You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மண்டேலா படம் எடுக்கப் போன ஊர் மாரி செல்வராஜின் ஊர் என்று பின்னர் தான் தெரிந்தது" - மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின்
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மடோன் அஸ்வினுக்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தேசிய விருது மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். தேசிய விருது அறிவிக்கப்பட்ட தருணம் குறித்து மடோன் அஸ்வின் பல்வேறு தகவல்களை பிபிசி தமிழுக்காகப் பகிர்ந்துள்ளார்.
2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட தருணம் எப்படி இருக்கிறது?
மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. படத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த குழுவும் மிகவும் பெருமையாக உணர்கிறோம். 2014ஆம் ஆண்டு என்னுடைய தர்மம் என்ற குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அப்போது அதுகுறித்துப் பெரிதாக வெளியே தெரியவில்லை. இப்போது முழு திரைப்பட பிரிவில் 2 விருதுகள் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
உங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் யார் முதலில் அழைத்து வாழ்த்து சொன்னார்கள்?
முதலில் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் வீடியோ காலில் அழைத்து வாழ்த்து சொன்னார்கள். ஒரு விருதுக்கு வாழ்த்து சொல்லும் போதே அடுத்த விருது அறிவிக்கப்பட்டது. பிறகு கூடுதல் வாழ்த்தும் எனக்குக் கிடைத்தது.
குறும்படத்தில் சொன்ன ஒரு விஷயத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்று எப்போது தோன்றியது?
ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய இந்நாட்டு மன்னர்கள் என்ற நூலால் ஈர்க்கப்பட்டு குறும்படம் தயாரித்திருந்தேன். அதை அவரிடம் காண்பித்த போது கதையின் சாராம்சத்தைக் காட்டிலும் வேறு ஐடியாக்களையும் அதில் இணைத்தற்காக பாராட்டினார். பின்னர் இதை திரைப்படமாகத் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்னதும் எனக்கு வாழ்த்துகள் கூறினார்.
யோகிபாபுவிற்காக இந்த கதையைத் தயார் செய்தீர்களா?
இல்லை. முதலில் கதை எழுதும் போது எந்த ஐடியாவும் இல்லை. பீப்லி லைவ் (Peepli Live) திரைப்படத்தில் வரும் நத்தா தாஸ் போன்று யாராவது இதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டோம். வை நாட் ஸ்டுடியோசில் எழுத்து வேலை நடக்கும் போதும் கூட யார் குறித்தும் யோசிக்கவில்லை. பின்னர் தயாரிப்பாளர் சசிகாந்த் தான் யோகிபாபுவை நடிக்க வைக்கலாம் என்று சொன்னார்கள். முதலில் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவர் இந்த கதாபாத்ததிரத்தைச் செய்வாரா என்று நினைத்தேன். பிறகு அனைவரும் சேர்ந்து யோகிபாபுவை முடிவு செய்தோம்.
யோகிபாபுவிடம் கதை சொன்ன போது என் சொன்னார்?
கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மிகவும் இயல்பாக கதை கேட்டார். தலையணையை வைத்துக் கொண்டு, ம்ம்ம் சொல்லுடா தம்பி என்று கூலாக கேட்க, நானும் கதை சொல்லத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கதையைச் சொல்லி முடித்தபோது யோகிபாபுவிற்கு இந்தக் கதை மிகவும் பிடித்துப் போயிருந்தது. என்னிடம் இறுதியாக இந்தக் கதைக்குள் நான் பொருந்திப் போவேனா என்று மட்டும் கேட்டார். நீங்கள் சரியாகச் செய்வீர்கள். ஆனால் இந்தப் படத்தில் உங்களுக்கு கவுன்டர் கொடுக்கும் வேலைகள் எல்லாம் இருக்காது என்று சொன்னேன்.
இதை யோகிபாபு எப்படி எடுத்துக் கொண்டார். ஏனென்றால் அவருடைய அத்தனை படங்களிலும் அவர் கொடுக்கும் கவுன்டர்களுக்குத் தானே சிரிப்பலைகள் எழும்?
இப்படித் தான் இருக்கும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஒரு விஷயம் மட்டும் தெளிவாகக் கேட்டார். எனக்கு ஹீரோயின் உடன் காதல், நடனம், நான் மற்றவர்களை அடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை தானே என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அப்படியெல்லாம் இல்லை. ஆனால் நீங்கள் அடிவாங்குவது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சொன்னேன்.
இந்த திரைப்படத்திற்கு மண்டேலா என்று எப்படி வைத்தீர்கள்?
இந்தத் திரைப்படத்திற்கு பெரிய தலைவர்கள் பெயர் தான் வைக்க வேண்டும் என்று முன்னரே நினைத்தோம். ஏனென்றால் படத்திற்கு பெயர் தான் அடையாளம். நிறைய தலைவர் பெயரை யோசித்தோம். பிறகு மண்டேலா என்ற பெயரைத் தேர்வு செய்தோம். அவரும் மக்களுக்காக உழைத்தவர் தானே.
படப்பிடிப்பு நடந்த ஊர் பொதுமக்கள் உங்களுக்கு எப்படி ஒத்துழைப்பு வழங்கினார்கள்?
பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு அந்த ஊரைத் தேர்வு செய்தோம். எங்களுக்கு முதலில் தேவைப்பட்டது ஓர் ஆலமரம். அந்த ஊரில் முதலில் நம்மை வரவேற்றது அந்த ஆலமரம் தான். அந்த ஆலமரத்தில் இருந்து தான் சாலைகள் பிரிந்து ஊருக்குள் செல்லும். கிட்டத்தட்ட 55 கிராமங்களைப் பார்த்த பிறகு இந்த கிராமத்தைத் தேர்வு செய்தொம். இந்த கிராமத்தில் இருந்த வீடுகள் மற்றும் அதன் அமைப்புகள் அனைத்தும் எங்களுக்கு ஏற்றாற்போல் இருந்தது. பிறகு தான், இந்த ஊர் இயக்குநர் மாரி செல்வராஜின் ஊர் என்று தெரிந்தது. அங்கு ஏற்கெனவே பரியேறும் பெருமாள் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மக்களும் படிடப்பிடிப்பிற்குப் பழகி இருந்தார்கள். சிலர் இந்தப் படத்தில் கூட நடித்தார்கள். 4 நாட்களுக்குப் பிறகு அவர்களில் ஒருவராக மக்கள் எங்களைப் பார்க்கத் தொடங்கவே, படப்பிடிப்பு எல்லாம் இயல்பாகி விட்டது.
படத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் மிக அருமையாக இருந்தது. இதற்கான தாக்கம் எங்கிருந்து வந்தது?
அந்தந்த சம்பவங்களில் நடக்கும் விஷயங்களை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு சீன் எழுதும் போதும் இப்படித்தான் வசனம் இருக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. படத்தில் போஸ்ட் ஆபீசுக்கு யோகிபாபு செல்வதைப் போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். முதலில் அந்தக் காட்சியை வைக்கும் போது புறவாசல் வழியாகச் செல்லும் காட்சியை யோசிக்கவில்லை. பிறகு முதன்முதலில் இருவரும் அரசு அலுவலகத்திற்கு தான் முன்வாசல் வழியாகப் போகிறார்கள் என்று சொல்ல அந்தக் காட்சியை வைத்தோம். இப்படி பல காட்சிகள் அந்தந்த சம்பவத்திற்கு ஏற்றாற் போல் இயல்பாகவே வைத்தோம். எதையும் திணிக்கவில்லை.
அடுத்து என்ன திட்டம்?
சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படம் தொடங்க இருக்கிறது. இதற்காக, டைட்டில் டீசர் (Title Teaser) வெளியிட்டுள்ளோம். வெகுவிரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்