You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குருதி ஆட்டம் - திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: அதர்வா, ப்ரியா பவானி ஷங்கர், ராதாரவி, ராதிகா, கண்ணா ரவி; இசை: யுவன் சங்கர் ராஜா; இயக்கம்: ஸ்ரீ கணேஷ்
எட்டுத் தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் இது. இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
கபடி ஆட்டத்தில் தொடங்கும் பகை ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் கபடி ஆடுகிறது என்பதுதான் படத்தின் ஒன் லைன் என படத்தின் கதையை விவரிக்கிறது 'இந்து தமிழ் திசை'.
"அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் தாதா ராதிகா. தனது தாயின் ரௌடிசத்தை பயன்படுத்தி ஏரியாவில் கெத்து காட்டுகிறார் அவரது மகன் முத்துப்பாண்டி கண்ணா ரவி. அவரது 'வெட்டுப்புலி' கபடிக் குழுவுக்கும், அதர்வாவின் 'பாசப்பட்டாளம்' கபடி குழுவுக்குமான ஆட்டத்தில் 'வெட்டுப்புலி' அணி தோல்வியைத் தழுவ, அது மோதலாக வெடிக்கிறது.
இந்த மோதல் பழிவாங்கும் படலமாக உருப்பெற்று, அது எப்படி அதர்வாவின் வாழ்க்கையில் கபடி ஆடுகிறது என்பதையும், அந்த ஆட்டத்தில் சக்தி வென்றாரா? வீழ்ந்தாரா? என்பதையும் ஆக்ஷன் த்ரில்லராக சொல்ல முற்பட்ட படம்தான் 'குருதி ஆட்டம்'" என்கிறது அந்த விமர்சனம்.
'ஆறிப்போன தேநீர்'
சுறுசுறுப்பாக தொடங்கும் படம் ஒரு கட்டத்தில் ஆறிய தேநீராகிவிடுகிறது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறது 'இந்து தமிழ் திசை'.
"ஒரு பக்காவான ஆக்ஷன் த்ரில்லருக்கான ஒன்லைனை கையிலெடுத்திருக்கிறார் '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ். அப்படித்தான் படத்தின் முதல் பாதியையும் தொடங்கியிருக்கிறார்.
ராதிகாவின் மாஸ் இன்ட்ரோ, அதையொட்டிய கேங்க், ஜெயில் காட்சிகள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்ப ஸ்கெட்ச் நல்ல தொடக்கமாகவே இருந்தது. காதல் காட்சியை தவிர்த்து பார்த்தால் ஆவி பறக்கும் சூடான தேநீருக்கான பதம் கதையில் இழையோடியது. ஆனால், ஒரு கட்டத்தில் படம் ஹீரோயிசத்தை மட்டுமே நம்பி கதை நகரும்போது ஆறிப்போன தேநீராகி விடுகிறது".
இந்தப் படத்திற்கு பொதுவாக, நேர்மறையான விமர்சனத்தையே முன்வைத்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
"குருதி ஆட்டம் படத்தின் திரைக்கதையும் பாத்திரப் படைப்புகளும் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. பாத்திரங்களின் போக்கிலேயே கதை வெளிப்படுவதைப் போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
படம் தொடங்கி 15 நிமிடங்களுக்குள் பல பாத்திரங்கள் அறிமுகமாகிவிடுவதால், யார் யாருக்கு உறவு என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. பாத்திரங்கள் படத்தின் தொடக்கத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும், ஒவ்வொருவருடைய பின்னணியைத் தெரிந்துகொள்ளவும் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்றிருக்கும் அறிவு என்ற பாத்திரம், பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி ஏற்றிருந்த பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது. அவனால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது என அவனைச் சுற்றியிருப்பவர்கள் நினைப்பதே, அவனை மிகப் பெரிய குற்றங்களைச் செய்ய வைக்கிறது.
பெரும்பாலான ஆக்ஷன் திரைப்படங்கள், நட்பு, துரோகம், ஈகோ மோதல்களைச் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும். குருதி ஆட்டமும் விதிவிலக்கில்லை. இந்தப் படத்தில் எல்லாம் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருந்தாலும், க்ளைமாக்சிற்கு முந்தைய காட்சிகள், சற்று மெதுவாக நகர்வது ஒட்டுமொத்த திரைப்படத்தின் போக்கில் தொந்தரவாக அமைகிறது" என அந்த விமர்சனம் கூறுகிறது.
'இந்த பாணியை தவிர்த்திருக்கலாம்'
ஒரு விறுவிறுப்பான பழிவாங்கும் திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், நிறைய துணைக் கதைகள் இருப்பது அந்த அனுபவத்தைக் கெடுத்துவிட்டது என்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம்.
"149 நிமிடங்களுக்கு ஓடும் திரைப்படத்தில் ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்ல நினைப்பதுதான் குருதி ஆட்டத்தின் மிகப் பெரிய பிரச்னை. கதாநாயகனின் நட்பைப் பற்றி படத்தைக் கொண்டு செல்ல நினைக்கையில், காதல் வந்துவிடுகிறது. காதலில் கவனம் செலுத்த நினைக்கையில் சகோதரியின் கதையைச் சொல்கிறார். அதற்குப் பிறகு பழிவாங்கும் கதை. பிறகு குழந்தை மீதான பாசம் என மையம் மாறிக்கொண்டேயிருக்கிறது. குறுகிய காலத்தில் படத்தில் நிறைய நடந்து விடுகிறது.
மிகத் தீவிரமான ஒரு பழிவாங்கும் கதையோடு கூடிய திரைப்படத்தை உருவாக்குவதுதான் நோக்கமாக இருக்கலாம். ஆனால், நிறைய துணைக் கதைகள் அந்த அனுபவத்தைக் கெடுத்துவிட்டன. படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தோடும் கதாநாயகனுக்கு இருக்கும் உறவைச் சொல்ல மிகக் குறுகிய நேரமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதர்வாவுக்கு படத்தில் பல நல்ல காட்சிகள் இருக்கின்றன. அதில் அவர் மிளிர்கிறார். சேது பாத்திரத்தில் வரும் வத்ஸன் சக்கரவர்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ராதிகா மிக நன்றாக நடித்திருந்தாலும் அவருடைய பாத்திரம் அச்சில் வார்க்கப்பட்டதைப் போல இருக்கிறது. படத்தில் பல இடங்களில் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், நிறைய ஸ்லோ - மோஷன் காட்சிகளை பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்." என்கிறது தி இந்து நாளிதழ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்