You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரௌபதி 2: 'வரலாற்று' கதையை எடுப்பதில் சாதித்தாரா மோகன் ஜி?
2020ம் ஆண்டு வெளியான திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளிக்கிழமை வெளியானது. மோகன் ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நடராஜன் (நட்டி), சிராக் ஜானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவின் வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும் வீர வல்லாள மகாராஜாவான நட்ராஜின் (நட்டி) கருட படையில் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். இதற்கிடையில், வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதை எதிர்த்து போரிடும் நட்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் ரிச்சர்ட் ரிஷி முன்பு நட்ராஜின் ஆன்மா தோன்றி சில பொறுப்புகளை அளித்து மாயமாகி விடுகிறது.
அந்த பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் ரிச்சர்ட் ரிஷி ஈடுபட அவரது மனைவி திரௌபதியான ரக்ஷனா சிலரது சதி வேலையில் சிக்கி கணவரை பிரிகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.
'நடிகர்களுக்கு பாராட்டு'
இந்த படத்திற்கு பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
"தோற்றம், உடல் மொழி என வீரசிம்ம காடவராயராகவே ரிச்சர்ட் ரிஷி வாழ்ந்து இருக்கிறார். கதாபாத்திரத்துக்கான அவரது மெனக்கடல் தெரிகிறது. மகாராஜா கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்க்கும் நடிப்பால் கவரும் நட்டி நட்ராஜ், வசன உச்சரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அவரது முடிவு பதைபதைப்பை தருகிறது. வீரமிக்க பெண்ணாக ரக்ஷனா இந்துசூடன் மனதில் தங்குகிறார். அவரது வசன உச்சரிப்புக்கு பாராட்டலாம்." என தெரிவித்துள்ளது தினத்தந்தி.
திவி, தேவயானி சர்மா, வேலராமமூர்த்தி, பரணி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை என கூறியுள்ள தினத்தந்தி, பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துடன் ஒன்றச் செய்கிறது என தெரிவித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு பாராட்டுக்கு உரியது என தெரிவித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம். கலை வடிவமைப்புகள், உடை அலங்காரம் போன்றவற்றையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டு பாராட்டியுள்ளது. ஜிப்ரானின் இசையை சுட்டிக்காட்டியுள்ள அந்த விமர்சனம், பாடல்கள் புதுமையாகவும் தனித்துவமான ரசனையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று, ரிச்சர்ட் ரிஷி தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல், மன ரீதியாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகவும் நாயகி ரக்ஷனா காடவராயரின் மனைவியாகவும் அதேசமயம் ஆக்ரோஷமான பெண்ணாக மாறும் தருணத்தையும் நன்கு வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டியுள்ளது. நட்ராஜ், சிராக் ஜானியின் நடிப்பையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.
'தொடர்பே இல்லாத காட்சிகள்'
எனினும், இந்த ஊடகங்கள் படத்தின் குறைகளாக பலவற்றை சுட்டிக்காட்டியுள்ளது.
உதாரணமாக, சிராக் ஜானி, தினேஷ் லம்பாவின் கதாபாத்திரங்கள் இன்னும் "மிரட்டி இருக்கலாம்" என சுட்டிக்காட்டியுள்ளது தினத்தந்தி விமர்சனம். நீளமான காட்சிகளை குறைத்து இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஒரு காவியம் போன்று நீளமாக எடுக்கப்பட்டுள்ள திரௌபதி 2, ஒரு நாடகம் போன்றே உணரச் செய்வதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
அந்நாளிதழ் தன் விமர்சனத்தில், "தனித்தனி பகுதிகளாகவே படம் உள்ளது. கணவன் - மனைவி பிரிய வேண்டுமா? அதற்காக ஒரு சதி வேலை நடக்கிறது. போர் நடக்க வேண்டுமா? யாரோ ஒருவர் திட்டமிட்டு ஓர் அவமதிப்பை உருவாக்குகிறார். முன்பு நடந்தவற்றுடன் எவ்வித தொடர்புமே இன்றி சில மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த குறுக்குவழிகள் மேடை நாடகங்களில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால், திரைப்படங்களில் ஒரு தொடர்ச்சியான இணைப்பு இருக்க வேண்டும். அதை திரௌபதி 2 குறைவாகவே வழங்குகிறது," என தெரிவித்துள்ளது.
மேலும், படத்தில் மொழி ஒரு தடையாக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "கிட்டத்தட்ட படம் முழுக்க பழமையான தமிழில் பேசுகின்றனர். இரண்டரை மணிநேரத்திற்கு பழமையான தமிழில் பேசப்படும் வசனங்களை பின்தொடர்வதற்கு பொறுமை தேவை, அது எல்லோருக்கும் இருக்காது" என தெரிவித்துள்ளது.
கிராஃபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு சரியாக காட்டப்பட்டுள்ளதா?
அதேபோன்று, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான விமர்சனத்தில், படம் அதிகப்படியான தீவிரத்துடன், சோர்வை ஏற்படுத்தும் அளவுக்கு தொடர்ச்சியாக நகர்கிறது என்றும் முரணான விஷயங்கள் படத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்தியல் தூண்டுதலால் ஏற்பட்ட தவறான நகர்வில், இயக்குநர் மோகன் ஜி, வாய்ப்புகள் நிறைந்த ஒரு கதையைச் சரியாக கையாளத் தவறியுள்ளார் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், "இப்படம் முழுமையாக வீர சிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) முகம்மது பின் துக்ளக் ஆட்சியில் இருந்த தேவபுரி / தௌலதாபாத் கோட்டையை முற்றுகையிட்டு, ஹொய்சள மன்னர் வீர வல்லாளரின் (நட்டி) மகனை மீட்கும் கதையாக மட்டுமே இருந்திருந்தால், அது பல மடங்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
படத்தின் முதல் பாதியில், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று காட்சிகளுக்கு ஒருமுறை, ஜிஸ்யா (முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய பாதுகாப்பு வரி) அழுத்தம் காரணமாக இஸ்லாமுக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட மக்களின் துயரங்களை நாம் கேட்கிறோம் அல்லது பார்க்கிறோம்.
ஆனால், படத்தின் இரு பாதிகளிலும், கர்நாடகாவை ஒட்டிய வடக்கு மற்றும் வடமேற்கு தமிழ்நாடு பகுதிகளில், துக்ளக் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் எந்த ஒரு குறிப்பிட்ட கொடூரச் சம்பவத்தையும் காட்சிப்படுத்தியதாக இல்லை.
முகம்மது பின் துக்ளக் (சிராக் ஜானி) மற்றும் மதுரை சுல்தான் கியாஸுதீன் தம்கானி (தினேஷ் லம்பா) ஆகியோரை, பெண்கள் மீது அதீத பாலியல் வேட்கை கொண்டவர்கள், மாமிச உணவு விரும்பிகள் என்பதற்குள் மட்டுமே சுருக்கிக் காட்டுவது, சினிமா சுதந்திரமாக அல்லாமல், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தவும் வெறுப்பை தூண்டவும் பயன்படும் தீங்கிழைக்கும் கருவியாக தோன்றுகிறது." என தெரிவித்துள்ளது.
ரிச்சர்ட் ரிஷியின் கதாபாத்திர வடிவமைப்பும் அவ்வளவு சிறப்பாக இல்லை என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் தெரிவித்துள்ளது.
நாயகியின் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுள்ள அந்நாளிதழ், "குறுநில மன்னரின் மனைவியாக வரும் அவர் யார் சொன்னாலும் நம்பும் அளவுக்கு அப்பாவியாக ஏன் சித்தரிக்கப்படுகிறார்? விசுவாசம் மற்றும் துரோகம் போன்ற கருப்பொருள்களைக் கையாள்வதில் மோகன் ஜியின் நுட்பமின்மையை இவை பிரதிபலிக்கின்றன." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மதுரை மற்றும் டெல்லி சுல்தான்கள் ஒருவருக்கொருவர் எப்படி, ஏன் எதிர்த்தார்கள் என்பது பற்றிய மிகவும் தேவையான விவரங்களுக்குள் இப்படம் செல்லவில்லை. கர்நாடகாவை ஒட்டியுள்ள வடக்கு, வடமேற்கு தமிழ்நாட்டுப் பகுதியில் துக்ளக் ஆட்சி உண்மையில் என்ன மாதிரியான அட்டூழியங்களைச் செய்தது எனும் தகவல்கள் படத்தில் இல்லை. இந்த நுணுக்கங்களைத் தவிர்ப்பது, இஸ்லாமிய படையெடுப்பாளர்களுக்கு எதிரான நியாயமான எதிர்ப்பு என்ற போர்வையில் முஸ்லிம் வெறுப்பை எளிதாகப் பரப்ப உதவுவதாக உள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு