You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்னியின் செல்வன் பட 'முதல் பாடல்' வெளியீடு - வரலாற்றுப் பின்னணி
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. வந்தியத் தேவன் சோழ நாட்டிற்குள் நுழையும் தருணத்தை விவரிக்கும் இந்தப் பாடல் உருவானது எப்படி?
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் பரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த படத்தின் ஸ்டில்கள், டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், முதல் பாடல் ஞாயிற்றுக் கிழமையன்று வெளியானது.
வந்தியத்தேவன் சோழநாட்டிற்குள் நுழையும் தருணத்தில், வீர நாராயணம் ஏரியைக் கடக்கும்போது, அந்த நாட்டின் வளமையை அதிசயித்துப் பார்ப்பான். அந்தத் தருணத்தை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாட்டை எழுதியிருப்பவர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.
"காவிரியாள் நீர் மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்
நீர்ச் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்
உளிச் சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும்
பகைச் சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும்
சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிற்கும்
பொன்னி நதி பார்க்கணுமேபொழுதுக்குள்ளே..." என்ற தொகையறாவுடன் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
வந்தியத்தேவனின் சோழ பிரவேசம்
பொன்னியின் செல்வன் நாவலின் முதல் அத்தியாயமான ஆடித் திருநாள் என்ற அத்தியாயம், வந்தியத்தேவன் சோழ நாட்டிற்குள் நுழைந்து, வீர நாராயண ஏரிக் கரையின் மீது செல்லும் காட்சியை விவரிக்கிறது.
"ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.
வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.
அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.
உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.
ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?
வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்?
வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா?
அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?" என்று அந்த விவரணை செல்லும்.
மேலும், வந்தியத்தேவன் மேற்கொண்டிருக்கும் ஒரு பணி குறித்த விவரணையும் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.
"வந்தியத்தேவா! நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
வரலாற்றை காட்சிப்படுத்திய பாடல் குழு
நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் ராஜ்ஜியத்தின் பெரிய, பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன்.
ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன்.
வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!".
சோழ நாட்டின் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தரசோழ சக்கரவர்த்திக்கும் சகோதரி குந்தவை தேவிக்கும் எழுதிய ஓலைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தான் வந்தியத்தேவன். அந்த ஓலைகளை வேறு யாரும் பார்த்துவிடக்கூடாது என்பது அவனுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. இந்தப் பின்னணியில்தான் அந்த முதல் காட்சியை உருவாக்கியிருந்தார் கல்கி.
அந்த அத்தியாயத்திலேயே, "வடவாறு பொங்கி வருது, வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது, வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே!" என்ற பாடலும் இருக்கிறது.
இருந்தபோதும், இந்தத் தருணத்தை சிறப்பாக விளக்கும் வகையில் புதிதாக பாடலை எழுது உருவாக்கியிருக்கிறது படக்குழு.
"இந்த நாவலில் கல்கி அங்காங்கே பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஆனால், படத்திற்கு கதையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். ஏனென்றால் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் பாடல்களை உருவாக்கலாம் என்று கருதப்பட்டது.
இந்த முதல் பாடலைப் பொறுத்தவரை, வழக்கமாக சினிமா பாடல்கள் உருவாக்கப்படுவதைப் போல உருவாக்கப்படவில்லை. வழக்கமாக முதலில் மெட்டமைத்து பாட்டெழுதுவார்கள் அல்லது பாட்டை எழுதிவிட்டு மெட்டமைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பொறுத்தவரை, ஒரு தாளக்கட்டுமானமும் பின்னணியும் கொடுக்கப்பட்டது. அதற்கு பாடலை எழுதினேன். அந்தப் பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டிற்கு ஏற்ற வகையில் பாடல் திருத்தப்பட்டது. இப்படித் தொடர்ந்து அந்தப் பாடலில் பணியாற்றினோம். முடிவில் பாடலுக்கான தொகையறா சேர்க்கப்பட்டது" என அந்தப் பாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி பிபிசியிடம் பேசினார் பாடலை எழுதிய இளங்கே கிருஷ்ணன்.
சோழ நாட்டு அழகில் மயங்கிய வந்தியத்தேவன்
பாடலின் உள்ளடக்கம் குறித்து எப்படி முடிவுசெய்தீர்கள் என்று கேட்டபோது, முதல் அத்தியாயத்தில் உள்ள விவரணைகள், வந்தியத்தேவனின் பயணத்தின் நோக்கம், அவனது மனநிலை ஆகியவற்றை மனதில் கொண்டு, அந்தப் பாடலை உருவாக்கியதாகக் கூறினார் இளங்கோ கிருஷ்ணன்.
வந்தியத்தேவனைப் பொறுத்தவரை, வட பகுதியிலேயே நாட்களைச் செலவழித்தவன். காவிரி பாயும் வளமிக்க சோழ நாட்டைப் பார்க்க வேண்டும், தஞ்சாவூரைப் பார்க்க வேண்டுமென்பது அவனது ஆவல். அதற்கான வாய்ப்பை பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனே உருவாக்கித் தருகிறான். அவனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு செல்லும் வந்தியத்தேவன், சோழ நாட்டிற்குள் நுழைந்ததும் அதன் அழகில் மயங்கி விடுகிறான். அங்கேயே தங்கிவிட நினைக்கிறான். ஆனால், அது நடக்காது என்பதும் புரிகிறது.
"இந்தப் பின்னணியில்தான் பாடலை உருவாக்கினோம். அதனால்தான் பொன்னி நதி பாக்கனுமே என்றும் பொழுத்துக்குள் போய்விட வேண்டும் என்றும் ஆரம்பித்தோம். அந்த நதியின் மடியிலேயே படுத்திருக்க வேண்டுமென நினைக்கிறான் வந்தியத்தேவன். ஆனால், அதற்கான காலம் கனியவில்லை. அதைத்தான், 'காலம் கனியாதோ, கால்களுக்கு ஓய்வு கிடைக்காதோ' என்ற வரியில் குறிப்பிட்டோம்" என்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியான இந்தப் பாடல் ஒரு நாளைக்குள்ளேயே 52 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்