்லை. காரணம் நான் ஏற்கெனவே விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்திருந்ததால் எனக்கு அடிப்படைகளில் எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தேசிய அளவில் தடகள போட்டிக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் இருந்தார், என்னுடைய பயிற்சிகளை பார்த்துவிட்டு, உங்களுக்கு சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை என்று சொல்லி விட்டார்.

இந்த படத்தில் உங்கள் வாழ்க்கையை பிரதிபலித்த காட்சிகள் ஏதாவது இருந்ததா?

நிச்சயமாக. படத்தில் ஒரு காட்சி - லாங் ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். சிவரஞ்சினி காலையில் என்னென்ன வேலைகளை செய்வார் என்ற காட்சி அது. அதில் முழுக்க என்னுடைய அம்மாவை பொருத்திப் பார்க்கிறேன். என் அம்மா அப்படித் தான் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பின்னர் அலுவலகம் புறப்படுவார். என் அம்மாவின் 30 வருட காலை பொழுதுகள் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன. நான் இந்த காட்சியில் நடித்த போது தான் என் அம்மா எப்படி இருந்திருப்பார் என முழுமையாக உணர்ந்தேன்.

நான் மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என இந்த உலகம் சொன்ன போது என் அம்மா என்னை முழுமையாக நம்பினார் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தீர்கள் ? அம்மா எந்த அளவிற்கு உங்களுக்கு பக்கபலமாக இருந்தார்?

100 சதவீதம் என் அம்மா எனக்கு பக்கபலமாக இருந்தார். நடிப்பு தான் என்னுடைய தொழில் என்று முடிவு செய்த போது எனக்கு அதற்கான பக்குவம் இருந்ததா என்று தெரியவில்லை. நீங்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதற்குரிய pattern-படி நீங்கள் செயல்பட முடியும். முன்கூட்டியே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என உங்களுக்கு தெரியும். ஆனால் சினிமா அப்படியல்ல. இங்கு நம் கையில் எதுவும் இல்லை. எனக்கும் என் குடும்பத்திற்கும் சினிமா குறித்த எந்த பின்னணியும் இல்லை. அதனால் எல்லாருமே விமர்சனம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் யாரும் என்னிடம் பேசாதவாறு எனக்கு அரணாக நின்றார்கள். அம்மா அனைவரிடமும் சொன்ன ஒரே வார்த்தை என் பெண் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது அவளுடைய விருப்பம் என்று சொன்னார். அந்த நம்பிக்கையை இப்போது காப்பாற்றி இருக்கிறேன். அன்று பல கேள்விகளை கேட்டவர்கள் இன்று என் அம்மாவிடம் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள், என் அம்மா அவர்களிடம், நான் தான் அன்றே சொன்னேனே என் பெண் ஜெயிப்பாள் என்று பெருமிதத்துடன் சொல்கிறார். அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

தேசிய விருது அங்கீகாரத்திற்கு முன்னர் நீங்கள் கடந்த வந்த பாதை எந்த அளவிற்கு கடினமாக இருந்தது?

கலைத்துறையில் நீங்கள் பல இடங்களில் மறுக்கப்படுவீர்கள், ஒதுக்கப்படுவீர்கள். உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் 100 இடங்களுக்கு ஆடிஷன் போனால் 4 இடங்களில் மட்டும் தான் தேர்வு செய்யப்படுவீர்கள். மறுக்கப்படுவது என்பது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடும். இந்த துறையை பொறுத்தவரை யாராக இருந்தாலும், எப்படிபட்டவராக இருந்தாலும் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இதையெல்லாம் தாண்டி தான் நாம் வெற்றி பெற வேண்டும்.

துணை நடிகைகள் சிரமங்களை சந்திக்க கூடிய சூழல் இருக்கிறதா?

எனக்கு முன்னணி நடிகை, துணை நடிகை போன்ற பட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. முதலில் அடிப்படையில் நான் ஒரு நடிகை. எனக்கு முன்னணி கதாபாத்திரம் கொடுத்தால் நான் முன்னணி நடிகை. துணை நடிகை கதாபாத்திரம் கொடுத்தால் துணை நடிகை. . கதாபாத்திரங்களில் தான் வித்தியாசமே தவீர மனிதர்களில் அல்ல. கேமரா முன் நிற்கும் போது அனைவரும் சேர்ந்து நடித்தால் தான் அந்த காட்சி வெற்றி பெறும். இந்த துறையில் பிரச்சனை எல்லாருக்கும் தான் இருக்கிறது.

" சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் " படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள் யார்?

பல பேர் தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார்கள். நான் தான் அந்த சிவரஞ்சனி என அக்கா, அண்ணி, சித்தி என பல நிலையில் இருந்து பெண்கள் தெரிவிக்கும் போது, அந்த கதாபாத்தித்தை சிறப்பாக செய்ததற்கு மகிழ்ச்சியடைவதா அல்லது இன்னும் இத்தனை சிவரஞ்சிகள் இருக்கிறார்களே என்று கவலையடைவதா என்று தெரியவில்லை.. சிவரஞ்சினி கதாபாத்திரத்தை தத்ரூபமாக செய்திருக்கிறேன் எனறு பெருமை கொள்கிறேனே தவீர இத்தனை சிவரஞ்சினிகள் இருக்கிறார்கள் என்று கவலையாகத்தான் இருக்கிறது.

யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது?

எனக்கு நடிகை ரேவதி, ஊர்வசி, பகத்பாசில், கனி, காளீஸ்வரி, பார்வதி ஆகியோருடன் நடிக்க ஆசை உள்ளது. ஏனென்றால் பலருடன் நடிக்கும் போது பல அனுபவங்களை நம்மால் பெற முடியும் மிக முக்கியமாக நடிகர் கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருக்கிறது.

உங்கள் வாழ்க்கை பயணம் மூலமாக இன்றைய பெண்களுக்கு சொல்லும் விஷயம்?

பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நான் சொல்லக்கூடிய மிக முக்கியமான விஷயம் உங்கள் உழைப்பு மற்றும் தனித்தன்மைக்கு என்றுமே ஒரு அங்கீகாரம் உண்டு.என்ன நடந்தாலும் அடுத்த நாள் காலை எழுந்து நம் வேலையை பார்க்க வேண்டும். எது நடந்தாலும் நம் உழைப்பை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு நம்முடைய வேலையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: