"சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" - சுதா கொங்கரா பேட்டி

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2020 ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று திரைப்படம்.

நெகிழ்ச்சியான இந்த தருணம் குறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

5 தேசிய விருதுகள் "சூரரை போற்று " திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது? எப்படி இருக்கிறது இந்த தருணம்?

"சூரரை போற்று " திரைப்படத்தில் மாறா என்ன நினைத்தாரோ அதையே தான் இப்போது நான் நினைக்கிறேன். திரைப்படத்தில் அத்தனை கஷ்டங்களுக்கு பிறகு மாறாவின் முதல் பிளைட்டில் மக்கள் அனைவரும் வந்து இறங்கும் போது " ஜெயிச்சிட்டே மாறா " என்ற வார்த்தைகளின் பெருமிதம் இன்றைக்கு எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதேப் போல் 5 தேசிய விருதுகள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

இந்த படத்தை இயக்கும் போது தேசிய விருது பெறுவோம் என்று நினைத்தீர்களா?

நிச்சயமாக இல்லை. படம் இயக்குகிறோம். அது மக்களுக்கு போய் சேர வேண்டும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும். அதை அவர்கள் உணர வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தொகுப்பின் போது பார்க்கையில் சூர்யா எத்தனை உழைப்பை கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் எத்தனை அழகாய் இசையமைத்திருக்கிறார். இவர்களுக்கு விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதோரத்தில் ஒரு சிறிய ஆசை இருந்தது.

சூரரை போற்று படம் இயக்கும் போது, இந்த படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால் யாருக்கு முதலில் விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

நிச்சமாக சூர்யாவுக்கு தான். ஒரு நல்ல கதை நம்மிடம் இருக்கும் போது, முதலில் அதை ஸ்டார் நடிகர் நடிக்க ஒப்புக் கொள் வேண்டும். பின்னர் நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையுமே சூர்யா எனக்கு மிகச்சிறப்பாக கொடுத்தார். சூர்யா என் மீது நம்பிக்கை வைத்தார். என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் 100 மடங்கு சூர்யாவிடம் உழைப்பை எதிர்ப்பார்த்தால் அவர் 1000 மடங்கு உழைப்பை கொடுப்பார். அதற்காக அங்கீகாரம் இன்று அவருக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

இந்த படத்திற்காக கதை எழுத ஏன் 3 வருடங்கள் எடுத்துக்கொண்டீர்கள்?

ஏனென்றால் கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருந்தன. காந்திய வழியை பின்பற்றும் அவரின் குடும்பம், அவருடைய பள்ளி வாழ்க்கை , பர்சனல் வாழ்க்கை என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது? எவற்றை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என பல கேள்விகள் எனக்கு இருந்தது. படத்தில் கூட ஒரு காட்சியில் பிளைட் லேண்ட் ஆக வேண்டும், அதே சமயத்தில் அதை தீப்பிடித்தது போல் காட்ட வேண்டும். அது அவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்தது. இதை எப்படி ஒரே சமயத்தில் காண்பிப்பது என பயங்கர குழப்பமாக இருந்தது. அதனால் திரைக்கதை வடிவமைப்பு மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் இத்தனை காலம் எடுத்துக் கொண்டேன்.

கேப்டன் கோபிநாத் அவர்களின் கதையை திரைப்படமாக எடுக்க அவர் உடனடியாக ஒப்புக் கொண்டாரா அல்லது உங்களுக்கு அதிக நேரம் எடுத்ததா?

2010 ஆம் ஆண்டு தான் இவருடைய வாழ்க்கைய நாம் படமாக எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய எந்த படமும் வெளிவரவில்லை. அடுத்து வந்த என்னுடைய முதல் படமும் சரியாக போகவில்லை. அதனால் கேப்டன் நிச்சயம் என்னுடைய கதையை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் நினைத்தேன். 2016 ஜனவரி மாதம் இறுதி சுற்று படம் வெளியானது. பல தரப்பில் அது வரவேற்பை பெற்றதும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேப்டன் கோபிநாத் அவர்களை சந்தித்து, உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறி கதையை சொல்ல தொடங்கினேன். அடுத்த 5 வது நிமிடம், ஓகே சுதா, இதை படமாக பண்ணலாம் என ஒப்புக் கொண்டார். இது தான் நடந்தது.

சிறந்த நடிகைக்கான விருது அபர்ணாவிற்கு கிடைத்த தருணம் எப்படி இருந்தது?

இந்த விருதுகளில் மிக பெரிய விருதாக நான் அதைத்தான் பார்க்கிறேன். ஒரு மிகப்பெரிய ஹீரோ உள்ள படத்தில், 150 படக்காட்சிகளில் வெறும் 25 காட்சிகளில் மட்டுமே வந்த அவரின் கதாபாத்திரம், அதற்காக அபர்ணவின் உழைப்பு இந்த விருதை பெற்றுத்தந்துள்ளது. அதேப்போல் நாங்கள் பெண்கள் 2 பேரும் இந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் எடுத்து திரைக்கதை எழுதினோம். எந்த இடத்திலும் பெண்களுக்குரிய கதாபாத்திரத்தை தவறாக திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

அதேப்போல் கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி, அவர்களின் நிஜவாழ்க்கையில்,10 வருடங்கள் அவருக்கு எந்த வருமானமும் இல்லாத போது, அவருடைய பேக்கரியில் இருந்து வந்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தியிருக்கிறார். அதனால் வரலாற்றில் என்ன நடந்ததோ அதை காட்சியாக வைத்தேன். அபர்ணாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

சூரரைப்போற்று படத்தில் கணவன் மனைவி இருவருமே ஜெயிப்பது போன்ற காட்சிகள் வரும் ? இதற்கு தூண்டுகோலாக இருந்தது எது?

நிச்சயமாக பார்கவி தான். அவரிடம் பலமுறை பேசிய போது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கேப்டன் கோபிநாத்தின் வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக இருந்தது அவரின் மனைவி பார்கவி தான். அதைத்தான் படத்தில் வைத்தேன்.

மாறா பொம்மியிடம் கடன் கேட்கும் காட்சி பலதரப்பை ஈர்த்தது? இதை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்த காட்சியை முதலில் வைக்கும் போது ஆண் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் பதறினார்கள். ஒரு பெரிய ஹீரோ இதை எப்படி செய்வார் ? இதை மாற்றிவிடலாம் என்று சொன்னார்கள். நிறைய குடும்பங்களில் ஆண்கள் மனைவியிடம் கடன் வாங்குவது நடந்து கொண்டு தானே இருக்கிறது ? அதை ஏன் காட்டக்கூடாது என்று சொன்னேன். சூர்யா ஒரு உண்மையான பெண்ணியவாதி. கதைக்கு தேவை என்றால் எந்த காட்சியிலும் நடிக்க தயார் என்று சொன்னதால் இயல்பாக நடக்கும் எந்த விஷயத்தையும் நான் அகற்றவில்லை.

ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நுழையும் போது என்ன தடைகளை எதிர்கொண்டீர்கள்?

நான் சினிமா துறைக்கு செல்வதில் முதல் எதிர்ப்பை தெரிவித்தது என் குடும்பத்தினர்.எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவரிடம் என்னுடைய ஆசையை சொன்ன போது அவர், உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று ஊக்கப்படுத்தினார்.

நான் முதன்முதலில் நடிகை ரேவதி அவர்களிடம் பணிபுரிந்தேன். எனக்கு 2 சிறிய குழந்தைகள் உள்ளனர் அதனால் இத்தனை மணி நேரம் தான் என்னால் வரமுடியும் என்று தயக்கத்துடன் கூறியதற்கு Quantity of Time ஐ விட Quality of Time மிகவும் முக்கியம் என்று சொன்னார். நான் அவரிடம் வேலைபார்த்த வரை பெண் என்பதில் எந்த சலுகையையும் அவரிடம் நான் பெறவில்லை. பிறகு மணிரத்தினம் அவர்களிடம் பணிபுரிந்தது எனக்கு வேறொரு அனுபவமாக இருந்தது. பல கடினமான கட்டங்களை தாண்டி தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.

உங்கள் முதல் படம் சரியாக வெற்றியடைவில்லை என்ற போதிலும் முதல் வெற்றிக்காக நீங்கள் 6 வருடங்கள் காத்திருந்தீர்கள். அந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

இறுதிச்சுற்று படத்தின் போது முதலில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. முதன்முதலில் நடிகர் மாதவன் அவர்களிடம் தான் கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்து போகவும் தான் அதில் நடிப்பதாக சொன்னார். அது மட்டும் தான் எனக்கு எளிதாக நடந்தது. மற்றது அனைத்தும் எனக்கு சிரமமாக தான் நடந்தது.

நீங்கள் கடந்து வந்த பாதை மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களாகிய நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலுக்குள் வரும் போதே தங்களுக்கான தடைகளை உடைத்து பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம். ஆண்கள் தங்களுடைய வேலையை நிருபிக்க 50 சதவீத உழைப்பை கொடுக்கும் ஒரு இடத்தில் பெண்கள் தங்களை நிருபிக்க 100 சதவீதத்தை உழைப்பை கொடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது. யார் என்ன சொன்னாலும் அது மறுக்க முடியாத உண்மை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: